இறந்த மற்றும் உயிருடன் இருந்த யானைகள் மூலம் கிடைத்த தந்தங்கள் தீர்ந்தவுடன், லியோபோல்ட்டின் கங்காணியான ஸ்டான்லி ஒரு புதிய இலக்கைக் கண்டுபிடித்தார்.
அதுதான் ரப்பர்.
காற்றை அடைத்து பயன்படுத்தக்கூடிய டயர்களைப் (inflatable tyres) பயன்படுத்தி வாகனங்களை இயக்குவதற்கான வழியை நவீன உலகம் அப்போதுதான் கண்டுபிடித்திருந்தது.
இதனால் வணிக ரீதியான ரப்பருக்கான தேவை உலகெங்கும் வெடித்தது.
ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது; ரப்பர் மரங்களை வளர்த்து ரப்பர் எடுக்க பல ஆண்டுகள் ஆகும்.
இந்த சிக்கலை தீர்க்கும் விதமாக ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் ஆப்பிரிக்கக் காடுகளில் ஏராளமாகக் காணப்படும் காட்டு ரப்பர் மர வகைகளை விரைவில் கண்டுபிடித்தனர். காங்கோவின் அடர்ந்த காடுகளில் இந்த மரங்கள் மிக அதிக அளவில் இருந்தன.
இதனைத் தொடர்ந்து காங்கோவின் காடுகள் எங்கும் எல்லையற்ற பேராசையுடனான சுரண்டல் அரங்கேறியது. எப்படி தெரியுமா?
உங்க்குலுவின் முப்பாட்டன், காங்கோ மண்ணின் மைந்தன், காட்டின் மடியில் நித்தம் உறங்கி எழும் தொல்குடி. இயற்கை காட்டிய வழியில் இயற்கை காட்டிய எல்லைக்குள் பெருவாழ்வு வாழும் ஒரு மூத்தகுடியின் இளைஞர்களில் ஒருவன்.
ஒரு மாலைப்பொழுதில் வெளுத்த தோல்கொண்ட மனிதர்கள் சிலரை முதல் முதலாக அவனது கூட்டத்தின் தலைவர் அழைத்து வந்தார். கூட்டத்தை கூட்டி அறிமுகம் செய்தார், 'இவர்களது எசமானர் நம் காட்டை சொந்தம் கொண்டாடுகிறார். நம்முடைய மூத்தோருடன் அவரது கங்காணி செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை நமக்கே தெரியாமல் திரித்து, நம் காடுகளில் அவர்களுக்கு வேண்டியது அனைத்தையும் தடையின்றி அவர்கள் எடுத்துக்கொள்ள நாம் அனுமதி தந்துவிட்டோம் என்கிறார். இது நமது கூட்டத்துடன் மட்டுமல்ல, நம் பூமியில் வாழும் இன்னும் பல கூட்டங்களுடனும்தான்' என்பதாக அவரது அறிமும் நீண்டது.
இள ரத்தங்கள் சற்றே கொதித்து, 'அதெப்படி திரித்து எழுதலாம்? நாம் எப்படி அவர்களை நம்புவது?' என வினவ, 'இந்த காட்டில் இயற்கை தவிர வேறென்ன இருக்கிறது எடுத்துச்செல்ல? நமக்கு ஈந்த காடு அவர்களுக்கும் ஈயட்டுமே' என தொல்குடிகளுக்கே உரித்தான பெருநரதன்மையுடனும் பேரனரபுடனும் அவர்களை காட்டுக்குள் அனுமதிக்கிறார்.
வந்தவர்கள் விருந்து உண்டு காட்டை நோட்டம் விட்டு பின்பு தமது பணியிடம் திரும்பி, கொளுத்திப்போடுகிறார்கள் கங்காணியிடம; 'எசமானே, அங்கிருக்கிற மரங்கள்ல ஏராளமான மரங்கள் பேய்வளர்த்தியிருக்கிற ரப்பர் மரங்கள் எசமானே!'
இதைக்கேட்ட ஸ்டான்லி என்ன செய்தார்?
வெடிமருந்து திணித்த துப்பாக்கி முனையில்
உள்ளூர் பெண்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டு, அக்கூட்டத்தின் ஆண்களை ரப்பர் சேகரிக்க காடுகளுக்குள் விரட்ட ஆணையிடுகிறார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ரப்பர் சேகரிக்க ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவும் இலக்கும் (quota) நிர்ணயிக்கப்பட்டது. ஒரு மனிதன் அந்த இலக்கை முடிக்கத் தவறினால், முடிக்கத்தவறினால்...
அவனது மனைவி அல்லது குழந்தைகளின் கைகள் துண்டிக்கப்பட்டு, அவனுக்கு "நினைவூட்டலாக" அனுப்பி வைக்கப்பட்டது. (இலக்கைத் தவறியதால் தனது பெண் குழந்தையின் துண்டிக்கப்பட்ட கைகளின் அருகே சோகத்துடன் அமர்ந்திருக்கும் ஒரு மனிதனின் படம் 1-ஐப் பார்க்கவும். படம் 2-இல் தங்கள் கணவர்களின் உழைப்புக் குறைபாட்டிற்காகக் கைகளை இழந்த காங்கோ பெண்களைக் காணலாம்).
இந்த பெருங்கொடுமையையும் நம்பிக்கை துரோகத்தையும் எதிர்த்துப் புரட்சி செய்த அந்த கூட்டத்தின் ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக தப்பிய ஒரு சிலர் காங்கோ காடுகளின் மிக ஆழமான பகுதிகளுக்குள் தப்பி ஓடி, அதனால் பிறகு மீண்டும் வரவே இல்லை. அப்படி உயிர் தப்ப ஓடி அடர்வனம் புகுந்தவர்களில் உங்க்குலுவின் முப்பாட்டனும் ஒருவன்!
முப்பாட்டனின் கதையை, சொந்த நிலத்திலேயே விலங்குகள் போல வேட்டையாடப்பட்ட அவர்கள் வாழ்வின் அவலத்தை கதை கதையாக கேட்டு வளர்ந்த உங்க்குலு, 'லியோபோல்ட்! லியோபோல்ட்!' என புலம்பி அழுதது இதனால்தான்.
![]() |
| லியோபோல்ட் |
இப்படி ஆண்களும் பெண்களும் பிரிக்கப்பட்டு, தொடர்ந்து பயத்திலேயே வாழ்ந்ததால், பிறப்பு விகிதம் கடுமையாக குறைந்தது. அத்துடன், வளமான நிலங்களில் வேலை செய்ய உடல் ஆரோக்கியமுள்ள மனிதர்கள் இல்லாததால், விவசாய முறையும் கைவிடப்பட்டது. இதனால் ஏற்பட்ட பல பஞ்சங்கள் மேலும் பலரை பலிவாங்கின. இதன் விளைவாக, குறுகிய காலத்திற்குள் அவர்களின் மக்கள் தொகை பாதியாகக் குறைந்தது. அந்த பாதி மக்கள் தொகைக்கு என்ன நேர்ந்தது?
தொடரும்.



கருத்துகள்
கருத்துரையிடுக