உதிர்வதெல்லாம் முளைக்கும், ரோமம் தவிர!
ஒரு உணவகம்.
அழகற்ற ஒரு பெண் பணியாளர் உணவு பறிமாறுகிறாள்.
உணவருந்த வந்த நபர் இருக்கையில் அமர டம்ளரில் நந்நீர் வைக்கிறாள்.
'நன்றி' என்கிறார் அவர்.
பெண் முகத்தில் குழப்பம்.
'என்ன சொன்னீங்க?'
'நன்றி சொன்னேம்மா'.
...
அடுத்த இருபது நிமிடங்கள் அவள் இறகு முளைத்த தேவதையாய் மாறி அவரை தனி விருந்தினர்போல பார்த்துப்பார்த்து கவனிக்க வைத்தது அந்த ஒற்றைச்சொல், 'நன்றி'...
'நாம் மரங்களல்ல, உதிர்ப்பது முளைக்க' என்றுதானே எண்ணி 'மௌனமாய்' திரிகிறோம்...
பெருந்தவறல்லவா அது!
நாம் உதிர்ப்பது அனைத்தும் முளைக்கும், நம் ரோமம் தவிர.
வாழும் நொடியெலாம் ரோமமுதிர்க்கும் நாம், அவை உதிராதபோதும் நாமாக உதிர்க்கும் சொற்களும், நமக்குள்ளே உதிர்க்கும் எண்ணங்களும் முளைக்கும்! தழைக்கும்!!
ஏனெனில் நிலம் என்றும் நந்நிலம்தான்.
விதை எவ்விதமோ, சுரை அவ்விதமே!
மரங்களும் நாமும் எங்கு வேறுபடுகிறோம் தெரியுமா?
மரங்கள் உதிர்ப்பவை (விதைகள்) மட்டுமே முளைக்கும். ஆனால் தேவையான நேரத்தில், நாம் உதிர்க்க மறந்த சொற்களும், நினைக்க மறந்த எண்ணங்களும்கூட முளைக்கும்; விளைவு நம் கையில் இல்லாமல்.
இந்த விதைகள் மட்டுமே 'விதை எவ்விதமோ சுரை அவ்விதமே' என்ற அடிப்படை அமைப்பில் பொருந்தாத மரபுப்பிழை.
மரபணு மாற்றப்பட்ட உணவு, மரபணு மாற்றிக்கொண்ட மனிதர்கள்...
சொற்களும் எண்ணங்களும்?
வசூல் ராஜா / Munnabhai MBBS படத்தில் முப்பது வருடமாய் தரை துடைக்கும் பணியாளரின் பெயர் தெரியாத மேலாளருடன் அந்த பணியாளர் முன்னாவின் மேஜிக்குக்கு பின்னான தன் உணர்வுகளை பதியும் காட்சி நினைவிருக்கிறதா?
நாம் அனைவருமே ஏதாவது ஒரு நொடியில் 'நம்மிடம் யாராவது நம் செயலை உணர்ந்து கனிவாய் ஒரு சொல் சொல்ல மாட்டார்களா? ஒரு புன்னகையாவது தரமாட்டார்களா?' என ஏங்குபவர்கள்தான்.
முன்னாவாக இருப்பதும் அவ்வாறு இல்லாமலிருப்பதும்... அவரவர் விருப்பம்.
பின் குறிப்பு:
உதிர்ந்த இந்த மலரின் அழகு, நம் சொற்களிலும் எண்ணங்களிலும் இருந்தால், அதுவே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வு!
Super
பதிலளிநீக்கு