தன்னைச் சுற்றியுள்ள அண்டை நாட்டு மன்னர்களும் உறவினர்களும் ஆப்பிரிக்காவைச் சுரண்டி பெரும் செல்வந்தர்களாக மாறுவதைப் பார்த்து பொறாமைத்தீ பற்றி எரிய, லியோபோல்ட், தானும் அந்த ஆட்டத்தில் இறங்க முடிவு செய்தார்.
ஆனால், அவரிடம் செல்வம் இல்லாதது மட்டுமின்றி வேறு சில குறைபாடுகளும் இருந்தன. அவரது சிறிய நாட்டிற்கு கடற்படையோ அல்லது வர்த்தகக் கப்பற்படையோ கிடையாது.
எனவே, ஏழை ஆப்பிரிக்கர்களுக்கு மேற்கத்திய நாகரிகம் மற்றும் வர்த்தகத்தின் நன்மைகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கம் கொண்ட ஒரு மதச்சார்பான பரோபகாரியாக அவர் தன்னை உலகிற்குக் காட்டிக் கொண்டார். புகழ்பெற்ற ஐரோப்பிய ஆய்வாளர்களையும் புவியியலாளர்களையும் ஒரு அரச மாநாட்டிற்கு அழைத்து, அவர்களின் பணிகளைப் பற்றி "தெரிந்து கொண்டார்". பின்னர் ஹென்றி மார்டன் ஸ்டான்லி (Henry Morton Stanley) என்ற ஆய்வாளரை ஆப்பிரிக்காவில் தனது "கண்களாக" செயல்பட வேலைக்கு அமர்த்தினார்.
ஒரு நல்ல நாளில் (அதாவது, காங்கோவுக்கு ஒரு கெட்ட நாளில்!) ஹென்றி, காங்கோ நதிப் படுகையைக் குறிவைத்தார். காங்கோ நாட்டிற்கு பயணம் செய்த ஹென்றி, லியோபோல்ட் சார்பாக கவனமாகத் திட்டமிடப்பட்ட வர்த்தக மையங்களையும் உள் கட்டமைப்புகளையும் அங்கு நிர்மாணிக்கத்தொடங்கினார்.
மேலும், ஹென்றி, காங்கோ படுகையின் பல பூர்வகுடி தலைவர்களுடன் லியோபோல்ட் சார்பாக தொடர்ச்சியான பல ஒப்பந்தங்களைச் செய்தார். அவர்களில் பெரும்பாலோர் படிப்பறிவில்லாதவர்கள். வெள்ளந்தியானவர்கள்...
எனவே பெரிதான சிந்தனை எதுவுமின்றி லியோபோல்ட் அங்கு வணிகம் செய்ய அவர்கள் அனுமதித்தனர். அந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் பின்னர் லியோபோல்டின் உத்தரவின் பேரில் அந்த பூர்வகுடி தலைவர்களுக்கே தெரியாமல் மாற்றியமைக்கப்பட்டன. அதாவது, ஹென்றி (லியோபோல்ட் சார்பாக) அந்த நிலங்களில் வேறு எவரது அனுமதியும் தேவையின்றி தான் நினைத்ததைச் செய்ய வழிவகை செய்து கொண்டார்.
அவரது முதல் இலக்கு காங்கோவின் யானைத் தந்தங்கள்!
இறந்த மற்றும் உயிருடன் இருந்த யானைகள் மூலம் (அவற்றை வேட்டையாடி கொன்று) கிடைத்த கணக்கற்ற தந்தங்களை, விலைமதிக்க முடியாத தந்தங்களை லியோபோல்ட்டுக்கு தொடர்ந்து அனுப்பினார். அப்படி கிடைத்த தந்தங்கள் தீர்ந்தவுடன், அவர் ஒரு புதிய இலக்கைக் கண்டுபிடித்தார்.
அதுதான் ரப்பர்!
மின்னுயிர்த்தப்பட்ட டயர்களை (inflatable tyres) பயன்படுத்தி வாகனங்களை இயக்குவதற்கான வழியை நவீன உலகம் அப்போதுதான் கண்டுபிடித்திருந்தது. (ராபர்ட் வில்லியம் தாம்சன் 1845 இல் வடிவமைத்த டயர் - வணிக ரீதியாக அவரால் செயல்படுத்த இயலவில்லை. ஜான் பாய்ட் டன்லப் 1857 இல் வடிவமைத்து வணிகமாக்கிய டயரை அறியாதவர்களே நம் உலகில் இல்லை எனும் அளவு பின்னாட்களில் பெருகிய வணிகம் அது).
அதனால் வணிக ரீதியான ரப்பருக்கான தேவை உலகெங்கும் வெடித்தது.
ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது; ரப்பர் மரங்களை வளர்த்து அவற்றிலிருந்து ரப்பர் பால் எடுக்க பல ஆண்டுகள் ஆகும். ஆனால் உலகளாவிய ரப்பர் தேவையோ 'உடனே வேண்டும், உடனே வேண்டும்' என்கிறதே, என்ன செய்யலாம் என சிந்தித்த ஹென்றி, என்ன செய்தார்?
தொடரும்.
படம்: டன்லப், 1847 இல் காப்புரிமம் பெற்ற வடிவமைப்பு

கருத்துகள்
கருத்துரையிடுக