முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வல்லான் வகுத்ததே வாய்க்கால்!

 

சரியா தவறா?


இந்தியாவிலேயே மேன்மையான சாலைகளை கொண்ட மாநிலமாக தமிழகம் ஒளிர்கிறது.

சாலை விபத்துகளிலும் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் மிளிர்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த இரண்டு சாதனைகளையும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

"இரண்டு சாதனைகள்? முதலாவதுதானே சாதனையாக முடியும். இரண்டாவது எப்படி?" என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தால், படிப்பதை தொடருங்கள் :-)


TVS Apache - Racing DNA Unleashed


Honda CBR150R - Taste First Blood


Bajaj Pulsar - Definitely Male


போன்ற போதையேற்றும் விளம்பரங்கள் கண்டு மயங்கி நம் நாட்டின் இளவட்டங்கள் கந்துவட்டியில் பைக் வாங்கி நம் சாலைகளில் 'வேகப்போட்டி' நடத்தி ஐ.சி.யு வில், 'U C Me!' என குடும்பத்தினரை அழைத்து காயங்களை காட்டிக்கொண்டு படுத்துக்கிடக்க, பக்கத்து படுக்கைகளிலோ அல்லது மார்ச்சுவரிகளிலோ இவர்களது பைக்குகளால் தாக்கப்பட்டோரும் படுத்துக்கிடக்க...

"சாலை விதிகளை மதிப்போம்! வேகம் தவிர்ப்போம்! விபத்துகளை குறைப்போம்" என்ற அனுதின செய்திகளை, அரசுகளின் விழிப்புணர்வு அறிவிப்புகளை, தடுப்பு நடவடிக்கைகளை....என்னவென்று சொல்வது?


நாடு முழுவதும் தினக்கூலி முதல் மாதக்கூலி வரை அத்தனையையும் அரசுகள் நடத்தும் சாராயக்கடைகளில் சரக்காக்கி, மட்டையாவதற்கு முன் வாகனங்களில் எட்டு, பதினொன்று போட்டு எதிரில் வருபவரை முட்டித்தூக்கி அல்லது ஏதாவதொரு கம்பத்தில் முட்டி மோதி சாலை விபத்துகளை பெருக்கும் "ஏழரைகளை" கட்டுக்குள் கொண்டுவர, அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க, பாட்டில்களில் கனிவோடு 'குடி குடியை கெடுக்கும் உயிரை எடுக்கும்!' என எச்சரிக்கை வாசகம் print செய்து, 'சாராயம் குடிப்பது உடல்நலத்திற்கும் வீட்டு நலனிற்கும் நாட்டு நலனிற்கும் கேடு விளைவிக்கும்!' என ஊடகக்காட்சிகளில் அறிவித்து அக்கறை காட்டும் அரசுகளின் முயற்சிகளை... என்னவென்று சொல்வதம்மா?


ரேசர் பைக்குகள் நம் சாலைகளுக்கு ஆகுமா? 'ரேசிங்கின் மரபணு இந்த பைக்கு!' "மொதல் அடி என்னோடது!" 'ஆம்பளடா, பைக்குடா!' என நிறுவனங்கள் 'தூண்டித்தூண்டி தூண்டில் இடுவதை' அரசுகள் எப்படி அனுமதிக்கின்றன?

'வாகனம் ஓட்டும்போது அலைபேசி பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றம்!' என வலியுறுத்தும் அரசுகளே ஏன் 'Hands Free' mode பைக்குகளையும் தலைக்கவசங்களையும் விற்க அனுமதிக்கின்றன?

லைசென்ஸ் இல்லாத விடலைகளுக்கும் அவர்கள் வீட்டில் ஏன் பைக் வாங்கித்தருகிறார்கள்? கந்துவட்டியில் வாங்கிய பைக்கில் லைசென்ஸ் இன்றி பறக்கும் சிங்கங்கள் எப்படி பலமுறை பறந்தும் காவல் வலையில் 'நழுவ' முடிகிறது? 

உடல் நலத்திற்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் சரக்கை முற்றிலுமாக அகற்றவேண்டிய அரசுகளே ஏன் அவற்றை அக்கறையோடு ஓழுங்குமுறையில் விற்பனை செய்கின்றன?

இவற்றையெல்லாம் சிந்தித்து சரி செய்வது நம் அனைவரின் கடமையுமல்லவா?!


Ethics என்பது சமுதாயப்பார்வையில் "எது சரி? எது தவறு?' என்பதற்கான வரையறை, rules, guidelines. இந்த வரையறையை மாற்றுதல் கடினம்.

Morals என்பது தனி மனித பார்வையில் "எது சரி? எது தவறு?" என்பதற்கான வரையறை. இந்த வரையறை, தனி மனித மன முரண்களுக்கேற்ப அவ்வப்போது மாறும்.

நான் மாட்டு இறைச்சி உண்பது என் தனி மனித வரையறையில் சரி; சமுதாய வரையறையில் அது தவறென்றால் இந்த சமுதாயத்தையும் தனி மனித சுதந்திரத்தையும் கட்டிக்காக்கவேண்டிய அரசுகளே மாட்டு இறைச்சி வணிகத்தையும் சந்தைகளையும் ஏன் செயலாற்ற அனுமதிக்கின்றன? தனி மனிதனுக்கு இறைச்சி வேண்டுமென்றால் 'வளத்துக்கோ, வெட்டிக்கோ, தின்னுக்கோ!' என கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு முதல் மாடு, நாய் வளர்ப்பு வரை 'தனி மனித சுதந்திரம், அது தனி மனித உணவிற்காக மட்டுமே! விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம்!!' என அறிவித்து கட்டுப்படுத்தலாமே? மீன் கோழி ஆடு இறைச்சி விற்றால் தவறில்லை, மாட்டிறைச்சி விற்றால் தவறு என ஏன் பாகுபாடு?

(மீன் - மச்சாவதாரம்

கோழி - முருகப்பெருமான் கொடியில் ஆடும் பறவை

ஆடு -  காளி, அக்கினி, குபேர வாகனம்

நாய் - கால பைரவர் வாகனம்

...

List goes on and on)


பண்பாடு என்பது Ethics and Morals ஆல் கட்டமைக்கப்பட்ட ஒரு 'ஆகி வந்த' கோட்டை என்றால் (Ethics இந்த கோட்டையின் கற்கள், Morals இந்த கற்களின் மேல்பூச்சு - Binding Agent) இதை கட்டிக்காக்க வேண்டிய அரசு கட்டமைப்புகளில் மட்டும் ஏன் இத்தனை ஓட்டைகள்? 

பெருவணிகம் சாராது தம் பெருமக்கள் சார்ந்து அரசுகள் இயங்கினால்தானே ஓட்டைகளை தவிர்க்கமுடியும், கோட்டையும் வலுவாக இருக்கும்?

'ஓட்டைகளை அடைக்க நான் பொருள் தாரேன், உதவியும் தாரேன்!' என பெருவணிகமே முன்வருகிறது, அரசுகள் இதையும் அனுமதிக்கின்றன, பெருவணிகமே காப்பீடு வணிகத்தையும் மருத்துவ வணிகத்தையும் முன்னெடுத்து நடத்த வழி 'வகுக்கின்றன'.

'இந்த மாதிரி வணிகத்திற்கும் அரசு இயந்திரத்திற்கும் 'என்ன மாதிரியான பணியாளர்கள், மேலாளர்கள் அவசியம்?' என்பதையும் பெருவணிகமே முடிவு செய்து கல்விக்கூடங்கள் வழியே போதிப்பதற்கும், மக்களை ஆயத்தம் செய்வதற்கும் அரசுகளே ஏன் அனுமதி அளிக்கின்றன?

For the People, By the People, Of the People என்கிற நமது இறையாண்மைக்கோட்பாடு, தெளிவற்ற Ethics க்கும் Morals க்கும் இடையில் 'தலைமுறை இடைவெளி' எதுவுமின்றி சிக்கிக்கொண்டு ஏன் இப்படி பல்லாண்டுகளாக அல்லாடுகிறது?

ஏழைகளின் நாட்டில், 138 கோடி மக்கள் வாழும் நாட்டில் "மூன்றில் இரண்டு பங்கு வறுமைக்கோட்டுக்கு கீழே!" என ஒரு கட்சி முழங்க, 'அப்பட்டமான பொய்! மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வறுமைக்கோட்டுக்கு கீழ்!' என இன்னொரு கட்சி முழங்க, இந்த இரைச்சலுக்கிடையில் குறைந்தது இருபத்தி ஐந்து கோடிப்பேர் வாகன விபத்துகளுக்கும், பெரு வணிக லாபத்திற்கான "செய்கூலி சேதார"முமாக தம் வாழ்வைப்பணயம் வைத்து ஓடி உழைத்து, குடித்துக்களைத்து, காப்பீட்டில் அல்லது கடனில் மருத்துவ உதவி பெற்று பின் நெடுநாட்கள் கடனோடு போராடி... Ethics ஆவது ம***து! 

இங்கு வல்லான் வகுத்ததே வாய்க்கால், அன்றும் இன்றும் என்றும்!

TN Tops Road Accidents again

(Photo credit: From an article published by a law firm Herrman & Herrman P.L.L.C.  It may be subjected to copyright; I used it here for illustrative purpose only)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...