இன்றின் கரைகளில்
நேற்றின் அலைகள்
ஒருபோதும் மோதுவதில்லை
காலங்களினூடாய் பயணம் செய்பவன்
நினைவின் கரைகளில் தங்கிப்போவதுமில்லை
குமிழ், இன்றின் குமிழ்
நுரை, இன்றின் நுரை
அலை, இன்றின் அலை
கடல், இன்றின் கடல்
கரை, இன்றின் கரை
நேற்றை கடந்த
பயணி மட்டும்
நேற்றின் பயணி
என்பது எங்கணம்?
அலையாடி அலைமோதி
அலைதாவி அலைபாய்ந்து
தொடரும் குமிழின் பயணம்
பயணியின் பயணம் போலவே.
பயணி வேறு குமிழ் வேறா?
அதுவாய் இதுவாய் ஏதோவொன்றாய்
நொடியில் நிறம் மாறும் ஏதோவொன்றின்
சிறு மிடறு நம் பயணம்.
வண்ண பேதங்களில்
மயங்கி களித்து
தெளிந்து வெளுத்து
காலத்தின் அடர்த்தியில்
கரையும் குமிழில்
அன்பை அடைத்தது எது?
குமிழ்கள் என்றும் வெளியிலிருந்து உடைபடுவதில்லை...
(அன்பு) தளும்பும்வரை
வண்ணம் காட்டி
வண்ணம் கூட்டி
உள்ளன்பு வற்றி
வெற்றிடமாகையில் உள்ளுடைந்து
இருப்பழிந்து முடியுது
குமிழின் பயணம்.
அன்பினால் உந்தப்பட்டு
அன்போடு மோதிக்கொள்ளும்
குமிழ்கள் உடைந்ததாய்
வரலாற்றிலில்லை,
அறிவியலிலில்லை,
வாழ்வியலிலுமில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக