முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வருமா?



பருவமழை தொடர்ந்து பொய்த்துக்கொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் அவற்றின் அளவு குறையலாம், காணாமலே போகலாம். ரமணன் போன்றவர்களுக்கு 15 minutes of fame கிட்டாமல் போகலாம்.

டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மழை முன்கணிப்பின் அடிப்படையில் எந்த மாதத்தில் எந்த வகை நெல் பயிரிட வேண்டும், நெல்லுக்கு பதிலாய் சிறு தானியங்கள் பயிரிடலாமா என்பது போன்ற பயனுள்ள தகவல்களை யார் தருவார்? எப்போது? எவ்வழியே?

சென்னை வெதர்மேன் தமிழ்நாடு வெதர்மேனானது பெரிய முன்னேற்றம். ஆனால் அவரால் மழைக்காக ஏங்கும் ஆறு கோடிப்பேருக்கு வருடம் முழுதும் தகவல் அளிக்க இயலாது. (இப்பவே அவரை வாதம் வம்புகளில் இழுக்கிறார்கள், இன்னும் பாப்புலரானால் வழக்கும் வரலாம்!). இயலும் நிலையில் உள்ள அரசுத்துறைக்கோ மக்களை உடனடியாக reach செய்வதில் கட்டுப்பாடுகள் / தடைகள் ஏராளம் (bureaucratic hurdles). தகவல் தொழில்நுட்பத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம்...நம் மக்களுக்கும் பயன்பட்டால் நலம். 

மண்ணை வளமாக்க வேண்டிய விவசாய பல்கலையோ மண்ணைக்கெடுக்கும் துரித சேவையில்...

எனக்கு அவர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளில் சில, எடுத்துக்காட்டாக:

அதிக காற்றின் ஈரப்பதம் காரணமாக மஞ்சளில் இலைப்புள்ளி  நோயினை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 500 கிராம் கார்பன்டசிம் மருந்தினை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.  முனைவர் ...

மழை எதிர்பார்க்கப்படுவதால் மரவள்ளி கிழங்கிற்கு மேலுரமாக யூரியா 40 கிலோ மற்றும் பொட்டாஷ் 120 கிலோ கலந்து இட்டு மண் அணைக்கவும்.   முனைவர்...

‪அன்புள்ள விவசாயிகளே ‎மிளகாய்‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ சாகுபடியில் காய்த்துளைப்பாணை கட்டுப்படுத்த குளோரி பைரிப்பாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்

அன்பான கோவை மாவட்ட விவசாயிகளே வணக்கம்!  நிலக்கடையில் கூடுதல் மகசூல் பெற  பயிர் வூக்கியான வேர்க்கடலை ரிச் ஒரு ஏக்கருக்கு 3 கிலோ வீதம் இலை வழியாக தெளிக்கவும்

அன்பார்ந்த விவசாயிகளுக்கு, வணக்கம்! தென்னை டானிக் 40 மிலியுடன் 160 மிலி தண்ணீர் கலந்து 6 மாதத்திற்கு ஒரு முறை வேர் மூலம் உட்செலுத்துவதன் மூலம் குரும்பை பிடிப்பதை அதிகரிக்க செய்யலாம்
...

இவற்றில் முதல் குறுஞ்செய்தியை மட்டும் கவனிப்போம். கார்பன்டாசிம் என்பது பூஞ்சானக்கொல்லி என அறியப்பட்டாலும் இயல்பில் அது ஒரு உயிர்க்கொல்லி.

கார்பன்டாசிம் உற்பத்தி நிறுவனங்களை / அவர்களால் sponsor செய்யப்பட்ட அறிவியலாளர்கள் எழுதிய independent :-) அறிக்கைகளை கேட்டால் 'அற்புதமான பூஞ்சானக்கொல்லி தெரியுமா, கேன்சரைக்கூடத்தடுக்கும் தெரியுமா!' என வானுயரப்புகழ்வர். தணிக்கை செய்யவேண்டிய நிறுவனங்களோ 'மழை பெய்யலாம் பெய்யாமலும் போகலாம்' என்கிற ரீதியில் 'சிறு அளவுகளில் பாதிப்பில்லை, அளவு கூடினால் சில விளைவுகள் மட்டுமே'... 
Real independent research: 'லிவர் மற்றும் விதைப்பைகளை பாதிக்கும் நஞ்சு' என்கிறது.

இவற்றில் எது உண்மை? எதுவாயிருந்தாலும் என் விவசாயிக்கு கவலை இல்லை / கவலைப்படவேண்டுமென்ற எண்ணம் அவனிடம் விதைக்கப்படவில்லை / அல்லது 'இவை பயிருக்கு நல்லது' என்பதை பகுத்தெறியத்தெரியவில்லை / அவன் ஏமாளி.

அவனுக்கு வேண்டியது வாழ்வதற்குத்தேவையான பணம் மட்டுமே என எளிதில் நம்பவைக்கப்பட்டு  'அதிக விளைச்சல் அதிகப்பணம்' என்ற வாக்குறுதி தந்த தெம்பில் ('இந்த வருஷம் நல்லா விளைஞ்சதுன்னா கடனெல்லாம் அடச்சிடலாம்) கடன் வாங்கி செலவு செய்துகொண்டே இருக்கிறான். கடைக்குச்சென்று message ஐ காட்டி, என்ன விலையென்றாலும் தந்து...நொந்து...

நீரில்லையா, கவலை வேண்டாம். வறட்சியை தாங்க இந்த 'மருந்தை' தெளியுங்கள் என மறுபடி மறுபடி அரசு வலியிறுத்தல் ஒருபுறம், wonder gel வாங்கி நிலத்தில் கொட்டுங்கள், நீர் சேகரிப்பை தரைமீதே செய்து வருமானத்தை multiply செய்யுங்கள் என்ற விளம்பரங்கள் மூலம் இருக்கும் பணத்தையும் இழத்தல் ஒருபுறம்,  இடையில் நிலத்தைச்சுற்றியுள்ள நீர்நிலைகளில் நீர் நிலைக்காது போனதால் 1500 அடி வரை Borewell போட்டும் சொட்டு சொட்டாய் விழும் தண்ணீரை விட அதிகக்கண்ணீர் ஒருபுறம் என எல்லாம் முடிந்து இப்போது விவசாயிகள் குளம் வெட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

'நல்லதுதானே!' என்பவர்கள் நான் சொல்லப்போவதை கேட்டபின்பு 'அப்படியே ஷாக்காயிடுவீங்க!'; ஐந்து முதல் இருபத்தைந்து லட்சம் செலவு, ஒவ்வொரு குளத்துக்கும். அம்புட்டும் கடன்! 

மரங்கள் விளைச்சல் கூட்டும் வேகத்தை விட வட்டி மீட்டர் வேகம் அதிகம். ஒரே பயிரை (mono crop)  அதிகமாக விளைவித்து demand supply see saw வில் அறுபட்டு பாலிடாலில் விடுபட்டு என இச்சுழற்சி நிற்பதெப்போ??

இத்தனைக்கும் அடிப்படை சிக்கல் இலவச மின்சாரம்! 

இதுக்கும் ஷாக்கானா எப்படி!

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நம் நாட்டில் இலவச மின்சாரம் மூலம் இயக்கப்படும் ஆழ்துளை நீர்தூக்கிகள் (submersible pumps bro!) எப்போதாவது ஓய்வெடுத்திருக்கின்றனவா? Repair ஆகாத தினங்கள் அனைத்திலும் (25*7*350 நாட்கள்) ஓயாத உழைப்பில் நம் காலடி பூமியின் நீர் வயிறு ஏராளமான பொத்தல்கள்வழியே காலியாச்சி. இன்னொரு ஐநூறு அடி தோண்டினால் பெட்ரோலியம் கிடைக்கலாம்! கிட்டினால் பிறகு விவசாயிகள் யாரும் உழைக்கவேண்டியதே இல்லை!

இது (பெட்ரோலியம்!) நல்ல ஒளிமயமான எதிர்காலத்தை தரப்போகிறது என்ற நம்பிக்கையில் இன்றும் விவசாயத்திற்கு மின்சாரம் இலவசம், இலவசம். 

விவசாய மின்சாரத்துக்கு சார்ஜ் பண்ணா கோட்டைய காலி பண்ண வச்சிருவாங்க என்ற ஆள்வோரின் பயம் இந்த தலைமுறை விவசாயிகள் கிராமங்களை காலி செய்தபின் மறைந்துவிடும். 

அதன் பின், ஆயிரக்கணக்கான, பயிர்களற்ற, மரங்களற்ற விளை நிலங்களை பெரு வணிக நிறுவனங்கள் சல்லிசாக ஏலத்தில் எடுத்து, பெருவிசை எந்திரங்களை தம் சொந்த solar park மின்சார உதவியுடன் இயக்கி, 'எது விக்குமோ அதை பயிர் பண்றோம், உச்ச விலைக்கு ஏற்றுமதி பண்ணது போக மிச்சத்தையும் அதிக விலைக்கு மத்தவங்களுக்கு விக்கிறோம்' என வலம் வரும் காலம் விரைவில் வரும்...

எல்லாம் சரி, மழை வருமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...