முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நல்ல கவிதை ஒன்று நமைச்சூழட்டும்!

முன்னாள் காதலி, திருமணமாகி வெளிநாடு போய், பள்ளி ரீ-யூனியனுக்காக திரும்ப வருகிறாள்.

இன்னாளிலும் (திருமணம் மறுத்து) அவளை தனியே காதலிக்கும் அவன். 

சந்திப்பில் கண்ணிய எல்லைகளுள் இருவரும் அன்பு தளும்ப ஒரு இரவில் காற்றில் சிறகுகள் போல அலைந்து, விடியலில் அவளை விமான நிலையத்தில் விட்டு விடைபெறக்கிளம்பிய குறும்பயணத்தில் குமுறி வெளிப்படுகிறது மௌனமாய் ஒரு பாடல்.

இந்தப்பாடலுள் இவர்களது உணர்வுகளின் அலைமோதலை அடைக்கமுடியுமா? ஒரு நல்ல கவிதை நெய்ய முடியுமா?

ஆன்மாவின் தறியில் உணர்வு இழைகளால் நெய்து தந்திருக்கிறார் பேராசிரியர் உமா தேவி.

இவர்களது உணர்வில் ஊறிய காதலை, நம் செம்மொழியில் ஊறிய சொற்களால் அழகியல் ததும்பும் கற்பனையோடு இவர் கவிதையாய் வடித்திருக்கிறார். உணர்ந்து படிப்பவர்க்கு அமுதம் இதுவே!

வாருங்கள் கவிதைக்குள் நுழைவோம்:

-----+-----

இரவிங்கு தீவாய் நமை சூழுதே

விடியலும் இருளாய் வருதே


- காதல் விடைபெறும் விடியலும் இருளாய்தானே வரும்!


நினைவுகள் தீயாய் அலை மோதுதே


- தீ எடையற்றது, நினைவுகளின் தீயோ கனமானது, கடல்போன்றது, அதனால்தான் அலை மோதுகிறது, இடையறாது!


உடலிங்கு சாவை அழுதே


- உச்ச உணர்வுக்குவியல் காதலில் தோய்ந்த இந்த வரி! உயிரைப்பிரிந்த உடலே அந்த பிரிவின் துயரில் ஒப்பாரியிடுகிறது!


பிரிவே உருவாய் கரைந்து போகிறேன்


- என்ன ஒரு சொற்கட்டு! பிரிவுக்கு ஒரு வடிவம் தந்தால் அது நானாக இருப்பேன். உன் பிரிவின் துயரில் இந்த உருவும் கரைந்து... போகிறேன்! இந்த நொடியில் சுயமிழந்த ஏதோ ஒன்று மட்டுமே அவனாக இருக்கிறது!!! 


உயிரின் உயிராய் பிரிந்து போகிறேன்


- உயிரின் உயிரென்றால் பிரியாதிருக்கவேண்டுமே! ஆனால் பிரிய நேர்கிறதே!!


மலைகளின் நதிபோல் மனம் வழிந்து வந்தாய்

வறண்டிடும் நிலத்தில் பல கடல்கள் தந்தாய்


- பனி உருகியதுபோல உறைந்திருந்த அன்பு உருகி உயிர் நனைத்து ஓட, வறண்டிருந்த நிலத்தில் ஒரு கடலல்ல, பல கடல்கள் தந்தாய்! ஆனாலும் பேரன்பு கொண்ட நிலமாய் நான் இந்த கடல்களை சூழ்வேன்!


கனவே துணையாய் ஒழிந்து போகட்டும்


- என்னம்மா இது! தனது எஞ்சிய வாழ்விற்கு கனவே துணை வந்தால் துணையை எப்படி இப்படி சபிப்பது! முற்றிய அன்பின் வேதனை சாபம் இது! அதுவும் சபிப்பது அவளை அல்ல, தன்னை!


இரவிங்கு தீவாய் நமை சூழுதே

விடியலும் இருளாய் வருதே

நினைவுகள் தீயாய் அலை மோதுதே

உடலிங்கு சாவை அழுதே


இந்த தாமரை குளம் மீறி தனி ஆகுதே


- நீருக்கு வெளியே தாமரை கண்டதுண்டா?? அந்த அளவு அன்பில், இருளில் தன் சூரியனைத்தேடி குளம் மீறுதே! ஆனாலும் தனியாகுதே இந்த தாமரை!!!


அதன் சூரியன் பகல் இன்றி வெயில் காயிதே


- Again a fabulous metaphor! குளம் மீறிய தாமரைக்காக, தனக்கான பகலை இழந்தபின்னும் இருளில் வெயில் காயிதே இந்த சூரியன்! 


ஒரு பாதையில் இரு ஜீவன் துணை தேடுதே

அட காலங்கள் தடை மீறி தடை போடுதே


- அடடா! இவர்களது கடந்த கால உணர்வுகளை இவர்களின் நிகழ்காலமே தடை போடுகிறதே!!


நீ இன்றி நானே தினம் வாழ்வதொரு வாழ்வா?


வாழ்வே வா நீ தான் 

உயிரின் உயிரே


- நீ இல்லாது நானில்லையே! வாழ்வும் நீயே, வாழ்வதும் (உயிரும்) நீயே!


வரவா… வரவா…


- இதுதான் மகுடம்! வரவா - போய்வரவா வரவா - வந்துவிடவா!


தினம் தினம் உயிர்த்தெழும்

மனம் அன்றாடம் மாயுமே!

உயிர்வரை நிறைந்துனை

மனம் கொண்டாடி வாழுமே!


- தினம் தினம் உயிர்த்தெழுவது உடலல்ல என் மனம். இரவுதோறும் அது மரிக்கும் வரையில் உயிர் வரை உன் நினைவில் நனைத்து மனம் கொண்டாடுமே! மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதலே அல்ல!!


மரங்கள் சாய்ந்து

கூடு வீழ்ந்தும் குயில்கள் ராகம் பாடுமே


- குயில் என்ன பாவம் செய்தது காதல் மரம் வீழ்ந்தால்? அதன் பின்னான நாட்களிலும் அதற்கு காதலின் ராகம் பாடமட்டுமே தெரியும்!


இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்

நிலவு பொறுமை காக்குமே!


- ஹையோ metaphor again! இரவு தீர்ந்து ஓய்ந்த பின் சூரியனுக்காய் பொறுமையாய் காத்திருக்குமே நிலவு!! 


மழை வழி கடல் விழும்

விண்காதல் மண்ணை சேருமே


- விண்ணெங்கும் வியாபித்திருக்கும் என் காதல் மழைவழியே துளித்துளியாய்  எனக்கான மண்ணை, உன்னை, சேருமே! கொன்னுட்டீங்க உமா!!!!


உனை உடல் பிரிந்தினும்

என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே!!

நீ போய் வா!!

வா!! வா!!

வா!!


- நீ உயிர். உன்னை பிரிந்தபின்னும் இந்த உடல், உன்னைச்சேரும் என் காதல் வழி வாழுமே...நீ போய் வா... வேண்டாம்! வா! வா! வா!


-----+----

"என்னப்பா இது?  துக்கிரித்தனமான ஒரு ஜோடிக்கான பாட்டை இப்படி சிலாகிக்கிறியே?" என வெகுண்டெழும் முன், சில நிமிடம், சில நிமிடம் மட்டுமே, கண்களை மூடி கற்பனை செய்து பாருங்கள், "உங்களுக்கு ஒரு உன்னத காதல் இருந்து அது கைகூடாது போய் பின்னாளில் அதே காதலை சந்தித்து உரையாடினால், மாறாத காதல் நிகழ் வாழ்வின் இயல்பான முதிர்ச்சியில் முற்றிலும் உரு மாறி அந்த விடைபெறும் புள்ளியில் (இருந்து தொடரும் நாட்களில்) உங்கள் வாழ்வின் உந்து சக்தியாக மாறப்போகும் அந்த  பேரற்புத நொடியை'.

பின் கண் திறந்து இந்தக்கவிதையை இன்னுமொரு முறை வாசித்துதான் பாருங்களேன்!

(

உணர்வதற்கு நீங்கள் காதல் மணம் புரிந்தவராகவோ, காதலைப்பிரிந்தவராகவோ இருக்கவேண்டிய அவசியமில்லை :-)

)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...