முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யுத்தம்

இலங்கையில் இனவெறிக்கெதிரான யுத்தம் கொழுந்துவிட்டெரிந்த காலம்.

தலைமன்னாரிலிருந்து குடும்பம் குடும்பமாய் தமிழர்கள் கள்ளத்தோணி ஏறி, நடுக்கடலில் இலங்கை இந்திய கடற்காவல் கண்காணிப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளில் சிக்காது தப்பித்து, தனுஷ்கோடியிலோ வேதாரண்யத்திலோ கரையேறி, அகதிகள் முகாமிலோ அல்லாது கண்காணாது ஏதோ ஒரு ஊரிலோ தம் வாழ்வை நீட்டித்துக்கொள்ள முயன்ற காலமது.

தலைமன்னாரில், தன் சேமிப்பு, இருப்பிடம் எல்லாவற்றையும் பணமாய் மாற்றி, கள்ளத்தோணிக்காரன் கேட்ட அநியாய தொகையை தந்து, கணேசன் அண்ணன் தன் (இரண்டு) வயது வந்த மகள்கள் + பதின்வயது மகனுடன் நள்ளிரவில் தோணியில் ஏறி, பயம் கலந்த எதிர்பார்ப்புடன் இந்தியாவுக்கு பயணம் தொடங்குகிறார்.

கடல் எல்லை அருகில், நடுக்கடலில், 'இதற்கு மேல போக இயலாது. துவக்கு கொண்டு சுடுறான் ரோந்துப்பொலிசு! தண்ணில குதியுங்கோ!' என தோணிக்காரன் இவர்களை கடலில் தள்ளி கை விட, இரு கைகளில் இரு மகள்கள், தோளில் நீச்சலறியாத மகன் என நீந்தத்தொடங்குகிறார் விடுதலை நோக்கி.

மனித எத்தனத்தினால் முடிகிற செயலா இது? மூவரை ஒருவர் கொந்தளிக்கும் கடல்நீந்தி அழைத்துச்செல்வது?

அவரது கை சோர, சகோதரிகள் இருவரும் மன்றாடுகின்றனர், 'அப்பா, நாங்கள் நீந்தி பிழச்சிக்குவம். தம்பி பாவமப்பா, அவன பத்திரமா கரை சேருங்கோ! எங்கட கவலை நாங்க பாத்துக்கிறம்'...

மகள்களை பற்றியிருந்த கரங்களை விட்டு, தோளில் சுமந்த மகனுடன் நீந்தத்தொடங்குகிறார் கணசன் அண்ணன்.

சுறா மீன்களும. கண்காணிப்பு படைகளும் நிறைந்த நீர்ப்பரப்பில் பல மைல் தூரம் நீந்திக்களைத்து... கரை கண்ணுக்கு தெரிந்ததும் எஞ்சிய ஆற்றலனைத்தையும் திரட்டி, மகனை ஓரு கையில் இறுகப்பிடித்துக்கொண்டு கரை நோக்கி நீந்துகிறார் கணேசன் அண்ணன்.

இருள் பிரியாத விடிகாலையில் கரை தட்டி மண்ணில் புரண்டு எழுந்தால், எழுந்திரிக்கவில்லை மகன்...

எப்போது இறந்தான் எனத்தெரியாத பேரதிர்ச்சியில் உடைந்து கதறிய அவரது குரல் மானுடத்தின் தீராத வலியாக இன்றும் இந்துமாக்கடலில் அலைவீசிக்கொண்டிருக்கிறது.

மண்டபம் அகதிகள் முகாமில் எவரோடும் பேசாமல், மகள்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியாமல் நடைபிணமாய் வாழ்ந்து வந்த கணேசன் அண்ணனை ஒரு வார இதழ் நிருபர்கள் சந்திந்து, சுற்றியிருந்தவர்கள் கூறிய அவரது கதையை அடுத்த இதழில் பதிந்தபோது படித்தவர் அனைவரின் ஆன்மாவிலும் வலி தந்த பெருந்துயரம் அது.

கணேசன் அண்ணனின் கதையை இங்கு பகிரும்போதும் அவரது வலி என்னுள் அழுத்தமாய் இருக்கிறது.


யுத்தம் பற்றிய நமது புரிதல், பெரும்பாலும் நம் காவியங்கள் வழியே படித்து, கற்பனை செய்து உணர்ந்த அளவிலேயே இருக்கிறது. அதன்பின்னான ஊடக வடிவியல் அழகில் யுத்தங்களும் நமக்கு பிரமிப்பை மட்டுமே அளித்தன; எத்தனை எத்தனை வியூகங்கள், எத்தனை எத்தனை படை பலம், ரதங்கள், குதிரைகள், யானைகள், அஸ்திரங்கள், நாயகர்கள், தீயவர்கள், கடவுள்கள் என.

யுத்தத்தின் குருதி தோய்ந்த நொடிகளின் வலியை கணேசன் அண்ணன் உணர்ந்ததுபோல நாம் உணராமலே இருப்பதற்கான தலையாய காரணமும. இதுவே!

நம் இரு பெருங்காவியங்களுள் ஒன்றான மகாபாரதம் நமக்கு யுத்தம் குறித்து என்ன சொல்கிறது?

தர்மத்தை நிலை நாட்ட கடவுளே முன்மொழிந்த அவசியமான செயல்தான் யுத்தம், எதிர்ப்படையில் இருப்பவர் அனைவருமே குருதி உறவு என்றாலும்!

யுத்தம் பதினெட்டு நாட்களில் முடிந்த ஒரு சிறு நிகழ்வு. அதன் முன்னும் பின்னும் நீண்ட வாழ்வியல் சிக்கல்களை பிணைக்கும் ஓரு நிகழ்வு. அவ்வளவே.

இவற்றை ஆங்கிலத்தில் Mainstream Romanticism என்பார்கள்; (தமிழில் இதனை எப்படி பெயர்ப்பது எனத்தெரியாது ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளேன்). பெரும்பான்மையான மக்களுக்காக, சமுதாய சுதந்திரங்கள் நிறைய உள்ளவர்களால் அவர்களது கோணத்தில் எழுதப்பட்ட versions.

இந்த version இல், மகாபாரத்தின் யுத்த களத்தில், யுத்தத்தின் தொடக்கப்புள்ளி, அருச்சுனனின் தயக்கம், தன் உறவுகளே எதிர்திசையில் நிற்கையில் எப்படி அவர்கள் மீது அஸ்திரங்களை ஏவுவது என்ற குழப்பம்.

கண்ணன் கீதையுரைக்க யுத்தம் தொடங்குகிறது.

பதினெட்டு நாள் யுத்தத்தில் நீதி வெல்கிறது. அநீதி அழிக்கப்படுகிறது.

இந்த version ஐ படிப்பவர் எவருக்கும், கணேசன் அண்ணன் மீது யுத்தம் சுமத்திய வாழ்நாள் வலி, உணரக்கூடிய வலியாக இல்லாது கடந்துபோகக்கூடிய ஒரு நிகழ்வு மட்டுமே.


வேறொரு version இல் இந்த நிகழ்வு எவ்வாறு நிகழ்ந்ததாக எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா?


யுத்தம்தான் தீர்வு என கண்ணன் சொல்லியும் மனம் அமைதியடையாத அருச்சுனன், யுதிஷ்டிரனிடம் முறையிடுகிறான்.

பெரியவனுக்கும் இளவலின் எண்ணவோட்டம் சரியெனப்பட, யுத்தத்தை நிறுத்த கௌரவர்களுடன் பேசிப்பார்க்கிறான், மன்றாடுகிறான். யாரும் கேட்பதாயில்லை.

துரியோதனனின் தம்பி ஒருவன், ஒரே ஒருவன் மட்டும், பாண்டவரின் யுத்த தவிர்ப்பு முயற்சியை ஆதரிக்க, இந்த ஒரே காரணத்திற்காக மற்ற கௌரவ சகோதரர்கள் அவனைத்தாக்க, பாண்டவர்கள் அவனை காக்க முற்பட, யுத்தம் தொடங்குகிறது.


பதினெட்டு நெடிய நாட்கள், குருதியும் நிணமும் நித்தம் வழிய, குற்றுயிரும் குலையுயுருமாய் ஓலமிடுபவர் ஒருபுறம், இறந்தவர் உறவுகளின் இடையறாத ஓலம் மறுபுறம் என வானெங்கும் வேதனை தெறிக்க, பதினெட்டாம் நாள்...

பதினெட்டாம் நாள் யுத்தம் முடிந்து, முடிவுக்கு வந்த பின், தனியே நிற்கிறான் துரியோதனன்.

உற்றம் சுற்றம் அனைத்தும் சிந்திய குருதி, யுத்த களத்தில் ஆறாக ஓடுகிறது. 

சடலங்கள் மிதக்கும் குருதியாற்றக கடக்க முனைகிறான்...

கையற்ற, காலற்ற, தலையற்ற, குடல் பிய்ந்த, என யுத்தத்தின் கோரமனைத்தும் அவனைச்சுற்றி மிதக்க, குருதி வெள்ளம் வேகமாய் உயர, நீந்தத்தொடங்குகிறான் தன் உறவுகளின் குருதியில்.

தலைக்குமேலே குருதி வெள்ளம். கையில் உரசியபடி மிதந்த ஏதோ ஒன்றை இறுகப்பற்றிக்கொண்டு நீந்துகிறான், நிணவாடை பொறுக்காது மூச்சிழுக்கவும் முடியாது...

தட்டுத்தடுமாறி மேட்டு நிலம் சேர்ந்தபின், கண்களில் அப்பியிருந்த குருதியை வழித்தெடுத்து, தான் எதைப்பற்றிக்கொண்டு தப்பித்தோம் என நோக்குகிறான். அது ஒரு சின்னாபின்னமாக வெட்டுப்பட்ட சடலம். அவனது ஆருயிர் மகன் லக்‌ஷ்மணகுமாரனின் சடலம்!


சமஸ்க்ருதம் அல்லாத வேற்று மொழிகளுள் எழுதப்பட்ட மகாபாரதக்கதையின் மிகப்பழமையான version, ஒரிய மொழி பேசும் பழங்குடியினரிடமிருந்து சொல்வடிவில் திரட்டப்பட்டு, பின்னர் ஒரிய மொழியிலேயே எழுத்தாக்கம் செய்யப்பட்ட சரள மகாபாரதம்தான் (Sarala Mahabarata) இந்த version. பொது சனங்களின் version.

இந்த version ஐ படிப்பவர்க்குள் இது கடத்தும் யுத்தம் பற்றிய புரிந்துணர்வு, mainstream versions எவையும் தராத, தர இயலாத புரிந்துணர்வு...

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டது வ்யாச பாரதத்தை விட மிக நீண்ட இந்தக்காவியம்.

நீங்கள் இப்பதிவை படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்கூட, யாராவது மற்ற இந்திய மொழிகளில் இதை மொழி பெயர்த்துக்கொண்டிருக்கலாம். காத்திருப்போம்!


(Photo credits: Top photo - From a news article in Srilanka Guardian.


Middle photo - From an article in The Hindu News paper.


Bottom photo - From an article in India Today Magazine) 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்