விழலுக்கு இறைத்த நீர்...
என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது. பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்...
விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர்.
நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும்.
இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!).
இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின.
இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன.
நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'.
இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழலுக்கும் சேர்த்தே நீர் இறைத்தனர்!
களையென்று நாம் நினைப்பது கோடானுகோடி உயிரினங்களின் உணவாகவும் உறையுள்ளாகவும் இருப்பதை உணர்ந்தவர்கள், 'இந்த களைகளை உண்டு நம் பயிருக்கு உரமாக்கும் இந்த உயிரினங்கள், களைகள் இல்லையேல் நம் பயிரையே தின்று தீர்க்கும்' என்ற தீர்க்க அறிவு கொண்ட கூட்டம் அது. களை செழிக்க பயிர் செழிக்கும். இதுவே உண்மை!
வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடியவர் நம் உணவுப்பயிர் வாடியதால்தான் வாடினார் என்று... நம்புகிறீர்களா இன்னும்?!
நாளை, மற்றொரு நாள், நம் கண்ணுக்குத்தெரியாத ஏதோ ஒரு உயிரினத்தின் பார்வையில் நாம் களையாகத்தெரியலாம்; அந்த உயிரினங்கள் நமைவிட வலிமை வாய்ந்தவையாக இருக்கலாம்.
அவை நமக்கு ஒருபோதும் ரவுண்ட் அப் (உயிர்க்கொல்லி) அடிக்காது!!
நாளை என்ன, நேற்றும் இன்றும் இதுவே இயற்கை நியதி. யானைகளுக்கும், சிங்கங்களுக்கும், பாக்டீரியாக்களுக்கும், வைரஸ்களுக்கும் இல்லாத வலிமையா நமக்கு இருக்கிறது?
வலியவன் வாழ்வான் என்று சொன்னவனை முட்டாளென இயற்கை தினம் தினம் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது.
கவனிக்கத்தான் நமக்கு நேரம் இல்லை...
கருத்துகள்
கருத்துரையிடுக