மன்னன் கையசைக்க, சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட கைதிகளை நோக்கி சிங்கங்களின் கூண்டுகள் திறந்துவிடப்படுகின்றன.
ஓலம், ஆர்ப்பரிப்பு, உறுமல், குருதி என அன்றைய விளையாட்டு விறுவிறுப்பாக நடக்கிறது.
இது நடந்தது 2000 ஆண்டுகளுக்கு முன்பு. அங்கிருந்து நகர்ந்து நிகழ்காலத்திற்கு வருவோம்.
இன்று நம் (உலக மக்களின்) வாழ்வியல்கூட கொலீசிய சர்க்கஸ் போலத்தான். இந்த அரங்கில் உள்ள ஏதோ ஒன்றாகவே நாம் அனைவரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்... சிங்கமாகவோ, பிணைக்கப்பட்ட கைதியாகவோ, காவலராகவோ, பார்வையாளராகவோ, மன்னராகவோ...
சிதைந்துகொண்டிருக்கும் ஒரு பேரரசின் அழிவுச்சத்தங்கள், உள்ளிருப்போரின் காதுகளில் விழாமலிருக்க, கவனத்தை வேறிடத்தில் திருப்பவே கொலீசிய சர்க்கஸ்.
டைனோசார்கள் திடீரென ஏன் அழிந்தன என இன்று வரை ஊகம் மட்டுமே செய்யமுடிந்த நவீன அறிவியல் விளக்கொளியில் உலக வணிகம் நம்மை இட்டுச்செல்லும் நுகர்வுப்பாதையின் இருள் விளிம்பில் கூட்டம் கூட்டமாய் சாவது இன்றைய உலகின் பேருயிர்களான யானைகளாக இருந்தால் என்ன? திமிங்கிலங்களாக இருந்தால் என்ன? சிட்டுக்குருவியாக இருந்தால் என்ன? சின்னஞ்சிறு தேன் பூச்சியாக இருந்தால் என்ன?
அவர்கள் நாம் அல்லவே! பெரு நுகர்வின் போதை நம்மை சிந்திக்க விடமாட்டேன் என்கிறதே!
நவீன அறிவியல், பழைய உலகை நுணுக்கமாய் ஆராய்ந்து நமக்கு சொன்னது இதுதான்:
இந்த உலகு பல 'கால நிலைகளை' (Eons and Ages) தாண்டி வந்திருக்கிறது. இத்தனை நிலைகளிலும் இல்லாத அளவுக்கு, மனித முயற்சியில் ஆன ஒரு கால நிலை, Anthropocene என அழைக்கப்படுவது. இந்த நிலை நாம் நம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கத்தினால் குறிக்கப்படுவது, மற்ற எல்லா கால நிலைகளையும் விட துரிதமாய் முடிக்கப்போகிறோம், மடியப்போகிறோம் என்பதே. 18 ஆம் நூற்றாண்டின் இயந்திரப்புரட்சி இதற்கு வித்திட்டதாக ஒரு கணக்கும் உண்டு.
சரி, ரோமப்பேரரசுக்கு வருவோம். நீரோ மன்னன் வாழ்ந்த காலத்திலேயே பேரரசின் சரிவு நிகழ்ந்துகொண்டிருந்தது. அவன் மறைந்த பிற்பாடு சில பல ஆண்டுகளில் முற்றிலும் சிதைந்தே போனது.
பேரரசு சிதைந்துபோன காலத்தில் கொலீசிய சர்க்கஸ், சிங்கங்கள், கைதிகள், பார்வையாளர்கள், மன்னர்கள் என பல வேடந்தாங்கியிருந்த நாம் (மக்கள்) என்ன செய்தோம்?
அடுத்த ஐநூறு ஆண்டுகளுக்கு விவசாயம் செய்தோம். விவசாயம் மட்டுமே செய்தோம்.
என்ன ஆனது அதனால்?
பல்லுயிர் வாழ்வு நிலை பெற்றது, இளைப்பாறியது, உணவு பெருக்கியது, ஓய்வெடுத்தது, சிந்தித்தது, கற்பனை செய்தது, கலை வளர்த்தது, வணிகம் வளர்த்தது, Renaissance என்கிற 'ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்திற்கு' வித்திட்டது!
அன்று ரோமப்பேரரசு அழிந்தபோது மாநுடத்தை காத்த வேளாண்மை, இன்றும் காத்திருக்குது, உலகமயமான பெருவணிக பேரரசின் இறுதிப்பொறிகள் காற்றில் அணைவதற்காய்.
கொரோனா பற்றவைத்த பெருநெருப்பு, இன்னும் பலகாலம் புகையும், பின்பு தணியும். புகை மண்டலம் விலகி நம் பார்வை தெளிவடைகையில் நாம் காணும் காட்சி வேளாண்மையாகத்தான் இருக்கும்.
அதுவரையில் நம் வாழ்வை இதுவரை தாங்கியிருந்த இன்றியமையாத கண்ணிகளான யானைகளும் திமிங்கிலங்களும் சிட்டுக்குருவிகளும் தேனீக்களும் இன்னபிற உயிரினங்களும் தொடர்ந்து நம்மோடு வாழ வேண்டுமென்று ஒரு சிறு வேண்டுதலாவது நாம் செய்வோமே!
ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒளித்துவைக்கப்பட்ட அரக்க உயிர் பற்றி நம் கதைகளில் படித்திருப்போம். நமது உயிரைக்கூட பல வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகளின் உயிரில்தான் ஒளித்துவைத்திருக்குது இயற்கை...
இந்த உண்மையை உணர்ந்தவர் உறக்கச்சொல்வோம், "வேளாண்மை வணிகமல்ல; வாழ்வியல்"!
பேரன்புடன்,
பாபுஜி
Picture credit:
Elephants - Business Insider web article
Whales, கொலீசியம் - Wikimedia Commons
Bees - environmentamerica.org
Nero - Brittanica.com
கருத்துகள்
கருத்துரையிடுக