தேவதைகள் பூப்பறிப்பதில்லை!
வால் முளைத்த கூட்டமொன்று நெடுங்காலம் முன்பு வால் உதிர்த்து மரத்திலிருந்து இறங்கி, வெயிலுக்கும் மழைக்கும் மரத்தடியில் அண்டிப்பிழைத்ததாம். பின்னொரு நாளில் அக்கூட்டம் கல் அறைகள் கட்டி பதுங்கப்பழகியபின், அவர்களல்லாத வேரொன்று கல்லருகில் வந்தாலும் கோடரி தூக்கி சிதைத்து வேரறுத்து...பெருவிசை வாகனம் செய்து, இன்னும் விசை கூட்டி ஓட்டுவதற்காக அவை ஓடுமிடமெல்லாம் காடறுத்து மண் பெயர்த்து தார் பூசி மெழுகவும் பெருநகரம் உருவாச்சாம்...
பிட்யுமெனும் தார் பூச்சு தாரடி மண் தரைக்கு மூச்சு முட்ட, விரையும் பெருவிசை வாகனங்களில் அரைபட்டு, சிறுவிசை மனிதரிடம் மிதிபட்டு, வெயில் மழை காற்று குளிரில் ஒதுங்க வழியின்றி, கதற மொழியின்றி மண் சாலைகள் மௌனமாய் ஓலமிட்டு ஒடுங்கிப்போயின.
கந்தலாய், நெருடலாய் நாட்கள் நகர, தார் சாலைகளின் அடியிலிருந்து பெயர்ந்து தப்பிச்சென்ற மண் துகள்கள் (காற்று மழை உதவ) தந்த நம்பிக்கையில், நகரத்தின் பிடியிலிருந்து இந்த நொடியில் கூட திமிறி வெளியேறத்துடிக்கும் மண்தரை...
கந்தலாய், நெருடலாய் நாட்கள் நகர, தார் சாலைகளின் அடியிலிருந்து பெயர்ந்து தப்பிச்சென்ற மண் துகள்கள் (காற்று மழை உதவ) தந்த நம்பிக்கையில், நகரத்தின் பிடியிலிருந்து இந்த நொடியில் கூட திமிறி வெளியேறத்துடிக்கும் மண்தரை...
நகர எல்லை தாண்டியும் அதைத்துரத்தும் தார்ப்பூச்சு...
அதனின்றும் அவை தப்பியோடி தஞ்சம் புகும் இடமெல்லாம் மலர் சுமந்த மரங்கள்; இழுத்து அணைக்கும் வேர்களுடன்.
முடிவற்ற தார் சாலை என்று ஒன்று எங்காவது இருக்கிறதா என்ன? யாரேனும் செய்யமுடியுமா என்ன?
இந்த தார் சாலைகளில் மட்டும் ஏன் உயிர் முளைப்பதுமில்லை, தங்குவதுமில்லை?
வாழ்வு தேடி, இலக்கென்று எதையெதையோ துரத்தி அவற்றில் அலையும் சிறுவிசைகூட்டம் அறியுமா 'மண் தரை' நகரிலிருந்து தப்பிச்சென்று சேரும் இடங்களில் மட்டுமே வாழ்வு இன்னும் அவர்களுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறது என்று?
மரங்கள் அடர்ந்த மண் தரை என்றும் பின்னமாவதில்லை (சிதைவதில்லை) கண்டிருக்கிறீர்களா?
இந்த மரங்களில் தேவதைகள் வாழ்கின்றனவாம். அவற்றுக்கு மலர்களென்றால் கொள்ளையின்பமாம். ஆனாலும் மரங்களுக்கு வலிக்குமென்று அவை ஒருபோதும் மலர் பறிப்பதில்லையாம். மரங்கள் சொரியும்வரை காத்திருந்து பொறுக்கிச்செல்லுமாம், நகரிலிருந்து தப்பி மீண்ட மண்பரப்பில் சூடி மகிழுமாம்.
மரத்திலிருந்து தரையிறங்கும் ஒற்றை மலரை வாழ்நாளில் ஒருமுறையாவது (காலடியில் மண் படர) நின்று ரசித்தவர்க்கு மட்டுமே சொர்க்க ராஜ்ஜியத்தில் இடமுண்டாம்.
அங்கு பெருநகரங்களே இல்லையாம், தார் சாலைகளே இல்லையாம். இதுவும் தேவதைகள் சொன்னதுதான்!
பேரன்புடன்,
பாபுஜி
அழகிய கவிதை மட்டுமல்ல வாழ்வியல் பாடம்.
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு