முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குடையை மறந்திடாதீங்க மக்கா!

மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா? என்ற பாடலை கேட்டிராத தலைமுறை ஒன்று, இன்று போதை தரும் பொருட்களை நாடி ஓடிக்கொண்டிருக்கிறது. அது ஊடக பெருநுகர்வாக இருக்கட்டும், மருந்து பெருநுகர்வாக இருக்கட்டும் (substance abuse like pain killers, cough syrups), போதைப்பொருட்களாக இருக்கட்டும் (கஞ்சா, அபின், தூப்!), பாதை ஒன்றுதான் பயணமும் ஒன்றுதான், அது முடியும் புள்ளியும் ஒன்றுதான்... மொபைல் போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால் தற்கொலை, செல்போன் மீது ஆசைப்பட்டு கல்லூரி மாணவியை கொலை செய்வது, போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, பழக்கத்தை தொடர பணம் புரட்ட பாலியல் வன்முறை படமெடுத்து மிரட்டல், ஊடகங்களிலேயே மூழ்கிக்கிடப்பதை தட்டிக்கேட்டதால் தொங்குதல், வெட்டுதல் அல்லது வெட்டிக்கொள்ளுதல்...என முடிவற்று நீளும் துயரப்பட்டியல்... பல ஆண்டுகள் முன்பு Traffic என்கிற தரமான ஹாலிவுட் படம், அமெரிக்காவும் எஞ்சிய உலகமும் எப்படி மெக்சிக, கொலம்பிய போதை வஸ்துக்களால் சீரழிகிறது என முகத்திலடித்ததுபோல தெளிவாய் சொன்னாலும் உலக மக்களுக்கு இன்றுவரை எதுவும் உரைக்கவில்லை... கொலம்பிய போதைப்பெருச்சாளிகள் முதல் ஆப்கானிய க

க்ளாரிந்தா, பின்னே மோனா எஸ்தலீனா, இடையில் மங்கை பாட்டி

  க்ளாரிந்தா, பின்னே மோனா எஸ்தலீனா, இடையில் மங்கை பாட்டி... இளம்பருவம் தொட்டே என் உலகு நான் வியத்தகு பெண்களை அண்ணாந்து பார்த்து வியந்தவண்ணமும், சிலாகித்த வண்ணமுமாகவே இருந்துகொண்டிருக்கிறது. இவர்களில் சிலர் பற்றிய எனது எண்ணங்களை இங்கு பகிர்கிறேன். வாருங்கள் இவர்களை சற்று நெருங்கி கவனிக்கலாம்.  1700 களில் க்ளாரிந்தா! க்ளாவரிந்தா பாய், தஞ்சை ஆண்ட மராட்டிய அரசின் பணியாளரொருவரின் மனைவி. ப்ராமணப்பெண். அவரது கணவர் திடீரென இறந்தபோது க்ளாவரிந்தாவுக்கு பதினெந்தே வயது. உடன்கட்டையேறுதல் அன்றைய மரபு.  சிதைக்கு தீ மூட்டப்பட்டு, அத்தீயில் சமுதாயம் அவரைத்தள்ள, மனம் தவித்த லிட்டில்டன் என்ற ஆங்கில அதிகாரி குறுக்கிட்டு மீட்கிறார். உற்றமும் சுற்றமும் ஒதுக்குகிறது, உயிர்வாழ விருப்பம் கொண்ட குற்றத்திற்காக க்ளாவரிந்தாவை. லிட்டில்டனின் ஆதரவு, இருவர் மனதிலும் கனிந்த அன்பாகி, வாழத்தொடங்குகின்றனர். க்ளாவரிந்தாபாய், லிட்டில்டனின் க்ளாரிந்தாவாகிறார், ஞானஸ்னானம் மறுக்கப்பட்டாலும்! லிட்டில்டனுக்கு நெல்லைச்சீமைக்கு மாற்றலாகிறது. க்ளாரிந்தா சமேதராக அவர் நெல்லைக்கு குடிபெயர்கிறார்.  அங்குள்ள ஏழை மக்களுக்காகவும் பெண்களு

உடைந்து விழும் உயிர்க்கண்ணிகள்

கொலீசிய திறந்தவெளி மைதானத்தில் சிங்கங்கள், சமய கைதிகள், நீரோ மன்னன், காவலர்கள், ஏராளமாய் பார்வையாளர்கள் - பெரும்பாலும் ஏழைகள். மன்னன் கையசைக்க, சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட கைதிகளை நோக்கி சிங்கங்களின் கூண்டுகள் திறந்துவிடப்படுகின்றன. ஓலம், ஆர்ப்பரிப்பு, உறுமல், குருதி என அன்றைய விளையாட்டு விறுவிறுப்பாக நடக்கிறது. இன்று நம் (உலக மக்களின்) வாழ்வியல்கூட கொலீசிய சர்க்கஸ் போலத்தான். இந்த அரங்கில் உள்ள ஏதோ ஒன்றாகவே நாம் அனைவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... சிங்கமாகவோ, பிணைக்கப்பட்ட கைதியாகவோ, காவலராகவோ, பார்வையாளராகவோ, மன்னராகவோ... சிதைந்துகொண்டிருக்கும் ஒரு பேரரசின் அழிவுச்சத்தங்கள், உள்ளிருப்போரின் காதுகளில் விழாமலிருக்க, கவனத்தை வேறிடத்தில் திருப்பவே கொலீசிய சர்க்கஸ். டைனோசார்கள் திடீரென ஏன் அழிந்தன என இன்று வரை ஊகம் மட்டுமே செய்யமுடிந்த நவீன அறிவியல் விளக்கொளியில் உலக வணிகம் நம்மை இட்டுச்செல்லும் நுகர்வுப்பாதையின் இருள் விளிம்பில் கூட்டம் கூட்டமாய் சாவது இன்றைய உலகின் பேருயிர்களான யானைகளாக இருந்தால் என்ன? திமிங்கிலங்களாக இருந்தால் என்ன? சிட்டுக்குருவியாக இருந்தால் என்ன? சின்னஞ்சிறு தேன் பூ

இரவல் கனவுகளும் விவசாய மசோதாக்களும்

விவசாய மசோதாக்கள் மூன்று.  ஏன் விவசாயிகள் இதை ஏற்க மறுக்கிறார்கள்?  ஏன் அச்சப்படுகிறார்கள்? ஏனெனில் அவர்கள் கடந்துவந்த பாதைகள் அப்படி, பயணங்கள் அப்படி. நாம் ஏன் 'நமக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை' என இருக்கிறோம்? ஏனெனில் நாம் 'கண்டுகொண்டிருக்கும்' இரவல் கனவுகள் அப்படி. வரலாறு காணாத உணவுப்பஞ்சம் 1960களில். உணவுப்பயிர் உற்பத்தியை பெருக்க யுத்தகால நடவடிக்கைபோல அரசுகள் திட்டங்கள் தீட்டி பசுமைப்புரட்சி செய்து, சிறுதானிய உணவுசார்ந்த, அது தந்த வலிமை வாய்ந்த விவசாயிகளை பசுமைப்புரட்சியில் ஈடுபடுத்தவும், ஐம்பதே ஆண்டுகளில் நிலமும் பாழ், வளமையும் பாழ் என பசி, பிணி, மரணம் துரத்துது இவர்களை. வெண்மைப்புரட்சியும் சேர்ந்துகொள்ள, இன்று இந்திய உள்ளூர் ரக 'காளைகள்' எல்லாம் தம் திமிலை மறைத்து வேறு ஒரு பெயரில் தலைமறைவாக வாழும் நிலை. 'பால் பெருக்கி வணிகம் வளர்க்க வெளி விந்து ஊசிகள் போதும், உள்ளூர் காளைகள் வேண்டாம், நாங்கள்தான் டிராக்டரும், உரங்களும் தருகிறோமே!' என வணிக நோக்கு அரசியல். "உர மானியம், விதை மானியம், பயிர் மானியம் தருகிறோம்! வருடத்திற்கான மைய இலக்கு தருகிறோம்.

வேர்கள் எவ்விதமோ வாழ்வு அவ்விதமே!

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நோய்கள் தீர்க்க (மூலிகை) வேர்கள் உண்ட கூட்டம் நாம். சில நூறு வருட ஆங்கில மருத்துவம் தந்த வண்ணக்கரைசல்களும் களிம்புகளும் மாத்திரைகளும் நம்மை நலமுறச்செய்துகொண்டுதான் இருந்தன, ஐம்பது வருடங்கள் முன்பு வரை. மருத்துவம் பெருவணிகமாகி, உலகப்பெருவணிகமாக ஆகி, இன்று மருத்துவர்கள்கூட மாதாந்திர வணிக இலக்குகள் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் காலமிது. எந்த நோய்க்கும் மருத்துவ மூலக்கூறுகளை மட்டுமே ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதிப்பழகிய மருத்துவர்கள், வணிக கேரட்டுகளுக்காக குறிப்பிட்ட ப்ராண்ட் மருந்தை எழுதிப்பழகும் காலமிது. "பக்க விளைவுகள் ஏராளம். ஆனால் எந்த வியாதிக்காக என்னிடம் வந்தாயோ அந்த வியாதி சரியாப்போச்சா இல்லயா? சைட் எஃபக்டா கேன்சர்கூட வந்தாலும் வரலாம்தான். ஆனால் உனக்கு வரும்னு ஏன் பயப்படுற? நீ யூஸ் பண்ற பேஸ்ட்ல இல்லாத சைட் எஃபக்டா?!" என நவீன மருத்துவம் கேள்வி கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. ஏனெனில் நமக்கு இவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லை! அதனால்தான் இயற்கை அவ்வப்போது மகாமாரிகளை அனுப்பி நமக்கு பாடம் சொல்லித்தருகிறது!  கற்றுக்கொள்பவர்கள் மட்டும் பிழைத்திருப்போம். ஆதியிலி

யுத்தம்

இலங்கையில் இனவெறிக்கெதிரான யுத்தம் கொழுந்துவிட்டெரிந்த காலம். தலைமன்னாரிலிருந்து குடும்பம் குடும்பமாய் தமிழர்கள் கள்ளத்தோணி ஏறி, நடுக்கடலில் இலங்கை இந்திய கடற்காவல் கண்காணிப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளில் சிக்காது தப்பித்து, தனுஷ்கோடியிலோ வேதாரண்யத்திலோ கரையேறி, அகதிகள் முகாமிலோ அல்லாது கண்காணாது ஏதோ ஒரு ஊரிலோ தம் வாழ்வை நீட்டித்துக்கொள்ள முயன்ற காலமது. தலைமன்னாரில், தன் சேமிப்பு, இருப்பிடம் எல்லாவற்றையும் பணமாய் மாற்றி, கள்ளத்தோணிக்காரன் கேட்ட அநியாய தொகையை தந்து, கணேசன் அண்ணன் தன் (இரண்டு) வயது வந்த மகள்கள் + பதின்வயது மகனுடன் நள்ளிரவில் தோணியில் ஏறி, பயம் கலந்த எதிர்பார்ப்புடன் இந்தியாவுக்கு பயணம் தொடங்குகிறார். கடல் எல்லை அருகில், நடுக்கடலில், 'இதற்கு மேல போக இயலாது. துவக்கு கொண்டு சுடுறான் ரோந்துப்பொலிசு! தண்ணில குதியுங்கோ!' என தோணிக்காரன் இவர்களை கடலில் தள்ளி கை விட, இரு கைகளில் இரு மகள்கள், தோளில் நீச்சலறியாத மகன் என நீந்தத்தொடங்குகிறார் விடுதலை நோக்கி. மனித எத்தனத்தினால் முடிகிற செயலா இது? மூவரை ஒருவர் கொந்தளிக்கும் கடல்நீந்தி அழைத்துச்செல்வது? அவரது கை சோர, சகோதர

பசித்திரு, தனித்திரு, விழித்திரு, பிழைத்திரு!

இயற்கை வேளாண்மையும் இயற்கை மருத்துவமும். முன்னது ஆகும்.பின்னது ஆகாது! உலகம் முழுவதும் ஒரே உணவுப்பழக்கம் என்ற மேற்கின் கனவு நம் கண்முன்னே தகர்ந்து போய் கிடக்கிறது இன்று. உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் பல பயிர் பல்லுயிர் என நோயற்று வாழ்ந்த மக்களை வணிகப்பயிர்களுக்கு, ஒற்றைப்பயிர்களுக்கு மாற்றவைத்தது மேற்கின் பொருளாதார பலம். வருடத்தில் ஆறுமாதம் இயற்கை சூழல் ஒத்துழைக்காததால் முடங்கியிருந்த மேற்கு, வணிகக்காற்று உந்தித்தள்ள கடற்பயணம் தொடங்கியபோது எஞ்சிய உலகைப்பிடித்தது சனி! " பட்டும், மிளகும் கம்பளமும் ஆசியாவில் கிடைக்கிறதே! மேன்மையான குதிரைகள் அரேபியாவில் கிடைக்கிறதே! பொன்னும் வெள்ளியும் தென்னமெரிக்காவில் குவிந்து கிடக்கிறதே! விலையற்ற தொழிலாளர்கள் (அடிமைகள்!) செவ்விந்திய, மேற்கிந்திய, இந்திய, ஆப்பிரிக்க நிலப்பரப்பில் ஏராளமாய் இருக்கின்றனரே! கோகோ மெக்சிகோவில் செழித்து வளர்கிறதே! " என கப்பல்கள் நூற்றாண்டுகளாய் கரை தொட்டு நங்கூரமிட, இறங்கிய வணிகக்கூட்டம் சுரண்ட முடிந்தவரை அள்ளிச்சென்றபின், அந்த நிலங்களையும் தன் வணிக நீட்சிக்காய் அந்த நிலங்களிலிருந்த பல்லுயிர் சுழற்சியை உடைத்தழித்து

காலக்குமிழ்

இன்றின் கரைகளில்  நேற்றின் அலைகள் ஒருபோதும் மோதுவதில்லை காலங்களினூடாய் பயணம் செய்பவன் நினைவின் கரைகளில் தங்கிப்போவதுமில்லை குமிழ், இன்றின் குமிழ் நுரை, இன்றின் நுரை அலை, இன்றின் அலை கடல், இன்றின் கடல் கரை, இன்றின் கரை நேற்றை கடந்த பயணி மட்டும் நேற்றின் பயணி என்பது எங்கணம்? அலையாடி அலைமோதி அலைதாவி அலைபாய்ந்து தொடரும் குமிழின் பயணம் பயணியின் பயணம் போலவே. பயணி வேறு குமிழ் வேறா? அதுவாய் இதுவாய் ஏதோவொன்றாய் நொடியில் நிறம் மாறும் ஏதோவொன்றின் சிறு மிடறு நம் பயணம். வண்ண பேதங்களில் மயங்கி களித்து தெளிந்து வெளுத்து காலத்தின் அடர்த்தியில் கரையும் குமிழில் அன்பை அடைத்தது எது? குமிழ்கள் என்றும் வெளியிலிருந்து உடைபடுவதில்லை... (அன்பு) தளும்பும்வரை  வண்ணம் காட்டி  வண்ணம் கூட்டி உள்ளன்பு வற்றி  வெற்றிடமாகையில் உள்ளுடைந்து  இருப்பழிந்து முடியுது  குமிழின் பயணம். அன்பினால் உந்தப்பட்டு அன்போடு மோதிக்கொள்ளும் குமிழ்கள் உடைந்ததாய் வரலாற்றிலில்லை,  அறிவியலிலில்லை,  வாழ்வியலிலுமில்லை.

பூமி தொடா பிள்ளைப்பாதம்

புவியின் பேராற்றலும் பெருங்கருணையும் ஒருங்கே வெளிப்படும் தருணம், விதையொன்று தன்முயற்சியில் ஓடுடைத்து புவியோட்டையும் உடைத்து சூரிய தரிசனம் பெறும் அந்த ஒற்றை நொடி. உயர்ந்தோங்கி தழைத்து செழித்து உயிர்வளர்த்து உயிர்பெருக்கும் வாழ்நாளின் நொடியெலாம் தொப்புள்கொடி உறவு (மண்ணோடு) தொடர்வதால்தான் இது இங்கு இப்படி ஆயிற்று. மனிதர் நாம் மரங்களிடமிருந்து கற்றுக்கொள்ள, இருக்கிறது ஏராளம்! தாயின் தொப்புள்கொடி அறுத்த நொடியில், நம் பாதம் புவி பதிந்தால் தப்பிப்போம், விலங்குகள் பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் போல (நீரில் பிறக்கும் உயிரினங்கள் கூட பிறந்த நொடியிலிருந்தே நீரோடு உறவாடத்தொடங்கும்!) பூமி தொடா பிள்ளைப்பாதம், My foot!

உதிர்ந்த நட்சத்திரங்கள்

  தென்னமெரிக்க பசிபிக் பெருங்கடல் தீவொன்றில் மரமொன்றை வெட்ட முடிவு செய்தால், அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மரத்தை சுற்றி நின்று வசைபாடுவார்களாம். துயரம் தாளாது மரம் இறந்துபோகுமாம். அதன் பின் பயன்படுத்துவார்களாம். தாரே சமீன் பர் படத்தில் அமீர் கான் ஆசிரியர், டிஸ்லெக்சியா பாதித்த மாணவனின் பெற்றோருக்கு சொல்வார் இந்த கதையை. இன்று ஓரு சமுதாயமே தம் அடித்தட்டு மாணவர்களை மையத்தில் நிறுத்தி 'உன்னால முடியாது தம்பீ, முடியாது தங்கச்சீ! ஏன்னா நீங்க பள்ளத்தில நின்னு படிக்கறீங்க, அவங்க எல்லாரும் மேட்டுல நின்னு படிக்கறாங்க!' என 24*7 அவர்களை பல்வேறு ஊடகங்கள்வழி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறோம்.  கதையில் மரம் தற்கொலை செய்கிறது. நிசத்தில் நம் தம்பிகளும், தங்கைகளும்... பொங்கி வெடிக்கிறோம், ஆவேசக்குரல் எழுப்புகிறோம், சபதங்கள் செய்கிறோம், எதிர்க்கிறோம், ஆதரிக்கிறோம்...ஆனால் இந்த தம்பி தங்கைகளை கரையேற்ற யார் முயல்வது? மேடு பள்ளங்களை யார் சமன் செய்வது? அரசுதான் செய்யவேண்டும் என்பது இத்துப்போன வாதம், நாமும்தானே அரசு? மக்களால், மக்களுக்காக...! யாராவது ஏதாவது செய்வாங்க என்று எல்லோருமே மணலில் தலைபுதைந்த நெ

வயல்வெளியில் பாரதி!

பின் 70, முன் (19)80 களில் விவிதபாரதியும், இலங்கை தமிழ் வானொலி நிலையமும் எங்கள் காற்றில் கனவுகள் விதைத்த காலம். நாங்கள் வெயிலோடு விளையாடி மழையோடு மகிழ்ந்தாடி இருளின் பேய்களுக்கும் கொள்ளிவாய் பிசாசுகளுக்கும் பயந்து என எந்த உணர்வுகளோடு வீடு நுழைந்தாலும் எங்கள் கவனத்தை நொடியில் தன்பால் ஈர்த்துக்கொண்டதென்னவோ இ.த.வா.நிலையம்தான். இப்படி ஒரு மகத்தான சாதாரண நாளில் 'சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே?' 'சுராங்கனி, சுராங்கனி' 'கலைமகள் கைப்பொருளே உன்னை ரட்சிக்க ஆளில்லையா' 'பாட்டும் நானே பாவமும் நானே' 'மச்சான பாத்தீங்களா' 'இன்று பிறந்தநாள் காணும் மட்டகளப்பு தங்கராசுவுக்கு அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, சிற்றப்பா, பெரியப்பா, பெரியம்மா, அம்மம்மாவின் பிறந்தநாள் வாழ்த்துகள்' என கதம்பதான ஒலிக்குதிரைகள் எங்களை நோக்கி இல்லங்களின் ஜன்னல்களில் இருந்தெல்லாம் தாவிக்குதித்து பிடறி சிலிர்ப்பி ஓடி வருகையில் திடீரென என் பிடரி மயிரைப்பிடித்து இழுத்தது ஒரு பாட்டு! 'வயல் வெளியில் பாரதி' என்ற பொப்பிசை ஆல்பத்திலிருந்து ஒரு பாடல் இதோ உங்களுக்காக என ஏ.எஸ் ராஜா கரகர குரல

மதமாற்றத்துக்கு தயாராகுங்கள்!

  Breaking News! "புதியதொரு மதமாற்றத்திற்கு தயாராகிறது உலகு"!!!!!!! கரெக்டாதான் படிச்சீங்க டைட்டில, வாங்க போஸ்ட்டுக்குள்ள போகலாம் :-) புத்தம்புதிய மதம், உலகெங்கும்: 1. ஒன்றே இறை. அது தன் மூக்கு மேல் இட்டிருக்கும் உறை. 2. அதன் நெற்றியில், கழுத்தில், தலையில், கைகளில், கால்களில் அடையாளச்சின்னங்கள் எதுவும் இல்லை. 3. அதன் வாகனம், ஒன்றே ஒன்றுதான்; ஆம்புலன்ஸ். தன்னாலாகாவிட்டாலும் மருத்துவர் மெய்வருத்தக்கூலி தரும் என இந்த வாகனம். 4. இந்த மத ஆர்வலர்கள், உறுப்பினர்கள், பின்தொடர்வோர்... அனைவரும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் முக உறை அணிந்திருக்கவேண்டும். இதனால் இறைபணி எளிதாகிறது என்பதால். 5. முழுக்க முழுக்க தொழில்நுட்ப கட்டமைப்புகளால் ஆன இம்மதத்தில் சமூக இடைவெளி போன்ற அடிப்படை மத சேவைகள் தொழில்நுட்பம்கொண்டு செயல்படுத்தப்படும். 6. பொது வழிபாட்டிடங்கள் வேண்டாமென்று இந்த இறை விளித்தாலும் மக்கள் கேட்கப்போவதில்லை என்பதால் 'தொற்று ஒழிப்பு தீர்த்தம்' அவ்விடங்களுக்கு வரும் அனைவருக்கும் இறை வழிபாட்டின் முன்னும் பின்னும் இலவசமாக தரப்படும். பயன்படுத்துவோர் மட்டுமே மதத்தில் பற்றுடன்

அது

  மழை வேறு நதிவேறு கடல் வேறு பால் வேறு தயிர் வேறு வெண்'ணெய் வேறு ஒன்று பலதாகி பலது ஒன்றாகி ... ஒன்று பலதாகி நீயாகி நானாகி நான் வேறு நீ வேறாகி நீநான் ஒன்றாகி இன்னொன்றாகி நான் பற்றற்ற 'ஒன்றா' பற்றுள்ள பழுதா? கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் அல்ல அல்ல! கண்டதும் அதுவும் விண்டதும் அதுவே அண்டமும் அதுவே அணுவும் அதுவே அதுவும் அதுவே எதுவும் அதுவே!

நல்ல கவிதை ஒன்று நமைச்சூழட்டும்!

முன்னாள் காதலி, திருமணமாகி வெளிநாடு போய், பள்ளி ரீ-யூனியனுக்காக திரும்ப வருகிறாள். இன்னாளிலும் (திருமணம் மறுத்து) அவளை தனியே காதலிக்கும் அவன்.  சந்திப்பில் கண்ணிய எல்லைகளுள் இருவரும் அன்பு தளும்ப ஒரு இரவில் காற்றில் சிறகுகள் போல அலைந்து, விடியலில் அவளை விமான நிலையத்தில் விட்டு விடைபெறக்கிளம்பிய குறும்பயணத்தில் குமுறி வெளிப்படுகிறது மௌனமாய் ஒரு பாடல். இந்தப்பாடலுள் இவர்களது உணர்வுகளின் அலைமோதலை அடைக்கமுடியுமா? ஒரு நல்ல கவிதை நெய்ய முடியுமா? ஆன்மாவின் தறியில் உணர்வு இழைகளால் நெய்து தந்திருக்கிறார் பேராசிரியர் உமா தேவி. இவர்களது உணர்வில் ஊறிய காதலை, நம் செம்மொழியில் ஊறிய சொற்களால் அழகியல் ததும்பும் கற்பனையோடு இவர் கவிதையாய் வடித்திருக்கிறார். உணர்ந்து படிப்பவர்க்கு அமுதம் இதுவே! வாருங்கள் கவிதைக்குள் நுழைவோம்: -----+----- இரவிங்கு தீவாய் நமை சூழுதே விடியலும் இருளாய் வருதே - காதல் விடைபெறும் விடியலும் இருளாய்தானே வரும்! நினைவுகள் தீயாய் அலை மோதுதே - தீ எடையற்றது, நினைவுகளின் தீயோ கனமானது, கடல்போன்றது, அதனால்தான் அலை மோதுகிறது, இடையறாது! உடலிங்கு சாவை அழுதே - உச்ச உணர்வுக்குவியல் காதலில் தோ

சகாரா ஆடுகளும் சரஸ்வதி நதியும்!

ஆடு புல் மேய்ந்ததால் காணாமல் போன சரஸ்வதி நதி! இன்றிலிருந்து ஏறக்குறைய 4000-5000 ஆண்டுகள் முன் வரை ஆப்பிரிக்க சகாரா பாலைநிலம், ஒரு பசுமை கொஞ்சும் பெருநிலப்பரப்பாக இருந்திருக்கிறது. ஏதோ ஒரு நிகழ்வினால்* சகாரா கொஞ்சம் கொஞ்சமாக பசுமை இழக்கத்தொடங்குகிறது. தாவர வளர்ச்சி குறையக்குறைய நிலம் வறண்டு போகிறது. வறண்ட நிலத்தை காற்று வருட, கிளம்பிய புழுதிக்காற்று நிலப்பரப்பை மறைக்க, புவி வெப்பம் அப்பகுதியில் குறையத்தொடங்குகிறது, இந்தியப்பெருங்கடலும் குளிர்கிறது. மழைக்கு வேண்டிய வெப்பச்சூழல் குறைந்ததால், மழைப்பொழிவு மெள்ள மெள்ள குறையத்தொடங்குகிறது. சகாராவிலிருந்நு இந்தியப்பெருங்கடல் வரை மழை பொழிந்த நிலப்பரப்பும் வறண்டுபோகிறது. சகாரா பசுமைநிலம் பாலைவனமாகிறது, சிந்து சமவெளி நாகரிகம் தேய்ந்து மறைகிறது, சரஸ்வதி ஆற்றைப்போல! ஆற்றங்கரைச்சமவெளிகளிலிருந்து மனித சமுதாயம் உணவு தேடி, வாழ்வியல் சூழல் தேடி கிழக்கே தென் கிழக்கே என நிலநடுக்கோட்டுப்பரப்பில் புலம் பெயர்ந்து பர்மா, தாய்லாந்து என பரவுகிறது.  மாதம் மும்மாரி மழை, ஆண்டு முழுவதும் ஆற்று நீர் என்ற நிலை மாறிப்போனதால், நிலைத்த நீடித்த உணவுப்பாதுகாப்புக்கு என வி

வல்லான் வகுத்ததே வாய்க்கால்!

  சரியா தவறா? இந்தியாவிலேயே மேன்மையான சாலைகளை கொண்ட மாநிலமாக தமிழகம் ஒளிர்கிறது. சாலை விபத்துகளிலும் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் மிளிர்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இரண்டு சாதனைகளையும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. "இரண்டு சாதனைகள்? முதலாவதுதானே சாதனையாக முடியும். இரண்டாவது எப்படி?" என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், படிப்பதை தொடருங்கள் :-) TVS Apache - Racing DNA Unleashed Honda CBR150R - Taste First Blood Bajaj Pulsar - Definitely Male போன்ற போதையேற்றும் விளம்பரங்கள் கண்டு மயங்கி நம் நாட்டின் இளவட்டங்கள் கந்துவட்டியில் பைக் வாங்கி நம் சாலைகளில் 'வேகப்போட்டி' நடத்தி ஐ.சி.யு வில், 'U C Me!' என குடும்பத்தினரை அழைத்து காயங்களை காட்டிக்கொண்டு படுத்துக்கிடக்க, பக்கத்து படுக்கைகளிலோ அல்லது மார்ச்சுவரிகளிலோ இவர்களது பைக்குகளால் தாக்கப்பட்டோரும் படுத்துக்கிடக்க... "சாலை விதிகளை மதிப்போம்! வேகம் தவிர்ப்போம்! விபத்துகளை குறைப்போம்" என்ற அனுதின செய்திகளை, அரசுகளின் விழிப்புணர்வு அறிவிப்புகளை, தடுப்பு நடவடிக்கைகளை....என்னவென்று சொல்வது? நாடு முழுவதும் தினக்க

துயரத்தின் நிறம் - இன்று மஞ்சள்!

 மஞ்சள் - மங்களகரம், லஷ்மி கடாட்சம் மஞ்சள் - செழுமை, வளமை, இனிமை மஞ்சள் - அழகு மஞ்சள் - கவசம் ... மஞ்சள் - துயரம்! காந்தமால் - நம் ஒரிசாவில் மலைவளம் மிகுந்த செழுமையான பகுதி. காடுகள் மரங்கள் சூழ்ந்த பகுதி, அவற்றை அழித்து விளை நிலங்களாக்கி, பல ஆண்டுகள் கழித்து தங்க முட்டையிடும் வாத்து ஒன்றை அங்குள்ள மக்கள் கண்டுபிடித்தனர். "பொன்னிற மஞ்சள்! மணமும் சுவையும் ஆஹா! ஓஹோ!' என உள்ளூர், வெளியூர், பன்னாட்டு வணிகம் வரிசையில் நிற்க, தங்க முட்டை பரபரவென விற்றது, விலையும் எகிறியது. 2019 இல் புவி சார் குறியீடும் கிடைத்தது, மதுரை மல்லி போல காந்தமால் மஞ்சள். பரபரவென விவசாயிகள் அனைவரும் சென்ற ஆண்டு ஏப்ரலில் மஞ்சள் நட்டனர், அரை ஏக்கர் முதல் பல நூறு ஏக்கர் வரை.  டிசம்பரில் அறுவடை. விளைச்சல் அமோகம். ஜனவரி, பிப்ரவரியில் மஞ்சளை வேகவைத்து, அவித்து, உலர்த்தி... மார்ச்சில் சந்தைக்கு தயார். மகாமாரி முதலில் வந்ததால் வணிகர்களும் தரகர்களும் காந்தமாலை சீண்டக்கூட இல்லை! ஏப்ரல் மேயிலும் யாரும் வரவில்லை. விவசாயிகள், தம்மை துரத்தும் தேவைகளை நிறைவேற்ற அவசரமாய் சந்தை தேடி சரக்கோடு போனால், "கிலோ 30 ரூபாய். சரிய