மேற்குத்தொடர்ச்சிமலை. வார்த்தைகள்கூட பிரிக்க முடியாத மலைத்தொடர். மலை வீட்டில் காலை 4 மணிக்கு அலாரம்போல அம்மா எழுப்பிவிட, ரங்கு மழையில் முகம் கழுவும்போதே உள்ளே ஏதோ தளும்ப ஆரம்பிக்கிறது. 4 மணியிலிருந்து பொழுது விடிவதற்குள் அவன் சந்திக்கும் மனிதர்கள், காட்சிகள், சப்தங்கள் நம்மை வேறொரு உலகத்திற்குள் இழுக்கின்றன. ஒற்றையடிப்பாதைகளால் பிணைக்கப்பட்ட மலை எஸ்டேட் தேயிலைத்தோட்ட தினசரி வேலை, ஆபீஸ் வேலை போல 10 மணிக்கு தொடங்கி மாலை அந்தி சாய கரையேறுவதல்ல. கைரேகை தெரியாத இருளில் விழித்து கைரேகை தெரியாத நள்ளிரவிலும் நீளும் இவனது உழைப்பு. காணி நிலம் அவன் கனவு. திருமணம் கூட அதன் பின்புதான் என்ற வைராக்கியம். அவனிடம் மனதைக்கொடுத்த மாமன் மகள். அவள் திருமணத்திற்கான அவள் தகப்பனின் முயற்சி. அந்த முயற்சியில் இணையும் மலை மனிதர்கள், மனிதம் கசியும் இவர்களின் வாழ்வு, நம்பிக்கைகள் என விரியும் பெருமலைத்தொடரில் இனிய சகா ஒருவரின் ஏழ்மை காக்கும் குரல், அதை முடக்கத்துடிக்கும் மனிதர்கள், மலைத்தொடரை முடக்கத்துடிக்கும் 'வளர்ச்சி'... இதற்கு மேல் கதை தெரியாமல் படம் பார்ப்பதே இந்தப்படத்திற்கு...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!