முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வாழ்வைத்தேடி- 4

தோட்டத்தொழிலாளர்களும் கங்காணிகளும் அயர்ந்து உறங்கும் பின்னிரவில் அந்த ஜோடி, குழந்தைகளின் வாய்களில் துணி திணித்து கட்டி (பயந்து ஓசை எழுப்பினால் கதை முடிந்தது!), அவர்களுக்காக காத்திருந்த கள்ளத்தோணியை நோக்கி ஓசையின்றி நகர, இயற்கை உபாதையின் உந்துதலால் கண்விழித்த வயதான கங்காணியின் கண்ணில் பட, வெடித்தது துப்பாக்கி. அவர் காலில் குண்டு பாய, மயங்கி விழுந்தவர் மீண்டும் கண்விழித்தபோது கால் கட்டுடன் சிறையில் இருந்தாராம். குழந்தைகளுடன் தப்பியோடிய அவரது மனைவி பித்துப்பிடித்துப்போய் அவரைக்காணாமலே மரித்தாளாம். மரிப்பதற்கு முன் அவளது குழந்தைகளிடம் அவர்களின் தகப்பன் கருநீல வால் பொன்கழுத்து பறவையை கண்டதால்தான் இப்படி ஆயிற்று என்றும், அன்று முதல் அவர்கள் அந்தப்பறவையை பார்ப்பதையே தவிர்க்கவேண்டுமென்றும் சத்தியம் வாங்கிக்கொண்ட பின்பு இறந்துபோனாளாம்.  அவன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்; 'ஏன் இந்தப்பறவை தொடர்ச்சியாக தலைமுறை தலைமுறையாக, தொலைதூர பூமியில் வாழும் எங்கள் பார்வையில் பட்டுக்கொண்டேயிருக்கிறது? அது என்னதான் சொல்ல முயல்கிறது?' அடுத்த சில நாட்களில் இந்த நிலத்தில் வாழும் தன் இன மக்களில் மிக மிக வயதா...

வாழ்வைத்தேடி - 03

  கோழிக்கிறுக்கல் போல கையெழுத்தில் அவனது அப்பா அவரது மூதாதையர்களின் வாழ்வு குறித்து அவ்வப்பொழுது எழுதிய குறிப்புகள் அவை. ஏதோ ஒரு புரியாத மொழி பேசும் தேசத்துக்கு தோட்டத்தொழிலாளியாக அப்பாவின் முப்பாட்டன் வந்தது, வியர்வையும் ரத்தமும் சிந்தி பயிர் வளர்த்தது, சக மனுஷி ஒருத்தியை காதலித்தது, கடி மணம் செய்தது, சொந்த மண்ணுக்கு அவளுடன் தப்பியோட முயன்று குண்டடி பட்டு சிறையில் கிடந்தது, பின்பு வெளியே வந்து குடும்பம் வளர்த்ததில் தொடங்கி முப்பாட்டன் வாழ்வின் முதன்மையான சம்பவங்கள் வரை அவருக்கு தோன்றியபோதெல்லாம் ஒரு ஒழுங்கற்ற வரிசையில் எழுதி வைத்திருந்ததை வாசித்தான். அந்தக்குறிப்புகள் அவனை அலெக்ஸ் ஹேலியின் வேர்கள் என்கிற நெடுங்கதையோடு ஒப்பிட வைத்தது (Roots: The Saga of an American Family, by Alex Haley) குறிப்பேட்டை புரட்டிக்கொண்டே வந்தவன் ஒரு குறிப்பை வாசிக்கையில் ஒரு மெல்லிய அதிர்வை உணர்ந்தான். அது, அவனது முப்பாட்டன் கண்ட பொன் கழுத்து கருநீல வண்ண வால் பறவை பற்றியது! அவர் சீரமைத்துக்கொண்டிருந்த தோட்டத்தில் ஒரு பொன் அந்தி மாலைப்பொழுதில் அன்றைய பணி முடித்து தங்குமிடம் திரும்ப ஆயத்தமாகையில் எங்கிருந...

வாழ்வைத்தேடி - 02

முந்தைய வருடம்தான் விபத்தொன்றில் பெற்றோரை இழந்திருந்தான். அவர்களைத்தவிர அந்த தொலைதூர பூமியில் அவனுக்கு உறவென யாருமில்லை, நாய் / பூனை வளர்ப்பதில் அவனுக்கு ஆர்வமுமில்லை. நிலவின் வீச்சு மெல்ல மெல்ல கூடத்தொடங்கியது. நதிக்காற்றின் குளிரும் கூடியது. நேரம் கடந்தது பற்றிய உணர்வின்றி அப்பறவையையே பார்த்துக்கொண்டிருந்தான். பின்னிரவு நேரத்தின் ஏதோ ஒரு நொடியில் பறவையின் இசைக்குரல் தாலாட்டில் சற்று கண்ணயர்ந்தான்.  விழித்து நோக்குகையில் மேசையில் பறவையில்லை. அது அமர்ந்திருந்த இடத்தில் அது இட்டுச்சென்றிருந்த எச்சம் மட்டும் நிலவில் ஒளிர்ந்தது. அவன் ஒரு ஒளிப்படக்கலைஞன். தனது ஒளிப்பட கருவியின் வழியே அந்த எச்சத்தை படமாக பதிவு செய்துகொண்டான். பின்னர், யாருமற்ற தன் வீட்டை நோக்கி, யாருக்காக போவது என சிந்தித்தவண்ணம் பின்னிரவின் நிலவொளியில் நனைந்தபடி மெல்ல, மிக மெல்ல நடந்தான். வீடடைந்தான், தனது ஒலிப்பதிவுக்கருவியில் பதிவு செய்திருந்த பறவையின் கானத்தை ஒலிக்கவிட்டு... எப்பொழுது என அறியாமலே உறங்கிப்போனான். அதுபோன்றதொரு ஆழ்ந்த உறக்கம் அவனது பிள்ளைப்பருவத்திற்கு பிறகு அன்றுதான் வாய்த்தது. பறவையின் கானம் மனதெங்கு...

வாழ்வைத்தேடி - தொடர் - 01

கடினமான மலை முகட்டின் மீது ஏறி நின்றான். காலடியில் கோடிக்கணக்கான வருடங்களாக இயற்கை உருவாக்கியிருந்த பாறைகள் இருள் நிலவில் பளபளத்தன. பாறைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித காலடிச்சுவடுகள் கண்டான். 'நமக்கு முன்னே எத்தனை எத்தனை பேரை தாங்கியிருக்கும் இந்தப்பாறை!' என வியந்தான். மலை முகடு முடியும் சரிவில் இருந்து தொடங்கிய கானகத்தின் கனத்த இருள் நிலவு வெளிச்சத்தைக்கூட உள்நுழைய விடாத அளவு காட்டின் மீது கவிழ்ந்திருந்தது. ஓசையற்ற இரவை துளைப்பது போல அவ்வப்போது பறவைகளின் ஓசை, விலங்குகளின் ஓசை எழும்பி அடங்கியது. கடலில் அலை போல கானக இருளில் ஓசைகள் என எண்ணி ஓசையின்றி நகைத்தான். எதற்காக இங்கு வந்திருக்கிறான்? என்ன வேண்டும் அவனுக்கு? பல ஆயிரம் மைல்கள் தாண்டிய நிலப்பரப்பொன்றில் பல்லாண்டு அமைதியாக வாழ்ந்தவன், பெரிய விருப்பங்கள் எதுவுமில்லாது நாட்களை கழித்தவன், எப்படி இங்கு வந்தான்? அந்த நிலத்தில் ஒரு கடுமையான பனிப்பொழிவு தின நிலவு இரவில் ஆட்களற்ற ஒரு நதிக்கரையில் தன்னோடு தானே உணவு அருந்திக்கொண்டிருந்தவனுக்கு இதுபோன்ற ஒரு கானகப்பரப்பு இருப்பது பற்றியோ அதில் அவன் தேடவேண்டியவை பற்றியோ எவ்வித உணர்வு...

நிழலும் வெயிலும்

இருளோடு இருளாய் கரைந்திருந்து, வெளிச்சம் வர உறங்காது காத்திருந்து (வெளிச்சத்தின்) முதல் கீற்று வந்தவுடன் நடமாடத்தொடங்குது நிழல். எவ்வளவுதான் முயன்றாலும் வெளிச்சம் காட்டும் எல்லையை தாண்டாது நிழல்; தாண்டவும் முடியாது. நிழல் விழும் ஓசை கேட்டதுண்டா யாரேனும்?  இருள் கண்டு மருள்பவர் எவரும் நிழல் கண்டு அஞ்சுவதில்லை தெரியுமா? நிழல் சுகம், எப்பொழுதும். ஆனால் முப்பொழுதும் நிழலில் தங்கும் எதுவும் வளர்வதில்லை கண்டீரா?! வெயிலுக்கு அஞ்சி நிழலில் ஒதுங்கும் எதையும் மீண்டும் வெயில் தீண்டினால்தான் வாழும். நிழலும் வெயிலும் கலந்து செய்த கலவைதானே வாழ்வு இங்கு! வெயிலாக சில நேரம், நிழலாக சில நேரமென மாறி மாறி வாழும் இப்பெருவாழ்வில் வண்ணங்கள் மட்டும் எப்பொழுதும் நிறம் மாறா. நிழலோடு வெயில் உரையாடுவதை காண்பதும் கேட்பதும் பேரனுபவம். இது கிடைக்க யாரும் கடுந்தவம் எதையும் செய்யவேண்டாம், சற்றே காற்றடிக்கும் வேளையில் ஒரு மரத்தடியில் சற்றே நின்றாலே போதும். நம் காலடியில் கொட்டிக்கிடக்குது வாழ்வும், அனுபவமும். அள்ள முடிந்தவரை அள்ளினாலும் குறையாது மண்ணில் புரளுது நிழலும் வெயிலும்! ஒரு நாள் இலையொன்று உதிரும், அன்று நிழ...

தலைப்பில்லா பதிவு!

தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் மேம்பாலம் மீது விரையும் வாகனங்களுக்கு அந்த காட்சியை பார்க்கும் வாய்ப்பு இல்லை. மேம்பாலத்தை அணுகும் இருபுற பள்ளமான சாலைகளிலும் பச்சையும் பழுப்புமாய் அறுவடையான பயிரை தினமும் காலையில் பரப்பி பின்மாலையில் சேகரித்து, அதுவரையில் காவல் காத்து என இயங்கும் பலப்பல மனிதர்களையும் நம் தின வாழ்வில் நாம் சந்திக்க நேர்வதில்லை. தம்முடைய துண்டு நிலங்களில் எள்ளு விதைத்து பாடுபட்டு பயிராக்கி அறுவடை செய்து, உலர்த்த இடமின்றி (உலர்த்தினால்தான் எள்ளு விதைகள் காய்ந்து வெடித்து தரையிறங்கும்) சாலையில் காயவைத்து, உதிர்ந்து உலர்ந்த எள்ளை சேகரித்து மூட்டை கட்டி, எந்த வணிகன் என்ன விலைக்கு கேட்டாலும் உடனே விற்று பயிர்க்கடனை அடைக்க தவிக்கும் இந்த மனிதர்கள் விளைவித்த எள்ளுதான் இந்த புழுதிச்சாலைகளில் இருந்து வண்டியேறி ஆலையில் அரைபட்டு புட்டியில் அடைபட்டு பளிச்சிடும் அங்காடி தட்டுகளி்ல் பல மடங்கு உயர்ந்த விலையில் நம்மை வசீகரிக்கும். எள்ளு மட்டுமல்ல, பலப்பல சிறுதானியங்களும் இதே முறையில்தான் நம் தேசிய நெடுஞ்சாலைகளில் காய்கின்றன. ஆனால் ஒரு பெருந்துயரம் என்னவென்றால் நம்மில் அநேகர் இந்த உணவுப்பொருட்கள...

அணிநிழற்காடு!

  நிழல் அணிந்த காடு. இளங்காலை நேரம். மரங்களில் கிளைகளில் இலைகளில் மோதித்தெறித்து, தரைநிழல் காட்டும் பரப்புக்குள்ளே கட்டுண்டு கிடக்குது சிதறிய சூரியனின் வெளிச்சத்துண்டுகள்.  காற்று புரட்டும்போதெல்லாம் இந்த நட்சத்திரத்துண்டுகள் கூடு விட்டு கூடு பாய்ந்து நிழற்பரப்பில் காட்டுது ஓய்விலா மாய ஜாலம். இரவு முழுதும் போர்த்தியிருந்த பனிப்போர்வையின் கிழிந்த துணுக்காய் புல் நுனியில் தொங்கும் நீர்த்திவலையில் பட்டுத்தெறிக்குது உடையாச்சூரியன். தரையில், இலையில், கிளையில் எல்லாம் அப்பியிருக்கும் நிழலிடையே நட்சத்திரம் நட்சத்திரமாக தேடி பயணம் போகும் சிற்றுயிரனைத்தும் பருகியும் ஒரு சொட்டு கூட தீராது இந்த நட்சத்திர வெளிச்சம். மழை பெய்யும் நாட்களில் மட்டுமே கரைந்தோடும் இந்த வெளிச்சச்சிதறல்கள் கரைந்த நீரிலும் ஜாலம் காட்டும் மாய வித்தையை எத்தனை பேர் ரசித்திருப்போம்? இரவிலே நட்சத்திரங்களை அண்ணாந்து ரசிக்கும் மனிதர்கள் ஏனோ தம் காலடியில் இறைந்து கிடக்கும் இந்த பகல் நட்சத்திரங்களை அவ்வளவாய் ரசிப்பதில்லை. அவர்களை இரவில் மட்டுமே நட்சத்திரங்களை தேடப்பணித்திருக்கிறது கற்ற வாழ்க்கை, அதுவும் நேரமும் ஆர்வமுமிருந...