மஞ்சள் - மங்களகரம், லஷ்மி கடாட்சம்
மஞ்சள் - செழுமை, வளமை, இனிமை
மஞ்சள் - அழகு
மஞ்சள் - கவசம்
...
மஞ்சள் - துயரம்!
காந்தமால் - நம் ஒரிசாவில் மலைவளம் மிகுந்த செழுமையான பகுதி.
காடுகள் மரங்கள் சூழ்ந்த பகுதி, அவற்றை அழித்து விளை நிலங்களாக்கி, பல ஆண்டுகள் கழித்து தங்க முட்டையிடும் வாத்து ஒன்றை அங்குள்ள மக்கள் கண்டுபிடித்தனர்.
"பொன்னிற மஞ்சள்! மணமும் சுவையும் ஆஹா! ஓஹோ!' என உள்ளூர், வெளியூர், பன்னாட்டு வணிகம் வரிசையில் நிற்க, தங்க முட்டை பரபரவென விற்றது, விலையும் எகிறியது.
2019 இல் புவி சார் குறியீடும் கிடைத்தது, மதுரை மல்லி போல காந்தமால் மஞ்சள்.
பரபரவென விவசாயிகள் அனைவரும் சென்ற ஆண்டு ஏப்ரலில் மஞ்சள் நட்டனர், அரை ஏக்கர் முதல் பல நூறு ஏக்கர் வரை.
டிசம்பரில் அறுவடை. விளைச்சல் அமோகம்.
ஜனவரி, பிப்ரவரியில் மஞ்சளை வேகவைத்து, அவித்து, உலர்த்தி... மார்ச்சில் சந்தைக்கு தயார்.
மகாமாரி முதலில் வந்ததால் வணிகர்களும் தரகர்களும் காந்தமாலை சீண்டக்கூட இல்லை! ஏப்ரல் மேயிலும் யாரும் வரவில்லை.
விவசாயிகள், தம்மை துரத்தும் தேவைகளை நிறைவேற்ற அவசரமாய் சந்தை தேடி சரக்கோடு போனால், "கிலோ 30 ரூபாய். சரியென்றால் தந்து, பணம் பெற்று போ. வேண்டாமென்றால் சரக்கை திரும்ப எடுத்துப்போ"! என்றது சந்தை.
மஞ்சள் லாபத்தை நம்பியிருந்த பலரது வாழ்வாதாரங்கள், கனவுகள், எதிர்கால, நிகழ்கால திட்டங்கள் அனைத்தும் நொறுங்கத்தொடங்கின.
ஊடகங்கள் கடந்த சில மாதங்களாக இதைப்பற்றி செய்திகளை (வேறு breaking news இல்லாத வெற்றிடத்தை நிரப்ப) அவ்வப்போது வெளியிட்டாலும் நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்போம்?
கேன்சரை வெல்லும் திறன் தரும் மஞ்சள், நோய் எதிர்ப்பு தரும் மஞ்சள், ஏன் இப்படி உற்பத்தி செலவுக்கும் குறைவாக விற்கப்படுகிறது? அதுவும் இந்த மகாமாரி காலத்தில்?!
விடைகளை மேலும் சில வினாக்கள் வழியே தேடுவோம்.
2017 இல் சென்னையில் வெள்ளம் வந்தபோது பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் தேனி பள்ளத்தாக்கு விவசாயிகள் ஏன் வாயில் துண்டு பொத்தி விசும்பியபடி தம் தோட்டங்களில் விளைந்த G9, ரோபஸ்டா, நேந்திரன் பழத்தார்களை டிராக்டர்களில் ஏற்றி தேனி பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தி, வருவோர் போவோருக்கெல்லாம் இலவசமாய் தந்தனர்?
2015 இலிருந்து இன்று வரையில் ஏன் தக்காளி விவசாயிகள் கூடை கூடையாக விளைந்த பழங்களை சந்தையில் கிலோ 2 ரூபாய்க்கு (yes, no typo error, just t.w.o. .b.u.c.k.s.) விற்க மனமின்றி சாலைகளில் கொட்டி தம் கோபத்தை வெளிப்படுத்தி வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்?
ஆந்திர விவசாயிகள் ஏன் தம் மிளகாய்க்கு தகுந்த விலை இல்லை என ஆத்திரப்பட்டு கொள்முதல் சந்தையில் அடி தடியில் அவ்வப்போது இறங்குகிறார்கள்?
உத்திரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு பம்ப்பர் உருளை விளைச்சல் கண்டு அதிர்ந்து, cold storage இல் நிரம்பி வழிந்த 'சென்ற ஆண்டு அறுவடை செய்யப்பட்டு குளிரில் உறங்கிக்கொண்டிருந்த உருளைகளை% வெளியே உருட்டிவிட்டு கிடைத்த விலைக்கு விற்றார்கள்?
அத்தனை கேள்விகளுக்கும் ஒற்றை விடையாய் நிற்பது 'சந்தை நோக்கிய சாகுபடி'!
இதுவே இவர்களை சாகும்படி விட்டு விடுகிறது என்பதை இவர்களும், அரசுகளும், மக்களாகிய நாமும் ஏன் இன்னும் உணரவில்லை?
சந்தைக்கு உணர்வு கிடையாது, புத்தி மட்டுமே உண்டு. லாபம் மட்டுமே இலக்கு என, ஆகக்குறைந்த விலையில் ஒரு பொருள் எங்கு கிடைக்கிறதோ அங்கிருந்து வாங்கி (அது எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி என்றாலும்) எங்கு உச்ச விலைக்கு விற்க முடியுமோ அங்கு விற்று (அது எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி என்றாலும்) முதலாட்டாளர்களுக்கு maximum profits ஐயும், அரசுகளுக்கு minimum tax ஐயும் ஈட்டுவதே இதன் குறிக்கோள், இதன் பின்னாலுள்ள பெருவணிக நிறுவனங்களின் குறிக்கோள்.
'மஞ்சள் இன்னும் இன்னும் தேவை!' என இவை முடுக்கிய நிலங்களெல்லாம் மஞ்சளுக்கு மாற, விளைந்ததை கம்போடியாவிலிருந்து இறக்குமதி செய்து விற்பதுதான் உச்ச லாப உத்தி என சந்தை முடிவு செய்தால், காந்தமால் விவசாயிகள் என்ன செய்வார்கள்?
'தற்கொலை செய்துகொள்ளலாம் அல்லது கொள்ளாமலும் போகலாம்' என விவாத மேடைகள் அமைத்து ஊடகங்கள் அவர்களை கொன்றுகொண்டிருக்கின்றன்...
நுகர்வோராகிய நாமும், உணர்வற்ற, புத்தி மட்டுமே கொண்டு சிந்திக்கும் savings maximisation machines களாக மாறிப்போனதுதான் சந்தைப்பொருளாதாரத்தின் வெற்றி!
நம் தட்டில் விழும் உணவுப்பொருள் அனைத்தையும் வணிகமாக மட்டுமே நோக்கி பழகிவிட்ட நாம், சில ரூபாய்கள் விலை மலிவாக கிடைக்கிறது என சில கிலோமீட்டர்கள் வாகனங்களில் எரிபொருள் செலவு செய்து சென்று வாங்கும் நாம், ஒரு நாளாவது, 'அது எங்கிருந்து வந்தது? விளைவித்தது யார்? அவருக்கு என்ன விலை கிடைத்திருக்கும்?' என சிந்தித்திருப்போமா?
நுகர்வோர்களாகிய நாமும் இந்த சந்தை கூட்டணியில் இணைந்ததுதான் துயரத்தின் உச்சம்.
சந்தைப்பொருளாதாரம் சார்ந்த ஒற்றைப்பயிர் சாகுபடி எதுவுமே ஒரு புள்ளியில் விளைவித்தவரை சாகும்படி பணிக்கிறதே!
'நாங்களா எல்ல்லாலாரையும் மஞ்சள் நடுங்கன்னு சொன்னோம்!' என லாஜிஸ்டிக்ஸில் இறங்கி அடிக்கும் சந்தைசார் நிறுவனங்கள் எதிர்க்குரல் எழுப்புவதிலும் நியாயம் இருப்பதாய் தோன்றலாம், தப்பில்லை. 'எதைத்தின்றால் பித்தம் தெளியும் அல்லது ஒரேயடியாய் கடன் தொல்லையிலிருந்தாவது நிரந்தரமாய் தப்பிவிடலாம்?' என கவலையோடும் பயத்தோடும் அலையும் நம் விவசாயிகளுக்கு யார் சொல்லித்தருவது 'தற்சார்பு பொருளாதாரமே நல்லது, சந்தைப்பொருளாதாரமன்று!' என்பதை?
'ஒற்றைப்பயிர் சாகுபடி செய்து அறுவடைக்கு பின் விலை சரிந்தால் என்ன செய்வாய்? உன் தேவைக்கு (உணவுக்கு, மருந்துக்கு, கட்டுமானப்பொருட்களுக்கு) சாகுபடி செய். இந்தா அதற்கான செயல்திட்டம்!' என யார் தருவது?
இவற்றை செய்வதற்காக உருவான வேளாண் உற்பத்தி துறையோ, 'மைய திட்டமிடல், விசிறி போல விரிந்த உற்பத்தி' என திட்டமிட்டு, (மானியம் தேடி படியேறும்) தென்னை விவசாயிகளைக்கூட 'உளுந்து, கடலை விதை மூட்டை வாங்கினால்தான் வேலை நடக்கும். எங்களது target ஐ நாங்கள் அடையவேண்டாமா?!' என 'மென்மையாக' சுமக்கவைக்கும்!
விளைந்தவற்றை விற்க போதிய வசதியும் விலை நிர்ணயத்துக்கான ஆலோசனையையும் வழங்கவேண்டிய அரசு அலுவலகங்கள் இவற்றை சரியாக செய்தால், விவசாயிகள் தரகர்களிடம் கிடைத்த விலைக்கு விற்கும் அவலத்தையும் தடுக்கலாம், மானியம் வேண்டி வரும் விவசாயிகளையும் 'சுய தேவை சார்ந்த பல பயிர் தற்சார்பு விவசாயம்' நோக்கி மென்மையாக மடைமாற்றலாம்!
விவசாயத்துறைக்கு வேண்டியது இன்டர்நெட் மற்றும் IOT தொழில் நுற்பங்கள் அல்ல, அறம் சார்ந்த அணுகுமுறையே தேவை!
இந்த பாதையில் செல்ல அரசுகள் முடிவு செய்து, செய்தால், நம் நாட்டின் 33 விழுக்காடு வனப்பரப்பு தேவையைக்கூட விவசாய நிலங்கள் வழியே எளிதாக எட்டலாம். மரங்களைப்போல 'நின்று' பல்லாண்டு பலன் தரக்கூடிய உன்னத பயிர்கள் வேறெதுவும் உண்டா என்ன?!
படித்தவர்கள் நாம், சிந்திப்போம், உணர்வுப்பாலம் அமைப்போம் (அறியாமை) தீவில் வாழும் நம் விவசாயிகளை வெளியேற்ற, மேலேற்ற!
இதை அரசியல் வண்ணங்கள் தாண்டி செய்ய முடிந்தால் நம் தேசப்பற்றின் வண்ணம் மிளிரும், நிச்சயமாய் மூவண்ணத்தில்!
ஜெய் ஹிந்த்!
கருத்துகள்
கருத்துரையிடுக