ஒற்றை நாளில் தொடங்கி ஒரே நாளில் முடிந்துவிடும் 'ஒரு நாள் கூத்து', புத்தாண்டு, நம்மில் பலருக்கு. என்ன கழிந்தது 2017 இல், நாள்காட்டியின் தாள்கள் தவிர? முந்தைய வருடங்கள் கழிந்ததும் அதேபோல்தானே. ஒரு மரமாவது நட்டிருப்போமா வாழ்நாளில் இதுவரையில்? ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய உலகில் என்ற நியதியில், புதிதாய் செய்வதற்கு ஒன்றுமில்லை என, நாம் மட்டும்பழைய மனிதராய்... ஒரு நல்ல நாள் பார்த்தாவது நாமும் புதியவராய் மாறுவோமே. புதிய வருடம், புதிய மாதம், புது நாள், ஏன்? இந்த நாள்...எந்த நாளும் நல்ல நாள்தானே? தவறுகளை சரி செய்து, தனி மனித நன்மையிலிருந்து பொது நன்மை வரை உண்மையாய் சிந்தித்து நல்லதை மட்டுமே செய்ய இப்போதிலிருந்து உண்மையாய் முயல்வோம். நாள்காட்டியில் தாள்கள் கிழிவது எப்போதும் நிற்காது! ''மண், மரம், மனிதம் தொட்டு மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும், இந்த நொடியிலிருந்து' என நட்புகள் அனைவருக்கும் இந்தச்சிறு விண்ணப்பம். இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு விடியலிலும். மரம் நடுவோம், நிறுத்தாமல்; பூமியின் காயங்களை ஆற்ற, நம் வாழ்விற்கு அர்த்தம் சேர்க்க. ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!