ஒரு பண்டைய நகர நுழைவாயிலில் யாராலும் அவிழ்க்க முடியாத ஒரு கயிற்று முடிச்சு காற்றில் ஆடிக்கொண்டே இருந்ததாம்.
எவன் அதை அவிழ்க்கிறானோ அவன் உலகாளுவான் என முடிச்சை இட்டவன் சொல்லிச்சென்றதை முயன்று தோற்றவர்களிடம் வேடிக்கை பார்ப்பவர்கள் சொல்வது வாடிக்கையாம்.
ஒரு நாள் ஒரு குருதை மேல ஒரு ராசா வந்தானாம். அவனுக்கு உலகத்தையே செயிக்கணும்னு பேராசையாம். காத்தில ஆடற கயித்து முடிச்ச பாத்தானாம், கதைய கேட்டானாம், யோசிச்சானாம், கத்தியால வகுந்துட்டு போய்ட்டே இருந்தானாம். 'ஏய், இது போங்காட்டம், யாருலே நீ?, சொல்லிட்டுப்போ'' ன்னு மக்கமாருங்க கொரலு குடுக்கவும், 'மை நேம் இஸ் அலெக்சு, ஐ திங்க்கு அவுட்சைட் த பாக்சு' ன்னு சொல்லிட்டுப்போனானாம்.
இந்த சேதி ஊரெல்லாம் பரவிச்சாம். ராசாவும் எதிரிங்களோட பயத்தில சுலபமா செயிச்சிக்கிட்டே வந்தானாம். பாரசீகத்தில இவன் வர்றதை பாத்ததுமே ஒரு ராசா பயந்து ஓடிட்டானாம். நம்ம ராசா நேர மாளிகைக்குள்ள நுழைஞ்சானாம்.
'அம்மாடீ, நாம எல்லாரும் இன்னியோட முடிஞ்சம்' என அரச பெண்டு பிள்ளைகள்லாம் பதற, ஓடிப்போன ராசாவோட அம்மா மட்டும் பயப்படாம நம்ம ராசா முன்னாடி வந்து 'மவனே! அலெக்சு! நீதாய்யா இன்னிலேந்து என் மகன். ஓடிப்போன பயந்தவன் எனக்கு மகனே இல்லப்பா' ன்னு அழுதாளாம். நம்ம அலெக்சும் சென்டிமென்டுல ஜெர்க்காயி 'அம்மா!' ன்னு சொல்லிட்டு, அவங்கள ஒன்னும் பண்ணாம வேற நாடுகள பிடிக்க கிளம்பிட்டானாம்.
அந்த அம்மாதான் (Ada Caria) பெண்கள்ல முதல் அவுட்சைட் த பாக்சு திங்க்கராம்!
Gordian knot என்கிற கார்டியன் முடிச்சைப்பற்றிய வரலாற்றுச்சிறுகுறிப்பை இப்படியும் எழுதலாம் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக