ஆடு புல் மேய்ந்ததால் காணாமல் போன சரஸ்வதி நதி!
இன்றிலிருந்து ஏறக்குறைய 4000-5000 ஆண்டுகள் முன் வரை ஆப்பிரிக்க சகாரா பாலைநிலம், ஒரு பசுமை கொஞ்சும் பெருநிலப்பரப்பாக இருந்திருக்கிறது.
ஏதோ ஒரு நிகழ்வினால்* சகாரா கொஞ்சம் கொஞ்சமாக பசுமை இழக்கத்தொடங்குகிறது. தாவர வளர்ச்சி குறையக்குறைய நிலம் வறண்டு போகிறது.
வறண்ட நிலத்தை காற்று வருட, கிளம்பிய புழுதிக்காற்று நிலப்பரப்பை மறைக்க, புவி வெப்பம் அப்பகுதியில் குறையத்தொடங்குகிறது, இந்தியப்பெருங்கடலும் குளிர்கிறது.
மழைக்கு வேண்டிய வெப்பச்சூழல் குறைந்ததால், மழைப்பொழிவு மெள்ள மெள்ள குறையத்தொடங்குகிறது.
சகாராவிலிருந்நு இந்தியப்பெருங்கடல் வரை மழை பொழிந்த நிலப்பரப்பும் வறண்டுபோகிறது. சகாரா பசுமைநிலம் பாலைவனமாகிறது, சிந்து சமவெளி நாகரிகம் தேய்ந்து மறைகிறது, சரஸ்வதி ஆற்றைப்போல!
ஆற்றங்கரைச்சமவெளிகளிலிருந்து மனித சமுதாயம் உணவு தேடி, வாழ்வியல் சூழல் தேடி கிழக்கே தென் கிழக்கே என நிலநடுக்கோட்டுப்பரப்பில் புலம் பெயர்ந்து பர்மா, தாய்லாந்து என பரவுகிறது.
மாதம் மும்மாரி மழை, ஆண்டு முழுவதும் ஆற்று நீர் என்ற நிலை மாறிப்போனதால், நிலைத்த நீடித்த உணவுப்பாதுகாப்புக்கு என விவசாயத்திற்கான முதல் விதை இந்நிலப்பரப்பில் விழுகிறது! இங்கிருந்த "வேட்டையாடி உண்ணும்" சமூகங்களும் விவசாயம் சார்ந்த வீடுசார் சமூகங்களாக மாறுகின்றன.
*சகாரா ஏன் பாலை நிலமாயிற்று என்ற புதிருக்கு அறிவியல் இதுவரை கண்டுபிடித்திருக்கும் தடயங்கள் இவை:
1. பூமி சூரியனை சுற்றும் நீள்வட்டப்பாதை 40,000-50,000 ஆண்டுகளுக்கொரு முறை, வட்டப்பாதையாக மாறும். அடுத்த 40,000-50,000 ஆண்டுகளில் மீண்டும் நீளும். இதனால் சூரியக்கதிர்வீச்சின் அளவு மாறத்தொடங்குகிறது, தட்பவெப்பநிலையும் அதற்கேற்ப மாறுகிறது.
(ஏன் இந்த மாற்றம்?
இந்த கால அவகாசத்தில் பூமி சுழலும் அச்சு, 22.1 டிகிரியிலிருந்து 24.5 டிகிரிக்கு மெல்ல மெல்ல மாறுகிறது. பிறகு 24.5 டிகிரியிலிருந்து மீண்டும் 22.1 டிகிரிக்கு மாறுகிறது. இதனால்தான் இந்த மாற்றம்.
'அது சரி. Just like that பூமி சுழலும் சாய்வுக்கோணம் எப்படி மாறும்?'
நியாயமான கேள்வி.
வியாழன், சனி என்ற இரு பெரிய கோள்களின் ஈர்ப்பு சக்தி பூமியின் மீது நிகழ்த்தும் தாக்கத்தினால்தான் இந்த push and pull!)
2. மேய்ச்சல் நிலங்களும் வனப்பரப்புகளும் தட்பவெப்ப பாதிப்பினால் குறையத்தொடங்குகிறது. விலங்குகள் இடம் பெயர்கின்றன. வேட்டையாடி உண்ட மனிதகுலம், எஞ்சிய காட்டு விலங்குகளை கால்நடைகளாக (ஆடுகள், வளர்ப்பது எளிது!) வளர்க்கத்தொடங்குகின்றது.
3. மேய்ச்சல் எடுத்த ஆடுகள் பல்கிப்பெருக, ஏற்கனவே தட்பவெப்ப பாதிப்பில் சிக்கி மழை குறைந்ததால் மரங்களை இழந்த சகாரா நிலம், கட்டற்ற மேய்ச்சலினால் புற்கள், தாவரங்களையும் இழக்க, மழைப்பொழிவு வேகமாக குறைந்து ஒரு புள்ளியில் நின்றே போகிறது.
(தாவரங்கள்தான் மேகங்களுக்கு தரை ஈரப்பதத்தை கடத்தி, தம் நிலப்பரப்பில் மழையை இறங்கவைத்தன. இந்த தாவரங்களும் மேய்ச்சலில் அழிந்துபோக, மேகத்தை தரைக்கு இழுக்க சகாராவிடம் வேறு தூண்டில்கள் எதுவும் இல்லை!)
சமீபத்தில் Nature Communication என்கிற அறிவியல் இதழில் வெளியான இந்தக்கட்டுரை சரஸ்வதி நதியின் மறைவோடு தொடர்புடையது என குறிப்பிட்டுக்கூறவில்லை, விரைவில் கூறும் :-)
பின் குறிப்பு 1:
இந்த நிகழ்வுகள் ஓரு இடையறாத சுழற்சியின் Data Points. அவ்வளவே. நம்முடைய அதிவேக வணிக நுகர்வு, காற்று மண்டலத்தை அதிவேகத்தில் மாசு அடைய வைத்து, இந்த இயற்கை நிகழ்வுகளை துரிதமாக நிகழவைத்துக்கொண்டிருக்கிறது...
பின் குறிப்பு 2:
கோள்களை அடிப்படையாக கொண்ட சோதிட சாத்திரத்தில் சனிப்பெயர்ச்சியும், குருப்பெயர்ச்சியும் தலையாய இடம் வகிப்பதும் பூமியின் சாய்வுக்கோணத்தை இந்த இரு கோள்கள்தான் மாற்றுகின்றன என்ற அறிவியல் கண்டுபிடிப்பும், too much of a coincidence! நம் அடிப்படை வேதங்களிலும் சாத்திரங்களிலும் புதைந்துகிடக்கும் அறிவியலை எப்படி யார் வெளிக்கொணரப்போகிறார்கள் என தெரியவில்லை. கிழக்கும் மேற்கும் முறுக்கிக்கொள்ளாமல் Interdisciplinary studies தொடங்கி cross learning செய்தால், நம் அறிவியல் அறிவின் எல்லைகள் விரைவாக விரியும் என்று எனக்கு தோன்றுகிறது, Interdisciplinary approach to Medicine போல. நமக்கு Cosmos பற்றிய தெளிவான புரிதல்தான் தேவையே அன்றி intergalactic அளவு Eastern Sciences vs Western Sciences Ego Battles அல்ல!
கருத்துகள்
கருத்துரையிடுக