இருளோடு இருளாய் கரைந்திருந்து, வெளிச்சம் வர உறங்காது காத்திருந்து (வெளிச்சத்தின்) முதல் கீற்று வந்தவுடன் நடமாடத்தொடங்குது நிழல்.
எவ்வளவுதான் முயன்றாலும் வெளிச்சம் காட்டும் எல்லையை தாண்டாது நிழல்; தாண்டவும் முடியாது.
நிழல் விழும் ஓசை கேட்டதுண்டா யாரேனும்?
இருள் கண்டு மருள்பவர் எவரும் நிழல் கண்டு அஞ்சுவதில்லை தெரியுமா?
நிழல் சுகம், எப்பொழுதும். ஆனால் முப்பொழுதும் நிழலில் தங்கும் எதுவும் வளர்வதில்லை கண்டீரா?!
வெயிலுக்கு அஞ்சி நிழலில் ஒதுங்கும் எதையும் மீண்டும் வெயில் தீண்டினால்தான் வாழும்.
நிழலும் வெயிலும் கலந்து செய்த கலவைதானே வாழ்வு இங்கு!
வெயிலாக சில நேரம், நிழலாக சில நேரமென மாறி மாறி வாழும் இப்பெருவாழ்வில் வண்ணங்கள் மட்டும் எப்பொழுதும் நிறம் மாறா.
நிழலோடு வெயில் உரையாடுவதை காண்பதும் கேட்பதும் பேரனுபவம். இது கிடைக்க யாரும் கடுந்தவம் எதையும் செய்யவேண்டாம், சற்றே காற்றடிக்கும் வேளையில் ஒரு மரத்தடியில் சற்றே நின்றாலே போதும்.
நம் காலடியில் கொட்டிக்கிடக்குது வாழ்வும், அனுபவமும். அள்ள முடிந்தவரை அள்ளினாலும் குறையாது மண்ணில் புரளுது நிழலும் வெயிலும்!
ஒரு நாள் இலையொன்று உதிரும், அன்று நிழலொன்று குறையும். அதனாலென்ன போச்சு வாழ்வில்? குறைந்த நிழலை இட்டு நிரப்ப புதிய இலையொன்று துளிர்க்கும், வாழ்வு வளர்க்கும், நிழலுக்கும் வெயிலுக்கும் முடிவற்ற உரையாடல் நீளும், இப்பதிவு போல!
பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்
கருத்துரையிடுக