முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அபார வெண்மை, அய்யகோ!


கட்டுக்கடங்காத மகிழ்ச்சியில் கிராமம் நோக்கி பயணம். இந்த கிராமத்து விதை ஒண்ணு இந்தியாலயே பெரிய software company யில கிளை விரிக்கப்போறதுன்னா சும்மாவா பின்னே?

இந்தியா தனது விவசாயம் சார்ந்த மக்களுக்காக முயற்சித்த பல பொருளாதாரக்கனவுகளை கைவிட்டு உலகமய சோதியில் கலந்த தருணத்தில்தான் எனது துள்ளல் பயணம்.

தாத்தா அந்த ஊரில் மதிப்புடன் வாழ்ந்தவர். அவரை அறிந்தவர்களை இன்றும் 'அவரைப்போல யாரு இருக்கா இப்ப' என nostalgiaவில் முழுகச்செய்பவர். அவர் வீட்டில் எந்நேரமும் மனிதர்கள், விலங்குகள் புழங்கிக்கொண்டிருந்த காலம். கிணற்றில் பத்தடியில் தண்ணீர் (சாமி சத்தியமா!). வீட்டுக்கொல்லையில் மா, பலா, வாழை, கொய்யா, தென்னை, முருங்கை, காய்கறிச்செடி கொடிகள் என கலந்து கட்டி...கிணற்று நீர் பயன்பாடு முடிந்ததும் கடமையாய் இவைகளின் வேர் தேடி ஓடும். ஊர் மக்களுக்கு, குறிப்பாக வேலைநாட்களுக்கு சிம்ம சொப்பனம். கரடுமுரடான பலாப்பழ மனிதர். இதயம் அவ்வளவு இனிமை, ஆனால் a feudalist, typical product of his times. அவருடன் சமத்துவ வாள் சுழட்டி அநேகமுறை சிறுவயதிலேயே மோதியதால் 'சின்ன அய்யா the rebel' என்ற முத்திரையோடு ஓரளவு பந்தாவோடு கோடை விடுமுறைகளை கழித்த ஊர். 

நான்கு கட்டு வீட்டில் பாட்டி மட்டுமே வாசல் திண்ணைவரை அமர்வார். தாத்தாவைவிட பாட்டியை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். மந்திரத்தால் மாம்பழம் வரழைப்பார், நெல் மூட்டைகளுக்குள் இருந்து! எந்தெந்த மூட்டைகளில் பழுத்துகிட்டிருக்கு என்பது (அவருக்கு மட்டுமே தெரிந்த) பாட்டி ரகசியம்.

முதல் நாள் தேங்காய்ப்பால் அப்பம் தந்து நாங்கள் உண்ணும் அழகை ரசித்து, அடுத்தடுத்த நாட்களில் நாங்கள் once more கேட்டு கொடி பிடித்தாலும் சளைக்காமல் வெந்தய தோசையில் தே.பால் பிழிந்து தந்து அசடுகளாய் நாங்கள் உண்பதையும் ரசிப்பார். உடல் தளரும் வரை அனைத்து வேலைகளையும், மிகவும் தளரும் வரை தன் வேலைகளையும் தானே, செய்தவர். 

இவரிடம்தான் நான் என் வரலாற்றுச்சிறப்பு மிக்க வேலை அழைப்பை பகிர்ந்தேன் 'பாட்டீ, இந்தியாலயே பெரிய கம்பெனி, கம்ப்யூட்டர், சாப்ட்வேர், ஏ.சி ஆபீஸ், நிறைய சம்பளம், பெருநகரத்தங்கல், டாடா! டாடா கன்ஸல்டன்சி சர்வீ்ஸஸ் தெரியுமா? உங்களுக்கெங்க தெரியப்போவுது!' என 'படம்' காட்டிவிட்டு மாந்தோப்புக்கு போய்விட்டேன் (பாட்டி முகப்புன்னகை பளிச்சென்று பிரகாசிக்கும். அன்றும் அப்படியே).

நாள் முழுவதும பாட்டியின் தெரு சொந்தங்களும் ஊர் நட்புகளும் வந்து போய்க்கொண்டிருந்தனர் உறவினர் வெளியூரிலிருந்து வரும்போதெல்லாம் நிகழ்வதுதானே என்று கண்ணில் பட்டவர்களைப்பார்த்து மையமாய் சிரிப்பேன்.

ஆச்சி, அன்று மாலை ஊர் திரும்புவதாய் திட்டம். காலை உணவு முடித்து வெயில் ஏறுமுன்னர் அருகிலுள்ள என் வயதொத்த உறவினனை சந்தித்து விட்டு வயல் தடத்தில் திரும்புகையில் எதிரில் பேரிளம்பெண்கள் கூட்டமாய் கோவிலிலிருந்து. மையமாய் சிரித்ததுதான் நான் செய்த ஒரே தவறு! 

'என்ன சின்னய்யா பட்டணமெல்லாம் எப்டி இருக்கு?'

'நல்லா இருக்கு பாட்டி'

'வேலைல சேரப்போறதா சொன்னாக. நல்லபடியா இரு அய்யா'

'சந்தோஷம் பாட்டி'

'ஆமா, டவுனுல என்னமோ பெரிய படிப்பெல்லாம்படிச்சிட்டு ஏன் இப்படி பொசுக்குன்னு சோப்பு கம்பெனில சேந்தீக?!!!!'

(பிண்ணனியில் பத்துப்பதினைந்து பாட்டிகளின் முரண் நகை வேறு! - wry laughter!).

இதயம் வேகமாய் துடிக்க 'பாட்டி, சோப்புக்கம்பெனியா???? யார் சொன்னது?!'

'உங்காச்சிதான் சின்னய்யா...'

அய்யகோ இவர்களுக்கு என்ன ஆச்சி? எப்படி என் software வேலையை விளக்குவது என யோசிக்கையில் மண்டையில் மணியடித்தது...டாடா 501 - அபார வெண்மை'! Oh my God, என் பாட்டிக்கு என்னை விட டாடாவையும் டாடாவின் சோப்பு பிசினசையும் நன்கு தெரிந்திருக்கிறது என வெட்கி விலகி மௌனமாய் நகர்ந்தேன். பால்போல் வெண்மையான காளைகளும் குதிரைகளும் டாடா 501இன் சக்தியை சுவர், தட்டி, செய்தித்தாள்கள், சினிமா மற்றும் ரேடியோ விளம்பரங்கள் மூலம் இந்தியாவின் மூலை முடுக்குகளெங்கும் ஓடிக்கொண்டிருந்ததை எப்படி மறந்தேன்!

Internet இல்லாத காலத்திலேயே இப்படியாக பட்டி தொட்டியெல்லாம், பதினெட்டு பட்டியெல்லாம் 'சோப்புக்கம்பெனியில் சேர்ந்த என்சினியரு' என வைரலானேன்  அய்யகோ! ('ரொம்ப நல்ல்ல்லவரான பேக்கரி ஓனர் வடிவேலு இதைதான் பிற்காலத்தில் 'கலெக்டர் மீட்டிங்கிலயுமா இதப்பத்தி பேசினீங்க??!' என ஜெர்க் ஆகும் காமெடியாக செய்தாரோ என்னவோ :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...