தென்னமெரிக்க பசிபிக் பெருங்கடல் தீவொன்றில் மரமொன்றை வெட்ட முடிவு செய்தால், அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மரத்தை சுற்றி நின்று வசைபாடுவார்களாம். துயரம் தாளாது மரம் இறந்துபோகுமாம். அதன் பின் பயன்படுத்துவார்களாம்.
தாரே சமீன் பர் படத்தில் அமீர் கான் ஆசிரியர், டிஸ்லெக்சியா பாதித்த மாணவனின் பெற்றோருக்கு சொல்வார் இந்த கதையை.
இன்று ஓரு சமுதாயமே தம் அடித்தட்டு மாணவர்களை மையத்தில் நிறுத்தி 'உன்னால முடியாது தம்பீ, முடியாது தங்கச்சீ! ஏன்னா நீங்க பள்ளத்தில நின்னு படிக்கறீங்க, அவங்க எல்லாரும் மேட்டுல நின்னு படிக்கறாங்க!' என 24*7 அவர்களை பல்வேறு ஊடகங்கள்வழி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறோம்.
கதையில் மரம் தற்கொலை செய்கிறது. நிசத்தில் நம் தம்பிகளும், தங்கைகளும்...
பொங்கி வெடிக்கிறோம், ஆவேசக்குரல் எழுப்புகிறோம், சபதங்கள் செய்கிறோம், எதிர்க்கிறோம், ஆதரிக்கிறோம்...ஆனால் இந்த தம்பி தங்கைகளை கரையேற்ற யார் முயல்வது? மேடு பள்ளங்களை யார் சமன் செய்வது?
அரசுதான் செய்யவேண்டும் என்பது இத்துப்போன வாதம், நாமும்தானே அரசு? மக்களால், மக்களுக்காக...!
யாராவது ஏதாவது செய்வாங்க என்று எல்லோருமே மணலில் தலைபுதைந்த நெருப்புக்கோழிகள் போல வாழ்கையில் ஏன் இந்த நிலைப்பாடற்ற பொங்கல்?
1. உடனடி தேவை, அரசு பள்ளிகளில் பயின்று நீட் எழுத விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் அரசே இலவசமாக தனியார்தரத்தில் கோச்சிங் தருவது. இங்கு பயின்று வெற்றி பெற்று மருத்துவராகும் மாணவச்செல்வங்களை 'பிணை' முறையில் குறிப்பிட்ட காலத்திற்கு அரசு மருத்துவ சேவையில் ஈடுபடுத்துவது.
2. மத்யமர் போன்ற தளங்களும், தனி நபர்களும்கூட, சேவை மனப்பான்மையில் மாணவர்க்கு கற்றுத்தர எந்த குழு முன்வந்நாலும் நிதியுதவி செய்து ஊக்குவிப்பது. Super 30 போன்ற நல்மனிதர்கள் இங்கும் இருக்கிறார்கள்!
3. நீண்டகாலத்தேவை, சமச்சீர் கல்வியை அரசியலின் பிடியிலிருந்து விலக்கி தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக இயங்கவைப்பது. எல்லோர்க்கும் சமமான அடிப்படை கல்வி என வரையறுத்து, கல்வி நிறுவனங்களின் தரத்தையும் நெறிப்படுத்துவது.
இயன்றதை செய்வோம் என நாம் இறங்கினால்தான் துயரங்கள் குறையும்.
'இல்லைங்க, எங்களுக்கு பொங்கல் பொதுங்க. அதுவே திருப்தி. இன்னும் கொஞ்ச நாள்ல வேறேதாவது பொங்கல் வைப்போம் அப்டியே பொழப்ப ஓட்டிடுவம்' என்கிற நிலைப்பாடு யாருக்கும் உதவாது.
ஊர்கூடி இழுக்கவேண்டிய தேர் இது...
கருத்துகள்
கருத்துரையிடுக