நிழல் அணிந்த காடு.
இளங்காலை நேரம்.
மரங்களில் கிளைகளில் இலைகளில் மோதித்தெறித்து, தரைநிழல் காட்டும் பரப்புக்குள்ளே கட்டுண்டு கிடக்குது சிதறிய சூரியனின் வெளிச்சத்துண்டுகள்.
காற்று புரட்டும்போதெல்லாம் இந்த நட்சத்திரத்துண்டுகள் கூடு விட்டு கூடு பாய்ந்து நிழற்பரப்பில் காட்டுது ஓய்விலா மாய ஜாலம்.
இரவு முழுதும் போர்த்தியிருந்த பனிப்போர்வையின் கிழிந்த துணுக்காய் புல் நுனியில் தொங்கும் நீர்த்திவலையில் பட்டுத்தெறிக்குது உடையாச்சூரியன்.
தரையில், இலையில், கிளையில் எல்லாம் அப்பியிருக்கும் நிழலிடையே நட்சத்திரம் நட்சத்திரமாக தேடி பயணம் போகும் சிற்றுயிரனைத்தும் பருகியும் ஒரு சொட்டு கூட தீராது இந்த நட்சத்திர வெளிச்சம்.
மழை பெய்யும் நாட்களில் மட்டுமே கரைந்தோடும் இந்த வெளிச்சச்சிதறல்கள் கரைந்த நீரிலும் ஜாலம் காட்டும் மாய வித்தையை எத்தனை பேர் ரசித்திருப்போம்?
இரவிலே நட்சத்திரங்களை அண்ணாந்து ரசிக்கும் மனிதர்கள் ஏனோ தம் காலடியில் இறைந்து கிடக்கும் இந்த பகல் நட்சத்திரங்களை அவ்வளவாய் ரசிப்பதில்லை. அவர்களை இரவில் மட்டுமே நட்சத்திரங்களை தேடப்பணித்திருக்கிறது கற்ற வாழ்க்கை, அதுவும் நேரமும் ஆர்வமுமிருந்தால் மட்டுமே.
உடைந்த நட்சத்திரங்களின் மீது மிதித்து நடந்து வேறேதோ வெளிச்சம் தேடும் இவர்களால் இரு சின்னஞ்சிறிய நட்சத்திரத்துணுக்குகளை கூட ஒட்டவைக்க இயலாது என்பதை உணரக்கூட நேரமில்லை இவர்களுக்கு.
மிதிபட்ட நட்சத்திரமெதுவும் துவளுவதில்லை கண்டீரா? மிதித்ததன்மீதே ஏறி வெளிச்சம் காட்டும் கலையை, மிதித்ததையே திரையாய் மாற்றி அதன்மேலே நடனமிடும் கலையை சொல்லாமல் சொல்லித்தரும் ஆசானும் அதுவே.
காணும் யாதையும் அறிவியல் கொண்டு அறுத்துப்பார்ப்போமென அலையும் ஒரு பெருங்கூட்டம் இந்த நட்சத்திர துணுக்குகளை ஒருபோதும் அள்ளி எடுத்துச்செல்லமுடியாது அவர்களது ஆய்வகத்திற்கு.
இவர்கள் இப்படி இங்கே துவக்கத்திலிருந்து இருந்ததில்லை. இந்த மாற்றம் ஒரு இடை நிகழ்வு.
இவர்கள் அனைவரும் புதிய கல்வி கற்கத்தொடங்கும் வரை இந்த நட்சத்திர சிதறல்களை வியந்து கையில் பிடித்து விளையாடியவர்கள்தான், இவற்றின் சிதறலில் களிநடனம் ஆடியவர்கள்தான். நடனம்தான் எங்கோ தடம் மாறிப்போனது...
ஆனாலும் இவர்கள் காண மறந்தாலும் ரசிக்க மறந்தாலும் வியக்க மறந்தாலும் கொண்டாட மறந்தாலும் நேற்று போலவே இன்றும் சிதறிக்கிடக்குது இந்தச்சூரியன் நமைச்சுற்றி. நாளையும் சிதறிக்கிடக்கும், நாளை மறுநாளும் அந்நாளுக்கு மறுநாளும் அதன் பின்னரும் கூடத்தான்.
மழையை அருந்தும் சக்கரவாகம்கூட வெயிலை அருந்தினால்தான் உய்க்கும். நாம் மட்டும் விதி விலக்கா என்ன!
பேரன்புடன்,
பாபுஜி

அடடா... அருமையான இலக்கிய,இலக்கண கோர்வையாக உள்ளது. இயற்கையை ரசித்தல் இனிமை... அந்த இரசனையை தேன் இட்டு, திரண்ட வெண்ணையுடன் இந்த பதிவில் காண்கிறோம். இடையிடையே நாம் தொலைத்த வாழ்வியலை சுட்டும் ஆற்றாமை அருமை🙏
பதிலளிநீக்கு