Breaking News!
"புதியதொரு மதமாற்றத்திற்கு தயாராகிறது உலகு"!!!!!!!
கரெக்டாதான் படிச்சீங்க டைட்டில, வாங்க போஸ்ட்டுக்குள்ள போகலாம் :-)
புத்தம்புதிய மதம், உலகெங்கும்:
1. ஒன்றே இறை. அது தன் மூக்கு மேல் இட்டிருக்கும் உறை.
2. அதன் நெற்றியில், கழுத்தில், தலையில், கைகளில், கால்களில் அடையாளச்சின்னங்கள் எதுவும் இல்லை.
3. அதன் வாகனம், ஒன்றே ஒன்றுதான்; ஆம்புலன்ஸ். தன்னாலாகாவிட்டாலும் மருத்துவர் மெய்வருத்தக்கூலி தரும் என இந்த வாகனம்.
4. இந்த மத ஆர்வலர்கள், உறுப்பினர்கள், பின்தொடர்வோர்... அனைவரும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் முக உறை அணிந்திருக்கவேண்டும். இதனால் இறைபணி எளிதாகிறது என்பதால்.
5. முழுக்க முழுக்க தொழில்நுட்ப கட்டமைப்புகளால் ஆன இம்மதத்தில் சமூக இடைவெளி போன்ற அடிப்படை மத சேவைகள் தொழில்நுட்பம்கொண்டு செயல்படுத்தப்படும்.
6. பொது வழிபாட்டிடங்கள் வேண்டாமென்று இந்த இறை விளித்தாலும் மக்கள் கேட்கப்போவதில்லை என்பதால் 'தொற்று ஒழிப்பு தீர்த்தம்' அவ்விடங்களுக்கு வரும் அனைவருக்கும் இறை வழிபாட்டின் முன்னும் பின்னும் இலவசமாக தரப்படும். பயன்படுத்துவோர் மட்டுமே மதத்தில் பற்றுடன் இருப்பர். ஏனையோர் பற்றற்ற பராபரத்துடன் அதிவிரைவில் இணைவர்!
7. மத அன்பர்களை நெறிப்படுத்த இந்த மதமும் சில சமுதாய கட்டமைப்புகளை உருவாக்கும். இதன் தலைமைப்பொறுப்பு வகிப்பவர் மாஸ்க்காண்டவர் என அழைக்கப்படுவார். 'கவச'ப்பாடல்களை மதமே இயற்றி அன்பர்களுக்கு வழங்கும். பிறை நாள், பிறையற்ற நாள் என்ற கணக்குகள் இன்றி எல்லோரும் எந்நாளும் இந்த கவசங்களை பயன்படுத்தி நலமுடன் வாழலாம்.
....
'நிறுத்து நிறுத்து நிறுத்தேய்!
என்னா ஓவரா பில்டப்பு? என்னமோ நீதான் ப்ரேக்கிங் நியூஸ் தர்ற மாதிரி!!! இந்த மதம் ஆரம்பிச்சி ஒம்பது மாசம் ஆகிப்போச்சுபா! பய புள்ளைக யாரையும் யாரும் கேன்வாஸ் பண்ணாதயே அல்லாரும் இந்த மதத்துக்கு மாறிகிணு கீறாங்கோ! அங்க பாரு எம்மாம்பெரிய க்யூவு! நீயும் போய் நிப்பியா!!!!'
...
ஐயையோ, நெசந்தான்! நானும் மதம் மாறப்போறேன், இப்பவே!
(பகுத்தறிதலுக்கும் விதண்டாவாதத்துக்கும் உள்ள இடைவெளி புரிந்தவர் இப்பதிவில் உள்ள நகைச்சுவையை ரசிக்கலாம்.இப்பதிவில் அரசியல் இல்லை, மனிதநேயம் மட்டுமே இருக்கிறது. அதனால கம்பு சுத்தாம படிச்சி பகிருங்க மக்கா!)
பின் குறிப்பு:
Flash News'!!!!!!
"மாஸ்க்காண்டவரும் எங்க ஆளுதான்!" என பழைய மதங்கள் அனைத்தும் "இறை உரிமை மீறல் பன்னாட்டு நீதிமன்ற"த்தில் உரிமைப்பத்திரம் தாக்கல் செய்திருக்கின்றன :-)
கருத்துகள்
கருத்துரையிடுக