இளைஞன், அரசருக்கெல்லாம் அரசராக வேண்டியவன், தந்தையின் காமத்திற்காக அரசை துறக்கிறான். தந்தையின் மனம் கவர்ந்த மீனவப்பெண்ணின் தகப்பனோ 'அது மட்டும் போதாது - என் மகளின் மைந்தர்கள் அரசாள வேண்டுமென்றால் தேவ விரதனுக்கு குழந்தைகளே பிறக்கக்கூடாது என்கிறான்.
'குழந்தைகள் என்ன,எனக்கு தாம்பத்யமே வேண்டாம், நான் பிரம்மச்சரியன் ஆனேன். பெண்களை தொடேன், என் தகப்பனாய் மதித்து அவன் வாரிசுகள் யார் அரியணையில் அமர்ந்தாலும் அவர்களை பணிவேன், காப்பேன்' என்று விரதம் பூணுகிறான். தேவர்களும் வாழ்த்துகின்றனர்.
தகப்பனின் மகனுக்கு திருமண வயது வந்ததும், அவன் விருப்பப்பட்ட பெண்களை, அவர்களுக்கு சுயம்வரம் நடந்து கொண்டிருக்கும்போதே கவர்ந்து வருகிறான்.
மூன்று பெண்கள், சகோதரிகள், அரச குமாரிகள். அம்பை, அம்பிகை, அம்பாலிகை.
அம்பையின் மனம் கவர்ந்த அரசன் சால்வன் தேவ விரதனை மறித்து போரிடுகிறான். சால்வன் தோற்கிறான். தேவ விரதன் மூவரையும் அழைத்துச்செல்கிறான். வழியில் அம்பை தன் மனம் கவர்ந்த சால்வனை பற்றி அவனிடம் கூறி சால்வனையே மணக்க விரும்புவதாக கூறுகிறாள். மற்ற இருவரையும் தன் தம்பிக்கு மணமுடித்து வைத்து விட்டு அவன் அம்பையை சால்வனிடம் திரும்ப அழைத்துச்செல்கிறான்.
தோல்வியில் துவண்ட சால்வனோ அவளை ஏற்க மறுக்கிறான் - போரில் வென்ற அனைத்தும் வென்றவருக்கே சொந்தமென்றும் தான் தானம் ஏற்பதில்லை என்றும் சொல்கிறான்.
தேவ விரதனோ பிரம்மச்சரியம் காப்பவன். அவளை தன் குரு பரசுராமரிடம் இட்டுச்செல்கிறான். அவர் அவளை மணக்க அவனை வற்புறுத்துகிறார். அவன் மறுக்கவே தன்னோடு போரிடுமாறு அழைக்கிறார்.
23 நாட்கள் நடந்த போரில் யாரும் வெல்ல முடியவில்லை. பரசுராமர் சாகா வரம் பெற்றவர்.
தேவ விரதனின் முன்னோர்கள் அவனுக்கு உதவ ஒரு அஸ்திரம் தருகிறார்கள். அது பரசுராமரை போர்க்களத்தில் தூங்க வைக்க வல்லது. தூங்குபவன் தோற்றதாக கருதி ஒதுங்குவான் என்று இந்த ஏற்பாடு.
தேவ விரதன் அந்த அஸ்திரத்தை தன் குருவின் மீது செலுத்த மறுக்கிறான். பரசுராமரின் முன்னோர்களும் போரை கைவிட அவரை வேண்டுகின்றனர். தன் சீடனின் குணத்தை மெச்சி அவனுக்கு அவன் விரும்பும்போது மட்டுமே மரணம் கிட்டும் என்று வரமளிக்கிறார். அம்பையை மறந்து, போகிறார்.
அம்பை எல்லோராலும் கைவிடப்பட்டதால் சினந்து சபதம் பூணுகிறாள் - தேவ விரதனின் மரணம் தன் கையால் நிகழ வேண்டும் என்று...
தான் சுத்த வீரனாகவேண்டும் என்று சிவனை வேண்டி தவமிருக்கிறாள். சிவன் அவளுக்கு மறு பிறவியில் அவள் எண்ணம் ஈடேறும் என்று வரமளிக்கிறான். காத்திருக்க விருப்பமின்றி அவள் தன்னுயிரை உடனே மாய்த்து மறு பிறவி எடுக்கிறாள், சிகண்டி என்ற பெயரில்.
ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் ஒரு தோற்றம். திருநங்கையல்ல; ஆணென்று எண்ணி நோக்குபவர் கண்ணுக்கு ஆணாகவும், பெண்ணென்று நோக்குபவர் கண்ணுக்கு பெண்ணாகவும்.
வித்தைகள் அனைத்தும் கற்றுத்தேர்ந்து நல்ல தருணத்திற்காக காத்திருக்கிறாள்.
எந்த நாடு தனக்கு வேண்டாமென்று தேவ விரதன் துறந்தானோ அதே நாட்டிற்காக அவனது வழித்தோன்றல்கள் தங்களுக்குள் போர் முழக்கமிட்டு நிற்க அவன் கவுரவரின் தளபதியாகிறான் - அதுவும் அரசன் வாரிசு துரியோதனன் வேண்டியதால் (தகப்பனுக்கு தந்த வாக்கு).
போரில் அவனை வெல்ல முடியாமல் பாண்டவர் தடுமாறும்போது சிகண்டி அர்ஜுனனிடம் சென்று தன் வேண்டுதலை கூறுகிறாள். மாவீரன் அர்ஜுனனும் பேடி போல சிகண்டியை தன் தேரில் முன்னிறுத்தி தேவ விரதனுடன் போரிடுகிறான். தேரோட்டுவது இறை. அம்பெய்வது இன்னோர் இறையின் மைந்தன். கேடயமாய் சிகண்டி!
பெண் மீது ஆயுதம் செலுத்த எந்த வீரனும் முனைவதில்லை. தேவ விரதன் வீரர்களுக்கெல்லாம் வீரன். தன் ஆயுதங்களை வீசி விட்டு வெறும் கைகளுடன் மரணத்தை எதிர்நோக்கி நிற்கிறான். அர்ஜுனன் மற்றும் சிகண்டியின் அம்புகள் அவனை இரக்கமின்றி துளைக்கின்றன. களத்தில் சாய்கிறான். உயிர் நீக்க முனைகிறான். கண்ணன் தடுக்கிறான் - 'பாஞ்சாலியை துகிலுரிக்கையில் நீ தடுக்கவில்லை - அதனால் உண்டான பாவம் நீங்க அம்புத்துளைகளோடு நீ போர் முடியும் வரையில் உயிரோடு இரு' என்கிறான்.
தேவ விரதன் அதற்கும் பணிகிறான். போர் முடிந்து பாண்டவர்கள் வென்றதும் உயிர் விட இதுவே தருணம் என்று முனைகையில் இன்னுமொரு விண்ணப்பம் நீள்கிறது. அரசாளுமையில் தேவ விரதனை விஞ்ச யாருமில்லை (நாடே இல்லாதவன் அவன்!) என்பதால் அவனது அனுபவத்தை தருமனுக்கு விட்டுச்செல்லவேண்டுமாம்.
அதையும் தந்துவிட்டு உயிர் துறக்கிறான் பீஷ்மன் எனப்பட்ட தேவ விரதன்.
தகப்பனின் அன்பறியாதவன், தாயின் கரிசனம் கிட்டாதவன், தகப்பனுக்காக அரசிழந்து, (இழந்த அரசை தம்பிக்காக பின்னர் அவன் வாரிசுகளுக்காக காத்து), இல்லறம் துறந்து, அதர்மத்தின் பக்கம் சாய்ந்த அரசனுக்காக தன் உயிரையும் இழந்து, இழப்பதற்கு முன் தான் கற்றதையும் தானம் செய்து, உயிரை இழக்கும் தருணத்தை முடிவு செய்யும் வரமிருந்தும் கண்ணன் கேட்டதால் அதை வேண்டியபோது பயன்படுத்தாமல் வேதனை அனுபவித்து...
இவை எதையுமே செய்யாத, எதையுமே இழக்காத கர்ணனை கொடை வள்ளல் என்று கொண்டாடும் கூட்டத்தில் நாமும் ஒருவரானோம்!
எல்லாம் கர்மா!
எல்லாம் கர்மா!
உண்மை! ஆனாலும் 'பீஷ்மர்' என்று முன்னதாவே தேவர்களிடமிருந்து பட்டம்பெற்றுவிட்டவருக்கு 'காெடைவள்ளல்' என்றுபெயரிடுவதாே பட்டம் சூட்டுவதாே அவரை சிறுமைப் படுத்துவதாகும் என்று எண்ணியதால் இந்த நிலமையாே, என்னவாே?
பதிலளிநீக்குபீஷ்மரை தியாகி என்று சுலபமாக கடந்து விடுகிறோம். அவர் தந்தைக்காக இழந்ததைப் பற்றி சிந்திக்க மறுக்கின்றோம்.. ��
பதிலளிநீக்குஆம் ... :-(
நீக்கு