க்ளாரிந்தா, பின்னே மோனா எஸ்தலீனா, இடையில் மங்கை பாட்டி...
இளம்பருவம் தொட்டே என் உலகு நான் வியத்தகு பெண்களை அண்ணாந்து பார்த்து வியந்தவண்ணமும், சிலாகித்த வண்ணமுமாகவே இருந்துகொண்டிருக்கிறது.
இவர்களில் சிலர் பற்றிய எனது எண்ணங்களை இங்கு பகிர்கிறேன். வாருங்கள் இவர்களை சற்று நெருங்கி கவனிக்கலாம்.
1700 களில் க்ளாரிந்தா!
க்ளாவரிந்தா பாய், தஞ்சை ஆண்ட மராட்டிய அரசின் பணியாளரொருவரின் மனைவி. ப்ராமணப்பெண்.
அவரது கணவர் திடீரென இறந்தபோது க்ளாவரிந்தாவுக்கு பதினெந்தே வயது.
உடன்கட்டையேறுதல் அன்றைய மரபு.
சிதைக்கு தீ மூட்டப்பட்டு, அத்தீயில் சமுதாயம் அவரைத்தள்ள, மனம் தவித்த லிட்டில்டன் என்ற ஆங்கில அதிகாரி குறுக்கிட்டு மீட்கிறார்.
உற்றமும் சுற்றமும் ஒதுக்குகிறது, உயிர்வாழ விருப்பம் கொண்ட குற்றத்திற்காக க்ளாவரிந்தாவை.
லிட்டில்டனின் ஆதரவு, இருவர் மனதிலும் கனிந்த அன்பாகி, வாழத்தொடங்குகின்றனர். க்ளாவரிந்தாபாய், லிட்டில்டனின் க்ளாரிந்தாவாகிறார், ஞானஸ்னானம் மறுக்கப்பட்டாலும்!
லிட்டில்டனுக்கு நெல்லைச்சீமைக்கு மாற்றலாகிறது. க்ளாரிந்தா சமேதராக அவர் நெல்லைக்கு குடிபெயர்கிறார்.
அங்குள்ள ஏழை மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் வாழ்வாதார முன்னேற்ற நிகழ்வுகளை தொடங்கி நடத்துகிறார், சொந்த செலவில் கல்விக்கூடம், கிரிஸ்தவ வழிபாட்டிடம் (Clarinda Church), நல்ல தண்ணீர்க்கிணறு என.
பாப்பாத்தி கிணறு, இன்றுவரையில் அவரது வாழ்வின் சாட்சியாய், இன்றும் குப்பைக்கிணறாய் நெல்லையில் இருக்கிறது.
1940 களில் மங்கை பாட்டி!
அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் இன்றைய வங்கநகர் கிராமமும் வலிவலம் கிராமமும் இவரது வாழ்வின் களங்கள். காதலாகி கசிந்துருகி. விரும்பியவரின் கரம் பற்றத்துடித்த இவரை கிராமமே கூடிநின்று தடுத்தது, கட்டுப்பாடுகள் விதித்தது, காவல் இருந்தது.
ஒரு மழைநாள் நள்ளிரவு முடிந்து விடியல் தொடங்கும் புள்ளியில், இருள் பிரியாத பொழுதில், தன் 'மனத்'துணையுடன், வேட்டி சட்டை உடுத்தி மீசை வரைந்து தலையில் முண்டாசு சுற்றி, பாரவண்டியில் ஆண்கள் கூட்டத்தின் இடையில் தன் காதலன் தோள் உரசல் தந்த நம்பிக்கையில்... ஊர்கண்ணில் மண்தூவி எல்லை தாண்டினார் மங்கை பாட்டி!
அன்றைய ஆண்கள், அன்றைய பெண்கள்... அன்றைய காதல்... சங்க காலத்தின் நீட்சியாய் மனதால் வரித்த நேர்மையான துணையோடு மட்டுமே வாழ்வேன் என உறுதி கொண்டது. அவ்விதமே வாழ்ந்தது. இன்றும் வாழ்கிறது. மங்கை என்பது மங்கை பாட்டியின் பேத்தி பெயர் :-)
சிறப்பான வாழ்வு, கணவர், குழந்தைகள் குடும்பம் என... கணவரது மறைவுக்குப்பின் இன்றும் தம் குடும்பத்தோடு திடமாய் வாழ்கிறார் இந்த எண்பதாண்டு தாண்டிய மங்கைப்பாட்டி!
1930 களின் எஸ்தலீனா மோனா!
இலங்கையின் ஒரு தேயிலைத்தோட்ட முதலாளியின் செல்ல மகள். ஆள், அம்பு, வீடு வாசல் காடு கழநி என அற்புத வாழ்வு.
அன்றைய தஞ்சை மாவட்டத்தின் இன்றைய ஆலங்குடியில் மண்ணோடு மண்ணாய் உருண்டு புரண்ட கருப்பையா, பஞ்சம் பிழைக்க கப்பலேறி மோனாவின் தேயிலைத்தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்தபோது அவருக்கு வயது பத்தொன்பது.
வாட்டசாட்டமாய் வளையவந்த கருப்பையாவின் மீது மையலாகிறார் மோனா.
பயில்வான் என சக தொழிலாளர்களால் நேசிக்கப்பட்ட கருப்பையாவும் மோனா மீது மையலாகிறார்.
தேயிலைத்தோட்டம் வளர்த்த இவர்களது காதலை மோனாவின் குடும்பம் இவர்கள் கிள்ளிச்சென்ற தேயிலை வாசத்திலேயே கண்டுகொண்டு தம் ஆள் அம்பு சேனையனைத்தையும் பயில்வான் மீது ஏவிவிட... ஏராளமான உடல்காயங்களுடன், தொடையில் துப்பாக்கி சூட்டு வலியுடன் கருப்பையா எப்படித்தான் மோனாவை பத்திரமாய் தன்னோடு காப்பாற்றி கப்பலேற்றி தஞ்சைக்கரை சேர்த்தார் என்பது இன்றுவரை அவர்கள் தம் குடும்பத்திற்குகூட பகிராத அந்தரங்க காதல் பொக்கிஷம்!
தோட்ட வேலையில் முதுதாய் ஈடுபட்டு, நம் நாட்டில் பல ஊர்களில் பயிரையும் காதலையும் சேர்த்து வளர்த்து, அறுபது ஆண்டுகள் முன் மேற்குத்தொடர்ச்சி மலை கிராமமொன்றை தம் சொந்த ஊராக்கிக்கொண்டு இன்றுவரை பயிர் வளர்த்து வாழ்ந்துவரும் இந்த சோடிக்கு இன்று அந்த சிற்றூரில் முன்னூறு நானூறு சொந்தங்கள்!
பயில்வானின் பேரப்பிள்ளைகள் இருவர் முதல் முதலாய் இந்த சொர்க பூமியை விட்டு மேற்படிப்பு, வேலை, வாழ்வு என வெளியேறி இன்று பெரு நகரமொன்றில் விளையாட்டு, உடற்பயிற்சி ஆசிரியர்களாய் பணி செய்கின்றனர்.
சாவின் மடியிலிருந்தும், சாவின் பிடியிலிருந்தும் தப்பித்து இவர்கள் வாழ்ந்த காதல்கள், வளர்த்த காதல்கள் ஒவ்வொன்றும் இப்படித்தான் என் வாழ்வின் பெருங்காவியங்களாகிப்போகின!
காதலும் ஒரு ஊடக நீட்சியாக மாறிப்போன இன்றைய நுகர்வுலகிலும், டைவர்ஸ் கோர்ட்டுகளில் அலைமோதும் கூட்டங்களின் விளிம்புகளிலும், இன்றும் பல க்ளாரிந்தாக்கள், மங்கை பாட்டிகள், மோனாக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நம் தினங்களில் பூக்கள் மலர்வதும், வண்ணப்பூச்சிகளின் வண்ணங்கள் குறையாமலிருப்பதும் இவர்களால்தான் என நான் உறுதியாக நம்புகிறேன். இதே காரணங்களுக்காகவே, தினம் தினம் பெண்கள் தினமே என்றும் எண்ணுகிறேன் :-)
மங்கை பாட்டியும் மோனாவும் எஸ்தலீனாவும் இதற்கு மேலும் அவர்களது வாழ்வு பற்றி நான் பகிர அனுமதி அளிக்கவில்லை. ஆனால் மாதவையா அப்படி இல்லை. கிளாரிந்தாவின் கதையை நம் உலகிற்கு ஒரு புதினம் வழியே விட்டுச்சென்றுள்ளார். ஆர்வமுள்ளவர்கள் Clarinda விலிருந்து தொடங்கலாம்!
கருத்துகள்
கருத்துரையிடுக