மேற்குத்தொடர்ச்சிமலை.
வார்த்தைகள்கூட பிரிக்க முடியாத மலைத்தொடர்.
மலை வீட்டில் காலை 4 மணிக்கு அலாரம்போல அம்மா எழுப்பிவிட, ரங்கு மழையில் முகம் கழுவும்போதே உள்ளே ஏதோ தளும்ப ஆரம்பிக்கிறது. 4 மணியிலிருந்து பொழுது விடிவதற்குள் அவன் சந்திக்கும் மனிதர்கள், காட்சிகள், சப்தங்கள் நம்மை வேறொரு உலகத்திற்குள் இழுக்கின்றன.
ஒற்றையடிப்பாதைகளால் பிணைக்கப்பட்ட மலை எஸ்டேட் தேயிலைத்தோட்ட தினசரி வேலை, ஆபீஸ் வேலை போல 10 மணிக்கு தொடங்கி மாலை அந்தி சாய கரையேறுவதல்ல. கைரேகை தெரியாத இருளில் விழித்து கைரேகை தெரியாத நள்ளிரவிலும் நீளும் இவனது உழைப்பு.
காணி நிலம் அவன் கனவு. திருமணம் கூட அதன் பின்புதான் என்ற வைராக்கியம்.
அவனிடம் மனதைக்கொடுத்த மாமன் மகள். அவள் திருமணத்திற்கான அவள் தகப்பனின் முயற்சி. அந்த முயற்சியில் இணையும் மலை மனிதர்கள், மனிதம் கசியும் இவர்களின் வாழ்வு, நம்பிக்கைகள் என விரியும் பெருமலைத்தொடரில் இனிய சகா ஒருவரின் ஏழ்மை காக்கும் குரல், அதை முடக்கத்துடிக்கும் மனிதர்கள், மலைத்தொடரை முடக்கத்துடிக்கும் 'வளர்ச்சி'... இதற்கு மேல் கதை தெரியாமல் படம் பார்ப்பதே இந்தப்படத்திற்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்க முடியும்.
தமிழில் இப்படி ஒரு படமா என வியக்கவேண்டாம். மனிதனுக்கும் மண்ணுக்குமான உறவை, உழைப்பவனின் கனவை, அவன் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் அவனைத்தாங்கும் மண்ணின் மௌனத்தை 'வாழ்வின் தரிசனம்' போல, நம்மை மலை முகடுகளிலும் கரடுகளிலும் அலையவிட்டது, தவிக்கவிட்டது, இப்படத்தின் உச்ச வெற்றி, தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல; சினிமாவுக்கு!
ஏலக்காய் மூட்டை இளைப்பாறுகையில் முட்டுக்கொடுக்கும் சிறுகல்லில் பொதிந்திருக்கும் வாழ்வியல், தாத்தன் மரம், தாத்தன் மரம், உழைப்பேறிய முதியவனின் வீரம் / வீம்பு, இன மத மொழிகள் தாண்டிய பேரன்பு, அத்தாவாக இருக்கட்டும், அவர் மகளாக இருக்கட்டும், விதவை தாயாக இருக்கட்டும், கங்காணியாக இருக்கட்டும், சகாவாக இருக்கட்டும், அத்தனை பேரிடமும், இங்கு குறிப்பிடாதவரிடமும்கூட பீறிடும் அன்பின் ஊற்று... அந்த மண்ணின் இயல்பு, நாம் இழந்த இயல்பு...
சகா, இப்படத்தில் வாழ்ந்த ஜீவன்களிலேயே நிங்கள் மாத்திரம் தனி்ச்சு சகா! இயல்பான உடல்மொழியாகட்டும், இவர் கண்களில் தளும்பும் மொழிகடந்த மனிதமாகட்டும், இக்கட பூமி அக்கட பூமி ரெண்டிலும் ஒரு ரவுண்டு வருவீர்கள் சகா!
ஏலக்காயும் மல்லிப்பூவும் கங்காணியும் - என்ன இயல்பான பதிவுகள்! பரதேசியில் வரும் கங்காணி மாதிரி இல்லாமல், கலங்க வைக்கிறார் இந்த கங்காணி.
டேனியல், நான் மேற்குதொடர்ச்சிமலையில் என் பயணங்களில் உங்களை சந்தித்திருக்க வாய்ப்பு நிறைய. அச்சு அசல் மலைவாசி! ஜெயித்துவிட்டீர்கள்!
ஏலக்காய் மூட்டை மலைமுகடுகளில் பயணம் செய்கையில் (ஆட்களோடும் ஆட்களற்றும்) உறைந்து, இறுதிக்காட்சியில் Zoom back முடிந்து டைட்டில் கார்டு திரையில் நகருகையில் எழும் ராஜாவின் இசை தரும் வலியில் கரைந்து, கசிந்து...
சப்தங்கள்... இந்தப்படத்தில் இயற்கை சப்தங்கள் கடத்தும் உணர்வுகளை எந்த இசையாலும் ஈடுசெய்ய முடியாது. பறவைகளின் சப்தம், மசூதி அறிவிப்பின் சப்தம், மலைக்காற்றின் சப்தம், மூச்சுக்காற்றின் சப்தம், அமைதியின் சப்தம் என இதன் அருமை உணர்ந்த இளையராஜாவின் முதல் இசையொலி படம் துவங்கி பதினைந்து நிமிடங்கள் கழித்து! கற்பனை செய்ய முடிகிறதா இந்த இசைமேதை இயற்கை இசைக்கு கொடுத்திருக்கும் மரியாதையை?
அவரின் இரண்டாவது இசையொலி இன்னும் பதினைந்து நிமிடம் கழித்தே!!
ஆனால் அவை ஒலிக்கும் நொடிகளில் திரைக்காட்சிகள் கூடுபாயும் வித்தைபோல் நம் உணர்வுகளுக்குள் பாய்வது... இவரது இசையில் மட்டுமே சாத்தியம், இது சத்தியம்!
கேக்காத வாத்தியம் கேக்குது ஊரான ஊருக்குள்ளே!
புள்ளகுட்டியெல்லாம் படிக்கவக்கிறீங்களோ இல்லயோ, வாழ்க்கைப்பாடத்த காமிச்சி கத்துக்கொடுக்க, கத்துக்க, இந்தப்படத்துக்கு அழைச்சிகிட்டு போங்கய்யா, போங்கம்மா!
மரத்தில் கட்டியபடி காற்றில் ஆடும் வேட்டியும் கதை சொல்லும், நம் வாழ்வின் பெருமை சிறுமைகளை... கண்ணீரை துடைக்கக்கூட மறந்து...
"அந்தரத்தில் தொங்குதம்மா
சொந்தம் எதுவுமில்லாத
ஏழ வாழ்க்க
முந்தியிது வந்ததம்மா
வந்ததிது என்ன இன்னு
யார கேக்க?
நீ தாங்கி கொல்லாது தாயே
தாங்காது தாங்காது தாயே
வேண்டாது நீ தந்த
வேணான்னு சொல்லாது
அந்தரத்தில் தொங்குதம்மா
சொந்தம் எதுவுமில்லாத
ஏழ வாழ்க்க
(இளையராஜாவின் beautiful interlude here, elevates the angst to greater depths...)
சுட்டெரிக்கும் வெயிலும் சூடாத்தெரியலே
ஊத்துமந்த மழையும் உள்ளே நனைக்கலே
கொட்டுகிற பனியும் குளிரா தெரியலே
வாட்டுகற பட்டினியும் வாழ்வ கெடுக்கலே
என்னென்ன வந்தாலும் ஏஞ்சாமி தந்ததுன்னு
ஓ ஓ ஓ என்னென்ன வந்தாலும் ஏஞ்சாமி தந்ததுன்னு
தள்ளாம தாங்கிவந்தோம் ஆனாலும் காலகாலம்
அந்தரத்தில் தொங்குதம்மா
சொந்தம் எதுவுமில்லாத
ஏழ வாழ்க்க
முந்தியிது வந்ததம்மா
வந்ததிது என்ன இன்னு
யார கேக்க?
(இளையராஜாவின் beautiful interlude continues here...)
வானம்பாத்த பூமிபோல வாழ்க்க கெடுக்குது
மானத்தோட வாழ்ந்திருந்த மண்ணு கொடுக்குது
அக்கம்பக்கம் வாழ்ந்த சனம் ஆளாப்பறக்குது
தொப்புள்கொடி வெட்டிப்புட்டு தூரதேசம் பறக்குது
(I was overcome by a sudden bout of sobbing while typing these four lines above...)
ஏம்மண்ணு எனப்பாக்க
நாந்திரும்பி அதப்பாக்க
ஏம்மண்ணு எனப்பாக்க
நாந்திரும்பி அதப்பாக்க
ஏழேழு தலமுறயும் இதுபோல போனதம்மா
ஏழேழு தலமுறயும் இதுபோல போனதம்மா
(Haricharan singing with lot of feel... by now tears roll down the sides...)
அந்தரத்தில் தொங்குதம்மா
சொந்தம் எதுவுமில்லாத
ஏழ வாழ்க்க
முந்தியிது வந்ததம்மா
வந்ததிது என்ன இன்னு
யார கேக்க?
"
இன்று காலை 9.30 காட்சி, தியேட்டரில் என்னோடு சேர்த்து மொத்தம் ஏழு பேர், ஏழு பேர்!
படம் பார்க்க வந்தவர்களை விட தியேட்டர் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகம்...
இது மாறும். கூட்டம் மொய்ப்பதற்குள் பார்த்துவிடுங்கள்.
விஜய் சேதுபதி, வாழ்த்துக்கள், உங்களுக்கும் குழுவினருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக