முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்வைத்தேடி - 02


முந்தைய வருடம்தான் விபத்தொன்றில் பெற்றோரை இழந்திருந்தான். அவர்களைத்தவிர அந்த தொலைதூர பூமியில் அவனுக்கு உறவென யாருமில்லை, நாய் / பூனை வளர்ப்பதில் அவனுக்கு ஆர்வமுமில்லை.


நிலவின் வீச்சு மெல்ல மெல்ல கூடத்தொடங்கியது. நதிக்காற்றின் குளிரும் கூடியது. நேரம் கடந்தது பற்றிய உணர்வின்றி அப்பறவையையே பார்த்துக்கொண்டிருந்தான்.


பின்னிரவு நேரத்தின் ஏதோ ஒரு நொடியில் பறவையின் இசைக்குரல் தாலாட்டில் சற்று கண்ணயர்ந்தான். 


விழித்து நோக்குகையில் மேசையில் பறவையில்லை. அது அமர்ந்திருந்த இடத்தில் அது இட்டுச்சென்றிருந்த எச்சம் மட்டும் நிலவில் ஒளிர்ந்தது.


அவன் ஒரு ஒளிப்படக்கலைஞன். தனது ஒளிப்பட கருவியின் வழியே அந்த எச்சத்தை படமாக பதிவு செய்துகொண்டான். பின்னர், யாருமற்ற தன் வீட்டை நோக்கி, யாருக்காக போவது என சிந்தித்தவண்ணம் பின்னிரவின் நிலவொளியில் நனைந்தபடி மெல்ல, மிக மெல்ல நடந்தான். வீடடைந்தான், தனது ஒலிப்பதிவுக்கருவியில் பதிவு செய்திருந்த பறவையின் கானத்தை ஒலிக்கவிட்டு... எப்பொழுது என அறியாமலே உறங்கிப்போனான். அதுபோன்றதொரு ஆழ்ந்த உறக்கம் அவனது பிள்ளைப்பருவத்திற்கு பிறகு அன்றுதான் வாய்த்தது.


பறவையின் கானம் மனதெங்கும் எதிரொலிக்க, ஒளிப்பதிவுக்கருவியை இயக்கி அந்த பறவையெச்ச படத்தை உற்றுநோக்கினான். அது ஒழுங்கற்ற ஒரு சிதறலாக இல்லாமல் ஏதோவொரு வரைபடம் போல தோன்றியது. அதை தனது மடிக்கணணியில் பதிவேற்றி, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கொண்டு ஆராய்ந்தான். 


'இந்த நிலப்பரப்பு பற்றிய தகவல்கள் வேண்டுமா?' என்கிற வினாவுடன் அந்த மென்பொருள் திரையில் காட்டியது ஒரு நிலத்தின் பெயருடன் கூடிய புவியியல் வரைபடம்! அவன் இருக்கும் இடத்திலிருந்து பல்லாயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் ஒரு நிலம்; அவன் கேள்விப்பட்டிராத நிலம்!


ஏதோ நினைவு உந்த, அவன் தனது அப்பாவின் அறைக்குள் நுழைந்தான். 


அவர் தனது இறுதி நாட்களில் கரும் பச்சை நிற அட்டை அணிந்த குறிப்பேடு ஒன்றை பல முறை புரட்டிப்பார்ப்பதும், பின்னர் கண்கள் நிலை குத்த கிழக்கு திசை நோக்கி சில மணி நேரம் தனித்து அமர்ந்திருந்ததையும் அவனது நினைவில் வந்து போனது.


பரபரப்பான வாழ்வு ஓட்டத்தில்  'அவர் ஏன் அப்படி அமர்ந்திருந்தார்? அந்த குறிப்பேட்டில் அப்படி என்ன இருந்தது?' என ஒரு முறை கூட அவன் நின்று கேட்டதில்லை, உரையாடியதும் இல்லை என்கிற நினைப்பு கண்களில் ஈரமாய் படர, அவரது மேசையின் மூலையில் பல புத்தகங்களுக்கு அடியில் இருந்த அந்த குறிப்பேட்டை தேடி எடுத்தான்.


தொடரும்.

கருத்துகள்

  1. சுவாமிநாதன்11 மே, 2026 அன்று 9:42 AM

    இதோ இங்கே அதே பரபரப்பை படபடப்பினை நானும் உணர்கிறேன்... சீக்கிரம் குறிப்பினை காண வேண்டும் 😀

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...