ஒரு கிராமம்.
300 வீடுகள்.
ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரு லாட்டரிப்போட்டி. அந்தப்போட்டி நடத்தினால் அந்த வருடம் அமோக விளைச்சல் என்ற நம்பிக்கை.
ஊரில் உள்ள அத்தனை குடும்பங்களின் பெயர்களையும் துண்டுச்சீட்டுகளில் எழுதி ஒரு பெட்டியிலிட்டு, கை விட்டு துழாவி ஒரு சீட்டு எடுப்பர். எந்தக்குடும்ப பெயர் வருகிறதோ அவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரின் வீட்டை சீட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பர். பின்னர் அந்த வீட்டிலுள்ள அனைவரும் பேர் குலுக்கி சீட்டெடுத்து ஒருவரை முடிவு செய்வர். அவரைத்தவிர மற்ற அனைவரும் தப்பித்த மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு கல் பொறுக்கி, தேர்ந்தெடுக்கப்பட்டவரை கல்லாலடித்து...கொலை செய்வர்.
1948 இல் ஷிர்லி ஜாக்சன் எழுதிய, உலகை உலுக்கிய சிறுகதை இது.
லாட்டரி 'அடித்திருக்கிறார்' அருவி இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்! வாழ்த்துக்கள்.
இன்னும் துணிச்சலாக நீங்கள் கதை அமைத்திருக்கலாம். நம் ரசிகர்கள் நிச்சயம் இன்னும் கொண்டாடியிருப்பார்கள்...நாம் எல்லோரும் ஒருவிதத்தில் அந்த லாட்டரி கதையில் துண்டுச்சீட்டிலிருந்து தப்பியவர்கள்தானே ப்ரோ!
நம் சமூகத்தின் தர்ம நியாயங்களை கேள்வி கேட்கும் துணிச்சலுக்கு 'வாவ்' சொல்லத்தோன்றும் அதே நேரத்தில் கதை நாயகியின் 'விபத்தை' அதே தர்ம நிநாயத்துக்குள் பொருத்தித்தான் கதை சொல்லியிருக்க வேண்டுமா என்ற கேள்வியும் தோன்றியது. அனுராக் காஷ்யப்பின் தேவ் டி (ஹிந்தி) யிலும் கதை நாயகி வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறாள், இன்னும் வலுவான, சமுதாய அளவுகோலுக்குள் அடங்காத காரணத்துடன்.
அருவி தேடுவது Closure, Redemption (in a round about way), ஒரு சுத்தமான முற்றுப்புள்ளி. இதுவும் ஒருவித சமுதாய அளவீடுதானே. தேவ் டி யில் இதையும் உடைத்திருக்கிறார் அனுராக்...அங்கு ஹிந்தி அருவி தேடுவது 'தொடர்ச்சி', continuity.
கதையை நகர்த்திச்செல்லும் துப்பாக்கியும் பண்ணையார் கதையும் வலிந்து திணிக்கப்பட்டது அவற்றின் தேவை வரும்போதே தெரிந்துவிடுகிறது. இந்த props இயல்பாக அமைந்திருந்தால் இன்னும் உயரம் தொட்டிருப்பீர்கள்...
அற்புதமான நடிப்பு அதிதி பாலன். தமிழ் சினிமா உங்களை விழுங்கிவிடாமல் காக்க லூமியர் சகோதரர்களை வேண்டிக்கொள்கிறேன்!
அருவி பட போஸ்டர்ஸ்...வாவ்!...வாவ்!
தமிழ் சினிமாவின் தரத்தை தூக்கிப்பிடிக்கும் அருவிக்கு வாழ்த்துக்கள். ஊடக விமரிசனங்களின் தரமும் அதுபோல உயர்ந்தால் நலம்! வாய்வழி பரவிய படத்தின் திறன் கேட்டு உந்தப்பட்டு படம் பார்க்க வந்தவர்கள் படம் முடிந்து செல்கையில் 'நல்ல படமா இல்லையானு தெரியல. ஆனா இது மாதிரி படங்கள் அவசியம் வரணும்' என பேசிச்சென்றது மகிழ்வளித்தது.
நான்?...மீண்டுமொருமுறை தேவ் டி பார்க்கலாமென்று இருக்கிறேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக