கோழிக்கிறுக்கல் போல கையெழுத்தில் அவனது அப்பா அவரது மூதாதையர்களின் வாழ்வு குறித்து அவ்வப்பொழுது எழுதிய குறிப்புகள் அவை.
ஏதோ ஒரு புரியாத மொழி பேசும் தேசத்துக்கு தோட்டத்தொழிலாளியாக அப்பாவின் முப்பாட்டன் வந்தது, வியர்வையும் ரத்தமும் சிந்தி பயிர் வளர்த்தது, சக மனுஷி ஒருத்தியை காதலித்தது, கடி மணம் செய்தது, சொந்த மண்ணுக்கு அவளுடன் தப்பியோட முயன்று குண்டடி பட்டு சிறையில் கிடந்தது, பின்பு வெளியே வந்து குடும்பம் வளர்த்ததில் தொடங்கி முப்பாட்டன் வாழ்வின் முதன்மையான சம்பவங்கள் வரை அவருக்கு தோன்றியபோதெல்லாம் ஒரு ஒழுங்கற்ற வரிசையில் எழுதி வைத்திருந்ததை வாசித்தான்.
அந்தக்குறிப்புகள் அவனை அலெக்ஸ் ஹேலியின் வேர்கள் என்கிற நெடுங்கதையோடு ஒப்பிட வைத்தது (Roots: The Saga of an American Family, by Alex Haley)
குறிப்பேட்டை புரட்டிக்கொண்டே வந்தவன் ஒரு குறிப்பை வாசிக்கையில் ஒரு மெல்லிய அதிர்வை உணர்ந்தான். அது, அவனது முப்பாட்டன் கண்ட பொன் கழுத்து கருநீல வண்ண வால் பறவை பற்றியது!
அவர் சீரமைத்துக்கொண்டிருந்த தோட்டத்தில் ஒரு பொன் அந்தி மாலைப்பொழுதில் அன்றைய பணி முடித்து தங்குமிடம் திரும்ப ஆயத்தமாகையில் எங்கிருந்தோ அச்சிறு பறவை அவர் நடந்த தடத்தின் ஒரு சிறு மரக்கிளையில் வாலாட்டியபடி அமர்ந்திருந்ததாம். அவரது கவனத்தை அதன்பால் ஈர்த்தது அது எழுப்பிய மென்சோக இசையொலியாம். அதை கண்டவுடன் அவர் நிலைகுலைந்துபோனாராம். ஏனெனில் அது அவருக்கு மிகத்தெரிந்த பறவையாம். அவரது சிறு வயது முதலே அவருடைய வீடருகே இருந்த கானகத்தில் தினமும் காட்டுத்தாயின் பரிசுகளை சேகரிக்கையில் அவரது மதிய உணவை அப்பறவையின் கூட்டத்துடன்
பகிர்ந்தபின்பே உண்பாராம்.
சில மணி நேரங்கள் அந்தப் பறவையின் சோக இசையில் கட்டுண்டு தன்னை மறந்து நின்றிருந்தவர் அதன் பின் சுய நினைவு திரும்பி, பின்னிரவில் வீடடைந்து கவலையுடன் காத்திருந்த காதல் மனைவியிடம் நடந்ததை பகிர்ந்தாராம்.
அன்றிரவு அவருக்கு உறக்கமே இல்லையாம். சிறு வயதில் அவரது காட்டூரில் ஆடித்தொங்கிய காட்டு மரங்கள், கானக உயிர்கள் என அவரது பால்ய வாழ்க்கை அவர் மீது பச்சை மண்ணின் பிசுபிசுப்போடு ஒட்டிக்கொண்டதாம்.
அதன் பின்புதான் அங்கிருந்து தன் தாயகம் தப்பிச்செல்ல முடிவெடுத்தாராம். கொத்தடிமைகளாக குடியேற்றம் செய்யப்பட்ட எளியவர்க்கு அது ஒரு பெருங்கனவாம்.
அவரது குறிப்பேட்டை வாசி்த்துக்கொண்டிருக்கையில் அதில் ஒரு இடத்தில் 'தாயகம்' என்கிற தலைப்பில் தொடங்கிய ஒரு பக்கத்தில் ஒரு நிலத்தின் பெயர் மட்டுமே திரும்பத்திரும்ப எழுதப்பட்டு இருந்தது. அது, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் காண்பித்த அதே நிலப்பெயர்! அவனது பூர்வீக நிலத்தின் பெயர்.
பல தலைமுறைகளுக்கு முன் அவன் இப்போதிருக்கும் நிலத்திற்கு வந்த அவனது மூதாதையர்கள் இங்கேயே இருந்து வாழ்வு பெருக்கி இறந்துபோனதை அவனது தகப்பன் வழி கதைகளாக கேட்டிருந்தாலும் மூதாதையரின் பூர்வீகம் அவன் அது வரை அறியாத ஒன்று.
தொடரும்.

கருத்துகள்
கருத்துரையிடுக