குளிரூட்டும் சாதனங்கள் விற்பனையகம் ஒன்றிற்கு சென்றிருந்தோம்.
இன்முகத்துடன் எங்களை வரவேற்றவர் ஒரு இளைஞர். ஒரு குறிப்பிட்ட சாதனம் பற்றிய எங்களது கேள்விகளுக்கெல்லாம் தெளிவாக நிதானமாக விளக்கம் கொடுத்தார். விலை மட்டும் நாங்கள் எதிர்பார்த்த விலையில் இல்லை என்றார். 'சரி, தொலைபேசி எண் கொடுங்கள். நாளை மீண்டும் வருகிறோம். வரும்போது அழைக்கிறோம்' என்றோம். அவரும் ஒரு எண்ணை தந்தார். அது அவருடையதா அல்லது கடை மேலாளருடையதா என்று கேட்டோம். 'நான்தான் மேலாளர். இது அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டும் எனது எண். அதற்கு பிறகு அழைத்தாலும் கடையில் பணியாளர்கள் யாராவது பேசுவார்கள்' என்றார். 'அது என்ன மூணு நாள் கணக்கு?' என்றோம். அதற்கு அவரது விடையை அப்படியே இங்கே பதிவு செய்கிறேன்:
'நான் வேலைய ரிசைன் பண்ணிட்டேன் சார். இன்னும் மூணு நாளுதான் இங்கே. அதன் பிறகு இந்த ஊர்லயே ஒரு ஐ.டி கோர்ஸ்ல சேர்ந்து ஆறு மாசத்தில coding கத்துகிட்டாகணும் சார். இல்லேன்னா கல்யாணமே ஆவாது சார்!'
"சின்ன வயசாதான் தெரியறீங்க, நல்ல வேலைலயும் இருக்கீங்க. இருந்துமா பொண்ணு கிடைக்கல?"
'உங்களுக்கு தெரியாது சார்! இங்கல்லாம் ஐ.டி கம்பெனி மாப்பிள்ளதான் கேக்குறாங்க சார். எனக்கும் முப்பத்து நாலு வயசாவுது. ராகுவும் கேதுவும் நம்ம கட்டத்தில மட்டும் கெட்டியா உக்காந்திருக்காங்க சார். எனக்குன்னு வந்து வாச்சிருக்கு சார்!'
"இது புதுசா இருக்கே! இந்த வருசம் ஐ.டி கம்பெனி எல்லாம் தாறு மாறா மார்க்கெட்ல அடி வாங்கிகிட்டிருக்கு. வேலை நிரந்தரமில்ல, எப்ப வேணா தூக்கிடுவாங்கன்னு பொண்ணுங்க எல்லாம் ஐ.டி மாப்ளயே வேணாங்கிறாங்கன்னு கேள்விப்பட்டோமே?!"
'அதெல்லாம் சும்மா சார். பத்தாயிரம் சம்பளம்னாலும் ஐ.டில வேலை பாக்கணும். அதும் சென்னைல இருக்கணும்னு கண்டிஷன் போடுறாங்க சார். என் தம்பி வேற லவ் ஸ்டேட்டஸ்ல இருக்காப்ல. ஒரு வருசத்துக்குள்ள மரியாதையா கல்யாணம் முடிச்சிருன்னு மெரட்டறாப்ல. அதான் பல ஆயிரம் கட்டி இங்க உள்ளூர்லயே ஒரு கோர்ஸ்ல சேர்றேன். படிச்சு முடிச்சதும் அவங்களே ஙேலையும் வாங்கி தந்திடுவாங்க... அப்புறம் பொண்ணு கிடைச்சிடும். அதான் ரிசைன் பண்ணிட்டேன்' என்றார் தெளிவாக.
வீடு திரும்பும்போது உள்ளூரில் இருக்கும் அண்ணனிடம் இதைப்பற்றி பேசினேன்; 'ஒனக்கு தெரியாது பாபு. பொண்ணுங்க போடற கண்டிஷன் எல்லாம் பயங்கரம். எழுதி வச்சிக்க, இன்னும் கொஞ்ச நாள்ல இந்த பொண்ணுங்க யாருக்கும் பையனே கெடைக்கப்போறதில்ல!' என்றார்.
நிசமாகும்போலதான் தெரிகிறது!
பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்
கருத்துரையிடுக