முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடையை மறந்திடாதீங்க மக்கா!


மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா? என்ற பாடலை கேட்டிராத தலைமுறை ஒன்று, இன்று போதை தரும் பொருட்களை நாடி ஓடிக்கொண்டிருக்கிறது. அது ஊடக பெருநுகர்வாக இருக்கட்டும், மருந்து பெருநுகர்வாக இருக்கட்டும் (substance abuse like pain killers, cough syrups), போதைப்பொருட்களாக இருக்கட்டும் (கஞ்சா, அபின், தூப்!), பாதை ஒன்றுதான் பயணமும் ஒன்றுதான், அது முடியும் புள்ளியும் ஒன்றுதான்...


மொபைல் போன் வாங்கித்தர பெற்றோர் மறுத்ததால் தற்கொலை, செல்போன் மீது ஆசைப்பட்டு கல்லூரி மாணவியை கொலை செய்வது, போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, பழக்கத்தை தொடர பணம் புரட்ட பாலியல் வன்முறை படமெடுத்து மிரட்டல், ஊடகங்களிலேயே மூழ்கிக்கிடப்பதை தட்டிக்கேட்டதால் தொங்குதல், வெட்டுதல் அல்லது வெட்டிக்கொள்ளுதல்...என முடிவற்று நீளும் துயரப்பட்டியல்...


பல ஆண்டுகள் முன்பு Traffic என்கிற தரமான ஹாலிவுட் படம், அமெரிக்காவும் எஞ்சிய உலகமும் எப்படி மெக்சிக, கொலம்பிய போதை வஸ்துக்களால் சீரழிகிறது என முகத்திலடித்ததுபோல தெளிவாய் சொன்னாலும் உலக மக்களுக்கு இன்றுவரை எதுவும் உரைக்கவில்லை...

கொலம்பிய போதைப்பெருச்சாளிகள் முதல் ஆப்கானிய கஞ்சா போராளிகள் வரை உலக நாடுகளின் காவல் கண்ணிகளில் சிக்குண்டு சிதைந்தாலும் தொழிலென்னவோ செழிப்பாகவே வளர்ந்து வருகிறது இந்த Pandemic காலம் வரை!


போதைப்பொருட்களின் வளர்ச்சி இவ்விதமென்றால் இதற்கு இணையாக (in parallel) நம் சமூகங்களின், உலக அரசுகளின் அணுகுமுறை தளர்ச்சிகளும் 'வேற லெவல்!'. உதாரணம்: (முப்பது ஆண்டுகள் முன் அரசுகள் தடைசெய்த மதுவை) இன்று நம் நாட்டில் அரசுகளே மதுபானங்கள் விற்பது, சிகரெட் விற்பனையை சட்டங்களினூடாக அனுமதிப்பது, வெளி நாடுகளில் இன்று மரியுவானாவை வணிகப்பயிராக அங்கீகரிப்பது!

17 ம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் மலைக்கிராமமொன்றில் யாரோ ஒரு விவசாயி காய்ச்சிய அப்சிந்தே (Absinthe) என்கிற நாட்டு சரக்கு, உலகிலேயே அதிக போதை தருவதால் The Green Fairy என அழைக்கப்பட்ட சரக்கு, விரைவில் உலக சரக்கானதும் அதன் பின்னே அரசுகள் அதை தடை செய்ததும் இன்று அரசுகளின் அனுமதியோடே பலரும் Absinthe குடித்துக்கூத்தாடுவதும்...

"வாழ்க்கை ஒரு வட்டம்டே, கடந்துபோனது திரும்ப வரும், பல்லக்கிலேறி!" என நம்மைப்புலம்பவைப்பதும் எது தெரியுமா?

விடையறிய ஒரு கதை சொல்லவேண்டியிருக்கிறது!


ஒரு வருடம் ஒரு நாட்டில் ஒரு மழையுமின்றி ஒரு பஞ்சம், கடும் பஞ்சம்.

ஊர் ஊராய் ஆரூடம் கேட்க, பல சாமியாடிகள் 'தெய்வக்குத்தம்! பரிகார படையல்! மழை ப்ராப்தி!' என அருள்வாக்கு  தர...

மழை வேண்டி பல ஊர்களில் மழைக்கடவுளுக்கு தடபுடலாய் மிச்சமிருந்த சொத்தை விற்று மக்களெல்லாம் பூசை பண்ண...

பூசை முடிவதற்குள் ஒரு ஊரில் மட்டும் மழை! கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்தது பேய்மழை!


மழை பெய்த ஊரின் மக்களெல்லாம் தலைகால் புரியாது குதூகலிக்க, மழை பெய்யாத சுத்துப்பட்டு ஊர்களெல்லாம் பொறாமையில் வெம்ப, பேய்மழையை வரவழைத்த அந்த மழைக்கிராம சிறுவன் மட்டும் எப்போதும் போல உற்சாகமாக உறங்கினான் அன்றும்!

அவன் உறங்குகையில் மேலோகத்தில் நாரதருக்கு பொட்டுத்தூக்கமில்லை... பள்ளி கொண்ட கடவுளுடைய அறைக்கதவையே தட்டத்துணியும் அளவுக்கு!


கோபமாய் இறைமனைவி எழுந்து வந்து நாரதரை வறுத்தெடுக்க, தூக்கம் கலைந்து எழுந்த மழைக்கடவுள், நாரதரை காப்பாற்றி குடிக்க நீர் தந்து ஆசுவாசப்படுத்தி, பின் மென்மையாய் தன் ஆயிரம் கண்கள் வழியே கேட்ட கேள்வி 'என்னதான்யா உன் பிரச்சின?!'

'எல்லா ஊர்லயுந்தான ஒங்களுக்கு பூச பண்ணுனாங்க! அதெப்படி அந்த ஒத்த ஊருல மட்டும் ஒதுக்கி மழ?!'

மழைக்கடவுள் மெல்ல நகைத்தார்; 'நாரதா, அந்த பூசைகளோட வீடியோ பதிவுகள் ஊடகத்தில share செஞ்சி குவிச்சிருக்காங்களே! நல்லா எதையும் ஓட்டாம full ஆ பாத்தியா?!'

நாரதர்: 'கண் சோருகிறவரை பாத்தனே!'

மழைக்கடவுள் கையசைக்க ஊர்வாரியாக பூசை வீடியோக்கள் தேவலோக வெண்மேகமொன்றில் ஓடத்தொடங்கின. மழை பெய்த ஊரின் வீடியோ பதிவு ஓடுகையில் மட்டும் கடவுள் கவனமாய் ஒரு காட்சியை freeze செய்து, தி்ரும்பி, 'நாரதா, இதில் என்ன காண்கிறாய்?' என வினவ, முழித்து முழித்து pixel pixel ஆய் scan செய்த நாரதர் கண்ணுக்கு தெரிந்ததென்னவோ grainy யாக ஒரு சிறுவனின் படம் மட்டுமே.

'தோடா, ஒரே ஒரு பொடியன்!' என நாரதர் குழம்ப, மழைக்கடவுள் மேலும் தூண்டுகிறார், 'அவன் கையில் என்ன இருக்கிறது நாரதா?!'

நாரதர் மறுபடி மலங்க மலங்க விழித்து, உற்று நோக்கி... 'ஆங்! கைல குடை ஒண்ணு சுருட்டி வச்சிருக்கான்... என்ன அதுக்கு இப்போ?' என எரிச்சலாகி ஜெர்க் விட, மழைக்கடவுள் சொன்னது, வேத சத்தியம்!


"இத்தனை லட்சம் மனிதரில் இந்த சிறுவன், ஒரே ஒருவன் மட்டுமே!, கையில் குடையுடன் வந்துள்ளான், பூசை செய்தால் நான் மழை தருவேன் என நம்பி! அந்த நம்பிக்கையை நான் மதிக்கணுமில்லயா? அதனாலதான் தொவைச்சி எடுத்தேன்!!' 

என மந்தகாசம் செய்தார்.


தான் வரவழைத்த மழை தந்த குளிரில் சிறுவன் தூக்கத்தில் புறண்டு படுத்தான் :-)

போதைப்பொருட்கள், வாழ்வையும் வாழ்வியலையும் சீரழிக்கும் பொருட்கள், வாழ்வு தொடங்கிய நாளிலிருந்தே கொட்டிக்கிடக்குது நாம் 'உருவாக்கிய' பூமியில்.

அல்லதை ஒதுக்கி நல்லதை நாட, நல்லதின் மேல் அசைக்க இயலாத நம்பிக்கை வைக்க, நாம்தான் மறந்துவிட்டோம். இன்றைய தலைமுறையினருக்கு 'வாழ்ந்து காட்டி கற்றுத்தர'வும் மறந்துபோனோம்!


சிறுவனின் குடை போல, யானையின் தும்பிக்கை போல, நம் நல்வாழ்விற்கு (நம்பிக்கை) குடை அவசியமல்லவா? 

சிந்தித்துப்பாருங்களேன்; கையில் குடையுடன் நடப்பவனை வெயில் என்ன செய்யும்? மழைதான் என்ன செய்யும்?!

வாழ்வின் மேன்மை மீது அசைக்கமுடியாத நம்பிக்கை (இறைவழியோ, இயற்கை வழியோ அது அவனவன்பாடு!) இருந்தால் மட்டுமே, போதையிலிருந்து உலகம் மீளும்.

அதனாலதான் சொன்னேன், குடையை மறந்திடாதீங்க மக்கா!!!!!!


(Images may be subject to copyright by respective owners)

(Copyright of the pictures may lie with respective owners)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...