எந்த பின்புலமும் எந்தத்துறையிலும் இல்லாமல், ஒரு மனிதன், ஒரு தமிழன், தன் வாழ்நாளில் தொடக்கூடிய உச்சத்துக்கு இவரை கண்டிப்பாய் எடுத்துக்காட்டாக கூற முடியாது. ஏனெனில் இவர் உச்சத்தை தாண்டியவர். தனிப்பிறவி. பல துறைகளில் இவர் தொட்ட உயரங்களே வரும் தலைமுறைக்கு புதிய உச்சங்கள்!
அவர் பயணம் செய்த குதிரை ஒவ்வொன்றும் ராட்சத உழைப்பை தீனியாக கேட்கும், அசந்தால் ஆளை விழுங்கி ஏப்பம் விடும்; ஆனால் இவர் அவை அனைத்தையும் தன் சுண்டி இழுக்கும் திறமையால் அடக்கி ஆண்டவர்.
திரை (கதை, திரைக்கதை, வசனம், நாயகர்கள்), பத்திரிகை, அரசியல், இலக்கியம் என இவர் தன் வாழ்வை செதுக்கியபோது உதிர்ந்த துகள்களும் புகழ் பெற்றன.
கலைஞர் எனும் இயந்திரத்தின் சக்தியில் புகழ் வெளிச்சத்தின் இரு கண்களாய் சிவாஜியும், எம் ஜி ஆரும். தமிழகத்தின் தங்க தருணம், அரை நூற்றாண்டு,1950-2000 இந்த மும்மூர்த்திகளால் நகர்த்தப்பட்டது.
இவர் தோளோடு தோளுரசிய புகழ் மனிதர்கள் ஏராளம், உலக அரங்கிலும்தான்.
இவரோடு மடிந்தது திராவிட ஜோதியின் பெருவிளக்கு. இதனின்று சிதறிய கங்குகள் சில காலம் கனன்று மறையலாம்; அதில் ஒன்று கூட ஒரு நூற்றாண்டு ஜோதி தராது...
ஒரு நூறாண்டு வாழ்வில் ஒரு துறையில் உச்சம் தொட்ட கணக்கை தொடர்ந்தால், நான்கு துறைகளில், ஒவ்வொன்றிலும் உச்சம் தொட்ட நூறாண்டு என வளர்ந்து, குடும்பங்கள் வளர்த்த கணக்கில் இன்னொரு நூறு சேர, இந்த ஒற்றை மனிதனின் ஆயுள் ஐநூறு ஆண்டுகள்!!
இவரது அரசியல், குடும்பம் என குறைகள் ஏராளம் இருந்தாலும் இவரை நாம் விரும்பவோ வெறுக்கவோ முடியுமே தவிர ஒருபோதும் புறம் தள்ள முடியாது.
எனக்கு, ஏன் நம்மில் அநேகம் பேருக்கு அரசியல் தெரியாது. ஊடகங்கள் தரும் தகவல்களை வைத்தே நம் அரசியல் நிலைப்பாடு இருக்கும், மாறும்.
ஆனால் ஊடகங்களுக்கு அப்பால் ஒரு மாபெரும் தமிழறிஞராய் இவரது எழுத்து... இவர் செய்த மற்றவை அனைத்தும் செய்யக்கூடிய மனிதன் இனி ஒருவன் தோன்றினாலும், இவரளவு உயரத்துக்கு தமிழை அவனால் தூக்கிச்செல்ல முடியவே முடியாது.
கலைஞரின் தமிழுக்கு அஞ்சலி, இதயபூர்வமாய்...
கருத்துகள்
கருத்துரையிடுக