'இதனால் நம்ம ஏரியா அரை டவுசர்கள் சங்கம் நம் வீதி வாழ் அரை டவுசர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதென்றால்... ஜீன் மாதம் தொடங்கி மறு வருடம் மே மாத இறுதி வரை (பள்ளி விடுமுறை நீங்கலாக) தினந்தோறும் மாலையில் கீழ்க்கண்ட ஏதாவதொரு விளையாட்டில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென சங்கம் முடிவெடுத்துள்ளது!'
பளிங்கி விளையாட்டு,
பம்பரம்,
புளியாங்கொட்டை,
கிட்டிப்புள்,
ஐஸ் பாய் (கிறுக்கு புடிச்ச வெளிநாட்டுக்காரனுங்கோ நம்ப கேம ஐ ஸ்பைன்றாணுங்கோ!!) - அதாகப்பட்டது, கும்மோணத்து 'கல்லா மண்ணா?' விளையாட்டு.
அப்பால
செவன் ஸ்டோன்ஸ்,
ஹவர் சைக்கிள்!
இதில் முதலிரண்டு விளையாட்டுகளை ஏற்கனவே பாத்தாச்சி. எனவே கிட்டிப்புள்ளிலிருந்து தொடங்குவோம்.
ஒண்ணரை அடி நீள குச்சி ஒண்ணு, அரை அடி நீள குச்சி ஒண்ணு. இந்த அரையடி நீள குச்சியோட எதிரெதிர் முனைகளை ஜோராய் கூராய் சீவி வைத்துக்கொள்ளவும்.
ஷாட் பூட் த்ரீ போட்டு யார் முதலில் ஆடுவது யார் அடுத்தது என வரிசை நிர்ணயம் செய்யவும்.
தரையில் சின்னதாய் ஒரு நேர்கோட்டு பள்ளம் செய்து அதில் குறுக்காக முக்காலடி குச்சியை (புள்) வைக்கவும்.
நீளமான மற்றொரு குச்சியை (கிட்டி) அதனருகில் உள் பக்கத்தில் தொட்டு நிறுத்தி, ஒரு கையால் கிட்டியின் உச்சியை இறுகப்பற்றி, மறு கையால் கிட்டியின் அடிப்பகுதியை பலமாய் சாய்வாய் தட்டவும்.
உயரப்பறக்கும் சிறு குச்சியை மற்ற இரண்டாவது ஆட்டக்காரர், ஜான்ட்டி ரோட்ஸ் போல பாய்ந்து பிடிக்கவும். பிடித்தால் முதல் ஆட்டக்காரர் அவுட்!
பிடிக்கமுடியாவிட்டால், ஆட்டக்காரர் அந்த கிட்டியை தரைப்பள்ளத்தின் குறுக்காக வைக்கவும்.
இரண்டாமவர், புள் விழுந்த இடத்தை அடையாளமிட்டு, அந்த இடத்தில் நின்றவண்ணம் புள்ளை தூக்கி தரையில் கிடக்கும் கிட்டியை குறி பார்த்து அடிக்கவும்.
அடித்தால், ஆட்டக்காரர் அவுட். இல்லையென்றால்...! ஐயகோ!
புள் விழுந்த, அடையாளமிட்ட இடத்தில் புள்ளை இப்போது கிட்டியாளர் அதன் ஒரு முனையை மீண்டும் தட்டி, காற்றில் உயரும் புள்ளை பலம் கொண்டமட்டும் ஆட்டத்தின் தொடக்கப்புள்ளியின் எதிர்திசையில் பறக்குமாறு தாக்கவும். அடிபட்ட புள் பறந்து பறந்து, வெகுதூரம் சென்று தரையிறங்கும்.
இப்போது கிட்டியாளர் புள்ளின் ஒரு முனையை மறுபடி தட்டி, காற்றில் உயரும் புள்ளை பலம் கொண்டமட்டும் ஆட்டத்தின் தொடக்கப்புள்ளியின் எதிர்திசையில் பறக்குமாறு தாக்கவும். அடிபட்ட புள் மீண்டும் பறந்து பறந்து, வெகுதூரம் சென்று தரையிறங்கும்.
இந்த தாக்குதல், கிட்டியாளர் புள்ளுடன் கனெக்ட் ஆனால் தொடரும். அவர் புள்ளை அடிக்கத்தவறினால் அவரது ஆட்டம் அந்த இடத்தில் முடியும். ஆட்டம் முடிந்தால், ஐயகோ ஐயகோ!
இரண்டாவது ஆட்டக்கார் அங்கிருந்து தொடக்கப்புள்ளி வரை ஒற்றைக்காலில் நொண்டியடித்துக்கொண்டே புள்ளை கொணர்ந்து சேர்க்கவேண்டும். இடையில் சாலையில் நடக்கும் மனிதர்கள், விரையும் சைக்கிள்கள், மாட்டு வண்டிகள் எதிலும் மோதிக்கொள்ளாமல், இரண்டாவது காலை தரையில் ஊன்றாமல் அவர் புள்ளை கொண்டுவந்து சேர்த்தால் அவரது 'தண்டனை' முடியும். தப்பித்தடுமாறி இரண்டாவது காலை எங்காவது ஊன்றிவிட்டால்... Oh My God!! கிட்டியாளர் அந்தப்புள்ளியில் இருந்து மறுபடி புள்ளை அடித்து விரட்டுவார். எங்காவது ஒரு இடத்தில் அவர் 'வீசி, அடிக்காமல் விட்டால்', அந்த இடத்திலிருந்து தொடக்கப்புள்ளி வரை மறுபடி நொண்டியடித்தல் தொடரும்!!!!
வெற்றிகரமாக தொடக்கப்புள்ளியை அடைந்தால், சாதித்த பெருமையில் முதல் கிட்டியாளர் ஓய்வு பெறுவார்.
நொண்டியடித்து முடித்த இரண்டாம் ஆட்டக்காரர், இப்போது புதிய கிட்டியாளர்! அவர், தண்டனையால் உள்ளே கிடந்து மறுகும் கோபத்தை, மூன்றாவது ஆட்டக்காரருக்கு கடத்த
ஆயத்தமவார்.
ஆட்டம் இறுதி ஆட்டக்காரர் நொண்டியடித்து முடிக்கும் வரை தொடரும். இயற்கை சீற்றத்தினாலோ அல்லது வீட்டார் சீற்றத்தாலோ ஆட்டம் பாதியில் தடைபட்டால்... தடைபட்ட இடத்தை வீதியில் ஆடையாளமிட்டு, மறுநாளில் அந்த இடத்தில் இருந்து ஆட்டம் தொடரும். 'நாளையும் நொண்டியடிக்கணுமே' என்கிற கவலையில் ஒரு அரை டிக்கட்டு நைசாக இரவு உணவுக்குப்பின் வீட்டிலிருந்து நழுவி, அடையாள இடத்தை மாற்றி (தண்டனை தூரத்தை குறைப்பதற்காக) எழுத துடிக்கும், ஆனால் வேறு அரை டவிசர்களின் கண்களில் அந்தச்செயல் சிக்கிக்கொண்டால்... கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு எல்லா ஆட்டங்களில் இருந்தும் குற்றவாளி விலக்கிவைக்கப்படுவார்!!!
இருக்கிறதே மொத்தம் நலு பசங்கதான்னாலும் ரூல்சு ரூல்சுதான் ராசா!!!
கிட்டிப்புள்ளோட ரூல்ஸ் தெரியாத மூத்த பொடிப்பசங்களுக்கெல்லாம் அந்த விளையாட்டு ஒரு ஜிஜீபீன்னு தோணும். ரூல்ஸ் தெரிஞ்சவனுங்க... ஓடிடுவானுங்க :-)
'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித விளையாட்டா என்ன?' அப்டீன்னு எழுத நினைத்தேன். ஆனால் அந்த சொற்றோடர், செவன் ஸ்டோன்சுக்கு இன்னும் பொருந்தும் எனத்தோன்றியதால் தவிர்த்துவிட்டேன் :-)
விளையாட்டு தொடரும்.
பேரன்புடன்,
பாபுஜி
PC: diptiart in Tumblr

கருத்துகள்
கருத்துரையிடுக