முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலென்பது எதுவரை?

 


ஒரு மகளிர் மருத்துவமனை.

பரபரப்பான நாளொன்றின் முன் பகல் வேளையில் காத்திருப்போர் இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன.

எங்களது இருக்கைக்கு முந்தைய வரிசையில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். எங்களை விட பல வயது சிறியவர்கள். குழந்தைப்பேறு தொடர்பான ஆலோசனைக்காக வந்திருந்தனர் என அவர்களது கைகளில் இருந்த காகிதக்கோப்பு சொல்லாமல் சொல்லிற்று. எளிய தோற்றம் இருவருக்கும்.

அன்று மிகுந்த கூட்டம் என்பதால் கத்திருக்கும் நேரம் நீண்டுகொண்டிருந்தது.

அவர்கள் இருவரும் உரையாடல் எதுவுமின்றி அழைப்புக்காக காத்திருந்தனர். 


சிறிது நேரம் கடந்ததும் அது நிகழ்ந்தது. அந்தப்பெண் மெல்ல அவனது தோளில் தலை சாய்த்துக்கொண்டாள். அவனது தோள் கோடு அப்படியே நிமிர்ந்திருந்தது. நான் அவர்களை கடந்து சென்று அந்த காத்திருப்பு அறையின் ஓரமாய் நின்றிருந்த ஒரு அலமாரியில் அடுக்கியிருந்த புத்தகங்களை துழாவத்தொடங்கினேன். The Last Lecture, The Monk and ... எனத்தொடங்கும் ராபின் ஷர்மாவின் நூல், ரேஷ்மி பன்சலின் சில நூல்கள், நடிகர் சிவக்குமார் எழுதிய நூல் ஒன்று என கதம்பமாய் குவிந்திருந்த நூல்களின் இடையில் 'Appa' என்கிற தலைப்பிட்ட ஆங்கில நூல் ஒன்று கண்ணில் பட்டது. எடுத்து, நின்றபடியே வாசிக்கத்தொடங்கினேன்.


கோவை புகழ் திரு. ஜி. டி. நாயுடு பற்றி அவரது மகன் திரு கோபால் நாயுடு எழுதிய நூல் அது. தமிழில் 'அப்பா' என்கிற தலைப்பில் சிவசங்கரி எழுதிய நூலை விரிவாக்கி, ஏராளமான புகைப்படங்கள் சேர்த்து, ஜி.டி.என் இன் மேன்மையை விவரிக்கும் நூல் அது. ஆர்வத்தை தூண்டும் புகைப்படங்கள், வாழ்வின் நிகழ்வுகள் என விரிவாக எழுதப்பட்ட நூலை சுமார் ஒரு மணி நேரம் அங்கு நின்றபடியே, மருத்துவமனை என்பதை மறந்து வாசித்துக்கொண்டிருந்தேன்.


அதில் ஒரு பகுதியில் திரு கோபால்ல் நாயுடு, தனது முதல் அன்னை, சொந்த அன்னை மற்றும் முதல் அன்னையின் பெண் குழந்தைகள் படங்கள் இருந்த பக்கத்தில் இப்படி எழுதயிருந்தார்; 'எனது தந்தையின் முதல் மனைவி, அவர்களது இரு மகள்கள். அதற்கடுத்ததாக இருப்பது என்னைப்பெற்ற தாயின் படம்' என எழுதி, இப்படி தொடர்கிறார்; 'எனது தந்தை, தனது தொடர் வளர்ச்சியால் வாழ்வின் புதிய உயரங்களை அடைந்துகொண்டிருந்த இந்த நேரத்தில் அவரது வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை மேட்டிமைப்படுத்திக்கொள்ள அவரது முதல் மனைவியால் இயலாமல் போக, அவரை விவாகரத்து செய்து பின் எனது அன்னையின் கரம் பற்றினார்.'


'He divorced her since she did not behave in a way that reflected his growing stature'  என எழுதியிருக்கிறார்.


இது உண்மையான காரணமாக இருந்தால், அவரது மகனே எழுதியிருப்பதால் உண்மையாகத்தான் இருக்கும்.... ஜி.டி. நாயுடு என்கிற மனிதரின் மகத்துவம் (stature) என்னைப்பொறுத்தவரையில் அந்த நொடியில் சிதைந்துபோனது. ஜி. நாகராஜனின் 'மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்' என்கிற வாசகம் ஏனோ நினைவில் வந்துபோனது.


அதற்கு மேல் வாசிக்க மனமின்றி நூலை மூடி அதன் இடத்தில் மீண்டும் சேர்த்துவிட்டு திரும்புகையில் அனிச்சையாய் பார்வை அவர்களை தேடியது. அவள் இப்போது ஆழ்ந்த உரக்கத்தில். அவனது தோள் சில இஞ்ச் தாழ்ந்திருந்து, அவள் வாகாய் சாய்ந்து தூங்குவதற்காக. அவனும் கண்கள் மூடி உறக்கத்தில், சாய்வதற்கு தோள் எதுவும் துணையின்றி.


அந்த நொடியில் மனம் இலவம்பஞ்சு போல எடையற்றுப்போனது. எனது நாளின் வரம் சற்றே கூடியிருந்தது. 'இனிது இனிது காதல் இனிது. அதனினும் இனிது இணையரை காதலிப்பது' என மனது கவிதை எழுதத்தொடங்கியது. அவன் ஒரு நல்ல தகப்பனாகவுமிருப்பான் என உறுதியாய் தோன்றியது.


பேரன்புடன்,

பாபுஜி

படம்: திரும்ப வந்து இருக்கையில் அமர்ந்தபின்பு நான் எடுத்தது.


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...