முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்த நாள்!

 


நேற்றைய நாள் என் நெடுநாள் நண்பர்களான தாவரங்களோடு இனிதாக கரைந்தது. நாளை புத்தாண்டு தினம் என்பதை அவர்களுடன் பகிர்ந்தேன். புத்தாண்டு வாழ்த்துகளையும் சொன்னேன். என்னைச்சூழ்ந்த தாவரங்கள் அனைத்தும் என்னை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தன. பின்னர் அவர்களுள் மிக வயதான மரம் ஒன்று என்னிடம் மெல்லிய குரலில் உரையாடத்தொடங்கியது. அந்த உரையாடலின் முடிவில், 'ஒரு வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்து ஒன்று எழுத விரும்புகிறேன் நண்பர்களுக்காக. மிக சுருக்கமாக ஒரு விதை (idea) தாயேன்' என்றேன். 


"தருவேன். ஆனால் நீ அதை அப்படியே பகிர்வாயா என தெரியவில்லையே..." என்றது.


'ஏன் இப்படி சொல்கிறாய்?' என்றேன்.


"உங்கள் வாழ்வியல் வழக்கம் இந்த ஒரு நாளில் அனைவருக்கும் இன்பமும் மகிழ்ச்சியும் நிறைந்த வருடமாக இருக்கட்டும் என வாழ்த்து அனுப்பி, பின் வருடம் முழுதும் அதை மறந்துவிட்டு, ஒவ்வொருவரும் தமக்கு மட்டுமே இன்பமும் மகிழ்வும் தேடி ஓடுவது, அது அடுத்தவர்களுக்கு துன்பம் தந்தாலும்; உங்களது சக மனிதர்களை பற்றிய ஆழ்ந்த அக்கறை அந்த ஒரு நாள் மட்டும்தானே".


ஓ, இந்த உரையாடல் தளம் மாறுகிறதே என்று உணரத்தொடங்கினேன். சற்று நேரம் அமைதியாக சிந்தித்தேன். பின்னர்,  'உறுதியாய், மாற்றங்களின்றி அனுப்புவேன்' என வாக்களித்தேன். இதோ, நான் பெற்ற வாழ்த்தை ஒரு வரி கூட மாற்றாமல் உங்களுடன் பகிர்கிறேன். 


அந்த புத்தாண்டு வாழ்த்து:


"இன்று ஒரு நாளாவது ஆயுதங்களை சற்றே ஓய்வெடுக்கவிட்டு இளைப்பாறுவோம். இன்று புதிய வருடம் பிறந்திருக்கிறது. பிறந்த குழந்தைக்கு நாம் யார் என உணர்த்த நமக்கு நிறைய நேரமிருக்கிறது.


நாம் இளைப்பாறும் இந்த நாளில் மட்டுமாவது அவர்கள் நிம்மதியாக சுவாசிக்கட்டுமே. பாவம், எத்தனை காலம்தான் அவர்கள் போராடிக்கொண்டே இருப்பார்கள் இந்த நிம்மதிக்காக...


இறையே, இந்த ஆண்டாவது, யார் வாழ்வது யார் வீழ்வது என்பதை யார் யாரோ முடிவுசெய்யாமல் இருக்க மனது வையேன்...


அது என்னவோ தெரியவில்லை, நம்மால் வெட்டப்படும் ஒவ்வொரு இழையும் மீண்டும் துளிர்க்கவே விரும்புகிறது. அது மனிதராக இருக்கலாம், மரங்களாக இருக்கலாம், பறவைகள், விலங்குகள், பூச்சிகளாக இருக்கலாம், மலைகளாகவோ நதிகளாகவோ கடல்களாகவோகூட இருக்கலாம். ஏன், காற்றாகவோ நிலமாகவோ கூட இருக்கலாம். இவர்கள் எல்லோருக்குமானதுதானே நமது பூமி!


இந்த ஆண்டின் இந்த நாள் தொடங்கி இனி வரும் ஒவ்வொரு நாளுமே 'நலம் மீட்கும் நாளாக' மட்டுமே இருக்க (Day of Healing) வாழ்த்தி, அதை நனவாக்கவும் நாம் அனைவரும் சற்றே உழைப்போமே"


பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...