பின் 70, முன் (19)80 களில் விவிதபாரதியும், இலங்கை தமிழ் வானொலி நிலையமும் எங்கள் காற்றில் கனவுகள் விதைத்த காலம்.
நாங்கள் வெயிலோடு விளையாடி மழையோடு மகிழ்ந்தாடி இருளின் பேய்களுக்கும் கொள்ளிவாய் பிசாசுகளுக்கும் பயந்து என எந்த உணர்வுகளோடு வீடு நுழைந்தாலும் எங்கள் கவனத்தை நொடியில் தன்பால் ஈர்த்துக்கொண்டதென்னவோ இ.த.வா.நிலையம்தான்.
இப்படி ஒரு மகத்தான சாதாரண நாளில் 'சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே?' 'சுராங்கனி, சுராங்கனி' 'கலைமகள் கைப்பொருளே உன்னை ரட்சிக்க ஆளில்லையா' 'பாட்டும் நானே பாவமும் நானே' 'மச்சான பாத்தீங்களா' 'இன்று பிறந்தநாள் காணும் மட்டகளப்பு தங்கராசுவுக்கு அப்பா, அம்மா, அண்ணா, அக்கா, சிற்றப்பா, பெரியப்பா, பெரியம்மா, அம்மம்மாவின் பிறந்தநாள் வாழ்த்துகள்' என கதம்பதான ஒலிக்குதிரைகள் எங்களை நோக்கி இல்லங்களின் ஜன்னல்களில் இருந்தெல்லாம் தாவிக்குதித்து பிடறி சிலிர்ப்பி ஓடி வருகையில் திடீரென என் பிடரி மயிரைப்பிடித்து இழுத்தது ஒரு பாட்டு!
'வயல் வெளியில் பாரதி' என்ற பொப்பிசை ஆல்பத்திலிருந்து ஒரு பாடல் இதோ உங்களுக்காக என ஏ.எஸ் ராஜா கரகர குரலில் அறிவித்ததும் சற்றே கனவு போன்ற ஒரு குரல் பாடத்தொடங்கியது..."சூரியன் மீது சந்தனமள்ளி யாரது பூசியது? மாளிகைத்தென்றல் வீசியதோ தென்றல் ஆடிப்பாடியதோ...' என விரியும் அந்தப்பாடலின் மற்ற வரிகள் நினைவிலில்லை, அந்த பாடலின் தலைப்பு மட்டும் பச்சக் என என் சிந்தனையில் மைதாப்பசை போல ஒட்டிக்கொண்டது.
'பாரதியார் எட்டயபுரத்தில் பிறந்தார். புதுச்சேரியில் மறைந்து வாழ்ந்தார். சுதந்திரப்பாடல்கள் பல பாடினார். பெரிய கோபக்காரர். முண்டாசு மற்றும் கருப்பு கோட்டு அணிந்திருப்பார். திருவல்லிக்கேணி கோவில் யானை தூக்கி சுழற்ற இளவயதிலேயே 38லேயே இறந்துபோனார். செல்லம்மா அவரது மனைவி. கண்ணம்மாவும் கண்ணன் பாட்டும் அவரது விருப்பமான பாட்டு' என்று எலிமென்டரி பள்ளிகளில் பல தமிழாசிரியர்ரகள் sketchy ஆக வர்ணத்திருந்த என் மன பிம்பத்தில் இருந்த கோபமான முண்டாசுக்காரனுக்கும் இப்படி ஆனந்தமாய் வயல்வெளியில் பாடித்திரியும் பாரதிக்கும் 'என்ன கனெக்ஷன்' என்று தேடப்போய் பாரதி படிக்கத்தொடங்கிய சிறுவன், இன்றும் தேடிக்கொண்டேயிருக்கிறேன் உண்மையான பாரதியை, அவனது கவிதை பிம்பங்களை தாண்டியும் விரவியிருக்கும் அவனது ஆன்மாவை...
ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான சுதந்திர தாகக்குரலாக ஒலிக்கத்தொடங்கிய அவன் குரல், வயது ஏற ஏற வேறு பல விரிவான தளங்களிலும் ஏறி, ஜெகப்பயணம் தொடங்கியதை அவனது கவிதைகள் வழியே நான் வயதாகும்போதுதான் உணரத்தொடங்கினேன்.
சிஸ்டர் நிவேதிதா -' ஒளி படைத்த கண்ணினாய்' பாரதி கண்ட புதுமைப்பெண், பெண் விடுதலை உணர்வை அவனுள் விதைத்தவளாகவும் இருக்கலாம்!
மனிதர்தாண்டியும் நீளும் மனிதம் பற்றிய புரிதல், பல்லுயிர் சங்கிலி பற்றிய புரிதல் அவனை 'காக்கை குருவி எங்கள் சாதி' எழுதவைத்திருக்கலாம்
நிலைகெட்ட மனிதர்கள் நிகழ்த்தும் சமுதாய அவலங்கள், ஏமாற்று வேலைகள் அவனை''நெஞ்சு பொறுக்குதில்லையே' என புலம்பவைத்திருக்கலாம்
இந்தப்புரிதல் ஏனையோருக்கும் வர, அவர்களது சந்ததியினரை நம் தொன்ம கற்பியல் சாதி மத சங்கிலிப்பிணைப்புகளில் இருந்து மீட்டு வர அவனை அவர்களது குழந்தைகளிடம் 'சாதிகள் இல்லையடி பாப்பா!' என குழையவைத்திருக்கலாம்
'பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்' என்பது நம் நிலப்பரப்பில் மையப்படுத்தப்பட்ட அதிகார அடித்தளங்களை தகர்த்து, விரிவிபடுத்தப்பட்ட பன்முனை மையங்கள் கொண்ட ஒரு சுமுகமான வணிக பண்பாட்டு கலை அறிவியல் பரிமாற்றங்கள் மகிழ்வாய் நிகழக்கூடய ஒரு புதிய பாரதத்தைப்பற்றிய அவனது கனவாக இருக்கலாம்
'பாரத சமுதாயம் வாழ்கவே' என வாழ்த்தி இந்த சமுதாயத்தில் இவன் செய்யவிரும்பிய விதியொன்று, 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்'. கட்டுப்பாடற்ற சுதந்திர தேசமாக பாரதம் ஆகிவிடக்கூடாதே, இதன் வேரான தனி மனித சுதந்திரத்துக்கும் உணவிற்கும் ஊறு வந்துவிடக்கூடாதே என்ற கவலையின் வெளிப்பாடாக இருக்கலாம்
'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?' என அன்று அவன் ஏங்கியது தேச விடுதலைக்காக இருக்கலாம். அதன் பின்னான அரவிந்தர் தொடர்பு காலத்தில் அவனது தேடலின் எல்லைகள் விரிந்து
'
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
'
என நம் வயல்வெளிகளில் அவன் இன்றும் பாடித்திரிந்துகொண்டிருக்கலாம்.
வயல்வெளியில் பாரதி, என் மனவெளியில் பாரதியாக மாறிப்போய்... நானும் இன்று மர வெளிகளில் இவனது பாடல் விரல்களை பற்றிக்கொண்டு உலவிக்கொண்டிருக்கிறேன், இவன் இறந்து நாறாண்டுகள் கடந்த இன்றைய பொழுதிலும் கூட.
நாளையும் பிரிதொரு நாளிலும் இன்னும் பலர், புவிவெளிகளில் இவன் கரம் பிடித்து இவனது பாடலோடு என்னைப்போலே அலையலாம் அவர்கள் காக்கை, குருவிகளாகக்கூட இருக்கலாம், கடல் அலைகளாக இருக்கலாம், காற்று மோதும் மலை முகடுகளாகவோ, காற்று உருட்டும் மண் துகளாகவோ, மரத்தின்று சரிந்திறங்கும் இலைத்துணுக்காகவோகூட இருக்கலாம். ஏனெனில்,
'
காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்,
நோக்குங் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
'
கொட்டடா ஜெயபேரிகை கொட்டடா! அவன் இறந்து நூறாண்டு கழிந்தாலும் நினெவென்றும் மறையாது, (அவன் தந்த) தமிழென்றும் சரியாது என கொட்டடா ஜெயபேரிகை கொட்டடா!
செப்டம்பர் 11, 2020, பாரதியின் நூற்றாண்டு மறைவு தினம்.
கருத்துகள்
கருத்துரையிடுக