முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசித்திரு, தனித்திரு, விழித்திரு, பிழைத்திரு!


இயற்கை வேளாண்மையும் இயற்கை மருத்துவமும்.

முன்னது ஆகும்.பின்னது ஆகாது!

உலகம் முழுவதும் ஒரே உணவுப்பழக்கம் என்ற மேற்கின் கனவு நம் கண்முன்னே தகர்ந்து போய் கிடக்கிறது இன்று.

உலகின் பெரும்பான்மையான பகுதிகளில் பல பயிர் பல்லுயிர் என நோயற்று வாழ்ந்த மக்களை வணிகப்பயிர்களுக்கு, ஒற்றைப்பயிர்களுக்கு மாற்றவைத்தது மேற்கின் பொருளாதார பலம்.

வருடத்தில் ஆறுமாதம் இயற்கை சூழல் ஒத்துழைக்காததால் முடங்கியிருந்த மேற்கு, வணிகக்காற்று உந்தித்தள்ள கடற்பயணம் தொடங்கியபோது எஞ்சிய உலகைப்பிடித்தது சனி!

"

பட்டும், மிளகும் கம்பளமும் ஆசியாவில் கிடைக்கிறதே!

மேன்மையான குதிரைகள் அரேபியாவில் கிடைக்கிறதே!

பொன்னும் வெள்ளியும் தென்னமெரிக்காவில் குவிந்து கிடக்கிறதே!

விலையற்ற தொழிலாளர்கள் (அடிமைகள்!) செவ்விந்திய, மேற்கிந்திய, இந்திய, ஆப்பிரிக்க நிலப்பரப்பில் ஏராளமாய் இருக்கின்றனரே!

கோகோ மெக்சிகோவில் செழித்து வளர்கிறதே!

"

என கப்பல்கள் நூற்றாண்டுகளாய் கரை தொட்டு நங்கூரமிட, இறங்கிய வணிகக்கூட்டம் சுரண்ட முடிந்தவரை அள்ளிச்சென்றபின், அந்த நிலங்களையும் தன் வணிக நீட்சிக்காய் அந்த நிலங்களிலிருந்த பல்லுயிர் சுழற்சியை உடைத்தழித்து, ஒற்றைப்பயிர் நிலங்களாக மாற்றியமைத்துச்செல்ல, இன்றுவரை

இந்தியாவில் நெல், கோதுமை, கரும்பு

தென் கிழக்காசியாவில் நெல், சர்க்கரை

ஆப்பிரிக்காவில் நெல், கோதுமை, சோளம், கரும்பு, மலர்கள்

தென்னமெரிக்காவில் சர்க்கரை, கோகோ

மெக்சிகோவில் கோகோ

என கட்டம் கட்டி உற்பத்தி பெருக்கி,, இன்றுவரை உலகப்பொருளாதாரத்தின் பிணைக்கைதிகளாய், கொத்தடிமைகளாய் இந்த நிலப்பரப்புகளின் தொல்குடியினர்..


அறுநூறு ஆண்டுகளாய் கோலோச்சிய இந்த வணிகம் இன்று தன் பரிமாணத்தை மாற்றிக்கொண்டு தொழில்நுட்ப வணிகத்தினை முன்னெடுத்து நடக்க, முன்பு போல கொத்தடிமைகள் அதிகமாய் தேவையில்லை இப்பயணத்தில். சிலரைக்கொண்டே உலகாளலாம்!

மீண்டு வந்த மனிதக்கூட்டம் உயிர் வளர்க்க வயிறு வளர்க்க ஆதி வேளாண் தொழிலை. அது சார்ந்த தற்சார்பு வாழ்வியலை தேர்ந்தெடுத்து நடக்க..

இயற்கை வேளாண்மையின் மாண்பு கண்டு மிக மகிழ்ந்து பெருங்கூட்டம் பின்தொடர...

அந்தத்தடத்திலும்  பெருவணிகம் வலை விரித்து காத்திருக்குது! 

'நீ விளைவிக்கும் அத்தனையும் எங்களுக்கு வேண்டும். பல மடங்கு பணம் தருகிறேன். அதன் கூடவே எங்களது விதிமுறைகளையும் தருகிறேன். உனது தற்சார்பு வாழ்வியல் உன்னை உன்னதமாய் உள்ளிழுத்தால் எனக்கு யார் நல்லுணவு தருவது? என் நிலத்தில் நான் பறவை, தேனீ கொன்று குவித்து, வேறு யாருடைய கால்நடைகளுக்கோ உண்ண சோளம் வளர்த்து... இன்று உணவுக்காக கையேந்தி, உன்னை மீண்டும் பணபலம் கொண்டு அடிமைப்படுத்துகிறேன். மகிழ்வோடு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடு!' என 'கையேந்துவதைக்கூட ஆற்றலோடு செய்கிறேன் பார்!' என்கிறது.

எங்கும் மறுபடி ஒற்றைப்பயிர் வளர், இயற்கை முறையில்! எனப்பணித்து, இயற்கை வேளாண்மையை, வாழ்வியலின் தேவை சார்ந்த பல்லுயிர் பலபயிர் வேளாண்மையை, மறுபடி சந்தை சார்ந்த ஒற்றைப்பயிர் வேளாண்மையாக மாற்றிக்கொண்டிருக்கிறது. நாமும் மகிழ்வோடு மாறிக்கொண்டிருக்கிறோம்.

...

"
ஆனாலும் பெருவணிகத்திற்கு வேறொரு சிக்கல்!

இயற்கை வேளாண்மைக்கு திரும்பிய மனிதக்கூட்டம் இந்த பணியில் மிச்சம் செய்யமுடிந்த நேரத்தை, சிந்திக்கும் நேரமாக மாற்றி, 'உணவே மருந்து என்று நோயற்று வாழ்ந்தோமே! இன்று மருந்தே உணவாய் வாழ்கிறோமே! மருந்தை ஒதுக்கி, நல்லுணவுக்கு மாறுவோம், மருந்துகள் தவிர்ப்போம்!' என இயற்கை மருத்துவத்தை நாடி ஓட, சனி பிடித்தது பெருவணிகத்தை!


"எல்லோருக்கும் ஒரு மருந்து, ஒரே மருந்து என நாம் கட்டி எழுப்பிய வணிகக்கோட்டை ஆட்டம் காண்கிறதே! மனிதரனைவரும் ஒற்றை அமைப்பு கொண்டவரே என்ற சித்தாந்தத்தை முன்வைத்து நோய் மட்டும் நாடி, இந்த மருந்து உண். பலனில்லையா, வேறு மருந்து மாற்றித்தருகிறேன் உண்!' என 'தீர்வு தேடி' நாம் விலையுயர்ந்த மருந்துகள் பல தந்துகொண்டே வருகிறோம். ஆனால் பழை உலகின் மருத்துவமோ நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி... என நோயின் மூலத்தை நாடி, இன்னாருக்கு இன்ன அளவில் மட்டுமே என அவரவரின் வாத, பித்த, கப அளவினைப்பொறுத்து உட்கொள்ளவேண்டிய உணவை மட்டுமே மருந்தாய் தந்து ஒரேயடியால் குறைந்த செலவில் குணமாக்கினால் நம் பிழைப்பு என்னாவது? 

தடை செய்வோம் பிழைத்திருப்போம்

நம் புதிய அறிவியல் அளவீடுகள் வழியில் நாம் களமிறக்கிய லாபம் மிகுந்த வேதி வணிக மருந்துகள் சாராது, தனி மனிதரின் உடல் குறியீடுகள் வழி குணம் நாடி உணவையே மருந்தாய் தந்து நலமாக்கும்  பழைய உலகின் அறிவியல்சாரா மருத்துவத்தை தடை செய்வோம் தடை செய்வோம்!" 

என பிழைப்பு வேண்டி கூச்சலிடுகிறது, பண பலம் கொண்டு தடைபோடுகிறது.

இயற்கை வேளாண்மை ஒதுக்கிய உரக்கலவை, பூச்சுக்கொல்லி, களைக்கொல்லி, இன்னபிற நச்சுக்கலவைகளை பெரும் லாபத்தில் விற்று வாழ்ந்த பெருவணிகம் இவற்றின் மூலக்கூறுகளை நவீன மருத்துவத்தின் மூலக்கூறுகளாய் மறுசுழற்சி செய்கிறது!

செயற்கையாய் நோய் பெருக்குகிறது, புதிய மருந்துகள் 'கண்டு பிடி'க்கிறது, பழைய மருந்துகளையும் புதிய நோய் தீர்க்க பரிந்துரைக்கிறது...

இப்போது புரிகிறதா அதற்கு ஏன் முன்னது ஆகும்.பின்னது ஆகாது என?!


பெருந்தொற்றும் பேரிடர்களும் வந்து வந்து போகும், கலங்காதிருப்போம்! மாறாத உண்மை தேடி பசித்திருப்போம், விழித்திருப்போம், தனித்திருப்போம், பிழைத்திருப்போம்... அருள் கிட்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...