தமிழகத்தில் ஒரு சிறு தன்னார்வக்குழு, வாய்ப்பு அறியா திறமைசாலி ஏழை மாணவ மாணவச்செல்வங்களுக்கு, நல்ல உயர்கல்வி (+2 முடித்தவுடன்) தகவல்களை கொண்டு சேர்த்து, விண்ணப்பங்கள் வாங்கித்தந்து, நிரப்பி, கல்லூரிகளில் நேரடியாக சேர்ப்பித்து, கல்லூரி தலைமையிடம் இவர்களுக்காக இறைந்து இலவசமாய் சீட்டு வாங்கி. அந்த மாணவ, மாணவியரை கல்லூரிக்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி... என அவசியமான செயல்களை சத்தமின்றி செய்து வருகின்றனர்.
சற்று தினங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தையை மாலையில் கல்லூரிக்கு சேர்க்க அழைத்துச்சென்ற
ஆர்வலர்: 'சாப்ட்டியாம்மா?'
பெண் குழந்தை : "ஓ, சாப்ட்டேனே"
ஆ: 'என்ன சாப்பிட்டே?'
பெ.கு: "ரெண்டு இட்லிண்ணா, காலைலயே சாப்ட்டேன்"
ஆ: 'ஏன்மா, மத்யானம்?'
பெ.கு: "ஸ்கூல் போகைல சத்துணவு கெடச்சது. இப்ப லீவ் விட்டாச்சா, அவ்ளோதான் தினம் தாத்தாவால குடுக்க முடியும்...
நீங்க சாப்டீங்களாண்ணா?"
ஆ: 'ஓ'
பெ.கு: "என்ன சாப்பாடுண்ணா"
ஆ: (அலுத்துப்போன சப்பாத்திம்மா என மனதில் நினைத்துக்கொண்டு) 'சப்பாத்திம்மா'
பெ.கு: "ஹையா, ஒம்பது மாசத்துக்கு முன்ன ஒரு கல்யாண ரிசப்ஷன்ல சாப்டதுண்ணா!"
70 ஆண்டு சுதந்திரம், ஆட்சி மாற்றங்கள், பொருளாதாரம் உலகமயமாகி கணிப்பொறி வந்து ஜிடிபி வளர்ந்து நம் நாடு உலகப்பேராசைபெருவணிக சங்கிலியில் முதன்மையான கண்ணியாக மாறிப்போய் நாம் இந்தியன்டா என மார்தட்டி, குளிரான உணவகத்தில் பாதி உணவை ஒதுக்கி அவசரமாய் டிப்ஸ் தந்து வெளியேறி விரைந்து செவ்வாய்க்கும் சந்திரனுக்கும் பாலம் கட்டுவதில் மும்முரமாயிருப்பதால், பசியடைத்த இந்தக்குழந்தையின் வியப்பு நம் செவிளில் அறையும் ஓசை, கேட்குமா என்ன?
உன் கண்ணில் நீர் வழிந்தால், என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி...
கருத்துகள்
கருத்துரையிடுக