கற்பனை செய்து பாருங்கள். ஒரு அருமையான நகரத்தில், உங்களை அறியாத, உங்களுக்குத்தெரியாத நகரத்தில், நீங்கள் தங்கும் ஹோட்டலுக்கு வாடகை கிடையாது, சாப்பாடு இலவசம், 'இருக்கும்வரை' தங்கலாம், காலி செய்யும் அவசியம் கிடையவே கிடையாது...சொர்க்கம் அல்லவா!
காசியில் உயிர்விடும் ஆசையில் (straight ஆ முக்தி, no மறுபிறவி!) வயதானவர்கள் சிலர் பலர் சென்று, டிக்கட் கிடைக்கும்வரை இறைவழிபாட்டிலும் உடல் உபாதைகளிலும் காலத்தை தள்ள, கருணையோடிணைந்த ஈகை உள்ளம் கொண்ட சிலர் இவர்களுக்காக அங்கு இலவச விடுதிகள் நடத்துகிறார்கள். இவற்றுக்கு முக்தி பவன் என்று பெயர். வயதில் மூத்த முதியோருக்குமட்டுமே(!) அனுமதி. முடிந்தபின் கங்கையில் விட்டுவிடுவார்களாம்!
காசியிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் நாங்களும் எங்கள் நகரத்தில் ஒரு முக்தி பவன் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை தற்செயலாய் கண்டுபிடித்தோம். இது நகரின் முதல் முக்தி பவனாகக்கூட இருக்கலாம்.,..
ஆனால் காசிக்கும் எங்களுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு்:
'புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்...'
என்பதில் மனிதர் மட்டுமே மு.பவனுக்கு, ஏனைய உயிரனைத்தும் இங்கே!
எலி, பல்லி, செடி, கொடி, மரம், புல், பூண்டு, கரப்பான், எறும்பு, பல்லி, தேள், பூரான், மீன், பாம்பு, தட்டான், தும்பி, வண்ணப்பூச்சி, தேனீ, குளவி, காக்கை,
குருவி, குயில், மயில், நாய் நத்தை, தவளை என வந்து தங்கி முக்தியடையும் கூட்டத்திற்கு யார் முகவரி தந்ததென்று தலைசொறிந்து நின்றாலும், 'எல்லாம் நம்ம மக்கதேன், நம்ம கையால காரியம் வாங்கணும்னு இங்க வந்து "போய்ட்டாங்க" என்று...ஆச்சி, நேற்று ஒரு நாயையும் புதைச்சாச்சி.
பெரிய சொந்தமென்றால் குழிக்கு ஐநூறு செலவு. சிறிய சொந்தங்களை ஏனைய சொந்தங்களே ஏப்பமிட்டு விடுவதால் செலவில்லை.
ஒருவேளை அவைகளின் உலகில் ஏதேனும் வலைதளம் இருந்து அதில் எங்கள் இல்லம் ட்ரெண்டிங்கில் இருக்கிறதா என google இல் 'habits of dying animals and birds' எனத்தேடினேன். மனிதனைத்தவிர ஏனைய உயிரனைத்தும் 'இவ்வளவுதான்' என உயிரைப்பிரித்து காற்றில் விடும் காலத்தை குத்துமதிப்பாய் அறிந்து, தனியான, பாதுகாப்பான, நிழலான, குளிரான (cool but not cold), அமைதியான இடம் நாடி மரிக்குமாம்.
இந்த adjectives எல்லாம் பொருந்தும் இடம் காடு என்று அறியப்படுகிறது! பண்டைய மனிதர் போலவே இவையும் வயதேறியதும் வனப்பிரஸ்தம் (காடேகுதல்) செய்து முக்தியடையுமாம். கானகங்களின் எலும்புக்கூடுகளை புதைத்து நாம் நகரங்கள் பல எழுப்பி வெகுகாலம் ஆனாலும் இன்னும் இவற்றிற்கு மரபின் நினைவு வழியே(gene memory) கானகம் பற்றிய புரிதல் மிச்சமிருக்கிறது. கானகமாய் இல்லாவிட்டாலும் கானகம் போல இருப்பதால் இவ்விடம் தேடி வருகின்றன என எண்ணுகிறேன். நீத்தார்கடன் செய்யத்தான் நாங்களிருக்கிறோமே என்ற நம்பிக்கையும் சேர்ந்திருக்கலாம்!
முக்தி தவிர்த்து இன்னுமொரு வித்தியாசம் உண்டு இந்த (எங்கட) பவனில்; இடையறாத உயிர்த்தலும் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது. காக்கை வீடு, குருவி வீடு, பல்லி வீடு, பாம்பு வீடு, தேனி வீடு, எறும்பு வீடு, (முல்லை) அரும்பு வீடு, கௌதாரி வீடு, வண்ணப்பூச்சி வீடு இன்னபிற என களைகட்டியவண்ணமே இருக்கிறது.
உயிரனைத்தும் 'பெருகலாம்!' என உயிர் கலந்து உயிர் சமைக்கும் காலத்தை குத்துமதிப்பாய் அறிந்து, தனியான, பாதுகாப்பான, நிழலான, குளிரான (cool but not cold), அமைதியான இடம் நாடி உயிர்க்குமாம்.
இந்த adjectives எல்லாம் பொருந்தும் இடமும் காடு என்றே அறியப்படுகிறது!
இப்படியாக "உயிர்த்தலுக்கும் மரித்தலுக்கும் இடையில்" வாழும் காட்டுவாசிகள் நாங்கள் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக