"தனி மனிதர் விளையாட்டுகள் எல்லாம் விளையாட்டே அல்ல!"
இதுவே எங்கள் தாரக மந்திரம்.
கும்மோணத்தில் நாங்கள் விளையாடிய விளையாட்டுக்கள் எல்லாமே குழு விளையாட்டுக்கள்தான், சைக்கிள் ஓட்டுவது உட்பட!
கருவிகளும் அதிகம் தேவையில்லை, விலையும் மலிவு, அல்லது இலவசமாகவே கிடைக்கும் கருவிகளே!
1. புளியாங்கொட்டைகளை ஒரு கையளவு எண்ணி சம அளவில் எடுத்துக்கொள்ளவும்.
2. இரண்டு அல்லது இரண்டு+ ஆட்டக்காரர்கள் அவசியம்.
3. ஒரு இடத்தை 'நிற்குமிடமாக' மார்க் செய்து, அதில் இருந்து சில அடி தூரத்தில் உங்கள் சக்திக்கு தகுந்த அளவில் ஒரு முழு வட்டம் வரையவும். மையத்தில் ஒரு அடையாளமிடவும்.
4. முதல் ஆட்டக்காரர் ஒரு கொட்டையை மட்டும், 'நிற்குமிடத்திலிருந்து' வட்டத்து மையப்புள்ளியை இலக்காக கொண்டு தூக்கிப்போடவும்.
5. விழுந்த இடத்தை மார்க் செய்யவும்.
6. இப்படி எல்லா ஆட்டக்காரர்களும் முறை வைத்து தூக்கிப்போட்டு மார்க் செய்தபின் யாருடைய மார்க் மையப்புள்ளிக்கு மிக அருகில் உள்ளதோ அவரே ஆட்டத்தை தொடக்க அனுமதிக்கப்படுவார்.
3. அவர் எல்லோரது புளியங்கொட்டைகளையும் சேர்த்து, வட்டத்துள் கொட்டைகளை பரவலாக தூவி விடுவார்.
4. அதன் பிறகு தட்டையான ஓடு அல்லது சில்லு போன்ற கல் ஒன்றை (அளவு லிமிட்டெல்லாம் கிடையாது!) ஏற்கனவே மார்க் செய்திருந்த 'நிற்குமிடத்தில்' நின்றுகொண்டு வட்டத்தை இலக்கு வைத்து வீசுவார்.
5. அந்த தட்டையான கல்லினால் மோதப்பட்டு வட்டத்துக்கு வெளியே சிதறும் புளியங்கொட்டைகள் அனைத்தும் அவருக்கே!
6. இரண்டாம் ஆட்டக்காரர் மேற்சொன்ன 4 & 5 ஸ்டெப்புகளை செய்து அவர் பங்குக்கு அள்ளிச்செல்வார்.
7. கொட்டைகள் அனைத்தும் வட்டத்திற்கு வெளியே தள்ளப்படும் வரை சுழற்சி முறையில் ஆட்டம் தொடரும். அல்லது யார் வீட்டு பெரிசுகளாவது எங்களில் யாராவது ஒருவரது சொக்காயை கொத்தாகப்பிடித்து வீட்டுக்குள் இழுத்துச்செல்லும்வரை விளையாட்டு தொடரும் :-)
அதுவும் அந்த அந்தி சூரியன் சந்தி சாய மெல்ல இருள் பரவும் வேளையில் நாங்கள் ஆட்டக்காரர்கள் எல்லோரும் ஒரு heightened sense of acute focus உடன் ஆடுகளத்தை சுற்றி வருகையிலே, அந்த நேரம் பார்த்து எங்கள் வீடுகளில் இருந்து அழைப்பு வர, அரைமனதோடு பிரியாவிடை பெறுவோம், ஒவ்வொரு நாளும்!
பிறகு இரவு உணவு முடித்து, 'வாசல்ல காத்தாட ஒக்காந்திருக்கேன்' என ஒவ்வொருவராக நழுவி, டவுசர் பாக்கெட்டில் ஒளித்து வைத்திருக்கும் புளியங்கொட்டைகள் சிலவற்றை எங்கள் சாலையில் யார் வீட்டு விறகடுப்பிலாவது இட்டு சுட்டு... பகிர்ந்துண்டு திரும்புவோம். எங்களுள் ஏராளமான போட்டியிருக்கும். ஆனால் விளையாட்டு முடிந்ததும், பரிசுப்பொருட்களை இப்படி பகிர்ந்துண்டு மகிழ்தல் எங்கள் தலைமுறையினரின் வழக்கமாக இருந்தது (இன்று அநேக போட்டிகளில் தரப்படும் பதக்கங்களும் கோப்பைகளும் யாருக்கும் பயனின்றி ஒரு நாள் பழைய பொருட்கள் வாங்கிபவரிடம் சென்று சேர்கின்றன!).
பம்பரம், கிட்டிப்புல், பளிங்கி, செவன் ஸ்டோன்ஸ் என ஏகப்பட்ட குழு விளையாட்டுகள், விரிவான ஆனால் எழுதப்படாத சட்ட விதிகள். ஒவ்வொன்றையும் எழுதினால் இது ஒரு தனி சீரீசாக எழுதவேண்டியிருக்கும் :-)
ஒரு விளையாட்டில் வென்ற பொருள் இன்னொரு விளையாட்டின் பந்தயப்பொருளை வாங்கவும் உதவும் என்கிற 'பண்டமாற்று' வணிகத்தை நாங்கள் சிறு வயதிலேயே பழக இந்த விளையாட்டுகள் எங்களுக்கு உதவின.
எங்கள் தெருவிலேயே தானியங்கி கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடும் ஒரு வீட்டில் மட்டும் மோனோபோலி விளையாட்டின் முந்தைய அவதாரம் ஒன்று, Business என்கிற பெயர்கொண்ட அட்டை விளையாட்டு இருக்கும் (Board Game). நால்வர் அமர்ந்து விளையாடும் இவ்விளையாட்டில் ஏராளமான வீடுகள், பெட்ரோல் பங்க்குகள், வாகனங்கள் வாங்கலாம், வாங்கிய 'கட்டங்களை' வேறு யார் தாண்டினாலும் கப்பம் கட்டவேண்டும். அவ்வகையில் நிறைய காகித கரன்சிகளும் கிடைக்கும். ஆனால் அவற்றை வைத்து புளியங்கொட்டையோ, பளிங்கியோ, தெத்துக்கல்லோ, இரவல் காமிக்சோ கூட வாங்க முடியாது!
மன்னார்குடியில்... தொடரும். என முடிக்க நினைத்தேன். ஆனால் இன்னும் ஒரு பகிர்வாவது விளையாட்டுகள் பற்றி சுருக்கமாக எழுத ஆவல். என்ன செய்யலாம் நட்பே?!
தொடரும்.
பேரன்புடன்,
பாபுஜி
படங்கள்: Google Gemini எனக்காக வரைந்தது.


கருத்துகள்
கருத்துரையிடுக