முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கே செல்லும் இந்தப்பாதை?...



நேற்றுக்கும் நாளைக்கும் இடையிலான பொழுதில் எல்லையிலா பெருவாழ்வு வாழ எத்தனை கனவுகள்? இந்தப்பொழுதிலும் கனவு மயக்கத்தில் நமை வீழ்த்த எத்தனை எத்தனை முயற்சிகள்?


இன்றைய உலகை இன்றே நுகர்ந்து தீர்க்கும் பேராசையை நமக்குள் விதைத்து, தூப தீபம் காட்டி வளர்ப்பவரும் நம் போல மனிதர்தானே?


வேகம் வேகம் செயல்வேகமென முழங்கிக்கொண்டு இதோ, ஆந்திராவின் நர லோகேஷ் பல நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில், ட்ரில்லியனை தொடும் பெருங்கனவில் இன்றைய உலகை மொத்தமாய் நுகரத்துடிக்கும் பெருவணிகங்களுக்கு கம்பள வரவேற்பு தந்து பூரண கும்ப மரியாதை செய்கிறார். பக்கத்து மாநிலங்களுக்கு ஏற்கனவே வயிறு எரியத்தொடங்கிவிட்டதாக நகைக்கிறார். எரியப்போவதென்னவோ ஆந்திர ஆகாயம்தான், காணாமல் போகப்போவதென்னவோ ஆந்திர நிலத்தடி நீர்தான் என சிறுபிள்ளைத்தனமாக எண்ணுவோருக்கு ஒரு செய்தி, நாம் எல்லோருக்கும் ஒற்றை ஆகாயம், ஒற்றை பூமியே விதித்திருக்கிறது. பூமியின் தகவல்களை நிலவில் நாளை சேமித்து பூமிக்கே விற்க இன்றே கனவுகள் காணத்தொடங்கிவிட்ட பெருநிறுவனங்களுக்கு தற்காலிக நிறுத்தம்தான் நம் போன்ற நாடுகளின் இயற்கை வளங்கள்.


'மொத்தமாய் உறிஞ்சிவிட்டு உறிஞ்சியவன் நிலவுக்கு போய்விடுவான், ஓட்டைப்பானையில் ஒரு சொட்டு நீரின்றி கண்ணீரால்கூட நிரப்ப நம் மண்ணில் ஈரமிருக்காது' என அமெரிக்க மனிதர்கள் அனுமதி மறுத்த அவர்களது நிறுவனங்கள்தான்  அதே தொழில்களை நம் நாட்டில் நிறுவலாம் என விமானங்களில் கரன்சிகளை நிரப்பி்க்கொண்டு நம் வானில் வட்டமிடுகின்றன.


அவர்களது மந்திரம் மிக எளிதானது. 2008 இல் நிகழ்ந்த ஒரு உலகளாவிய பொருளாதார மோசடியில் (Sub Prime Crisis -  சல்லி கூட மதிப்பு இல்லாத கடன் பத்திரங்களை 'மிக மிக மதிப்பு மிக்க பத்திரங்கள்' எனச்சொல்லி, தாம் செய்வது தவறென நன்கறிந்த பெருவணிக நிறுவனங்கள் இவற்றை ஏமாளிகளின் தலையில் கட்ட, உண்மை வெளி வந்தபோது ஏற்பட்ட தாக்கத்தால் உலகெங்கும் பல நிறுவனங்களும் மனிதர்களும் நடுத்தெருவுக்கு வந்த அவலத்தை நம்மில் சிலர் அறிந்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கும் தெரியாதது, IBG & YBG WTSHTF என்கிற மந்திரம்.


சல்லிக்காசு கூட தேறாத கடன் பத்திரங்களை உயர்ந்த விலைக்கு ஏமாளிகளின் தலையில் கட்டிய பெரு வணிக ஊழியர்கள், தங்களுக்குள்ளே மின்னஞ்சலில் அடிக்கடி பறிமாறிக்கொண்ட மந்திரம் இது.


I (will) Be Gone & You (will) Be Gone When The Shit Hits The Fan என்பதன் குறு வடிவமே இந்த IBG & YBG WTSHTF என்கிற மந்திரம்!


இதன் பொருள் நம்மை மிக வேதனைப்படுத்தும் என்றாலும் பகிர்கிறேன்; மலம் கூரைக்காற்றாடியில் மோதி சிதறுவதற்கு முன்னரே நானும் ,(வேறு வணிகத்திற்கு / வேலைக்கு) போயிருப்பேன் நீயும் போயிருப்பாய். எனவே, அந்த காற்காடியின் கீழ் இருப்பவர்களுக்கு என்ன நடந்தால் என்ன? கொண்டாடுவோம்!


இப்போது இந்தியாவில் வரிசையாய் பண மூட்டைகளை சுமந்து வரும் பன்னாட்டு பெருவணிகம், இங்கு அமைக்கப்போகும் வணிகத்திற்காக எவ்வளவு நீரை பயன்படுத்தும்? எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தும்? இவற்றை எங்கிருந்து   நம் அரசுகள் தரப்போகின்றன? நமது தேவைகளே நிறைவேறாத பற்றாக்குறை நிலையில் இது சாத்தியமா? இதனால் நமக்கு என்ன பாதிப்புகள் வரும்? (நீர் வரி, மின்சார கட்டணம் உயருமா? நிலத்தடி நீர் குறையுமா? சுற்றுச்சூழல் மாசு அதிகமாகுமா?) என விரிவாக ஒளிவு மறைவின்றி அறிவிக்குமா இந்த நிறுவனங்களை அனுமதித்த நம் அரசு இயந்திரங்கள்? அமெரிக்க அரசே இது போன்ற கேள்விகளுக்கு தெளிவாக விடையளிக்கவில்லை என்பது வரலாற்று உண்மை!


இந்த நிறுவனங்கள் ஒரு கட்டத்தில் லாபம் குறையத்தொடங்க, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் செய்ய வேறிடம் தேடி நிலவுக்கு கூட சென்று சுரண்டுவார்கள். ஆனால் நாமும் நம் சந்ததியினரும் எங்கு போவது??


பேரன்புடன்,

பாபுஜி

PC: MSN News Website article about a Startup company planning to setup a solar powered data center in The Moon.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

கல்யாணம்!!!!

குளிரூட்டும் சாதனங்கள் விற்பனையகம் ஒன்றிற்கு சென்றிருந்தோம். இன்முகத்துடன் எங்களை வரவேற்றவர் ஒரு இளைஞர். ஒரு குறிப்பிட்ட சாதனம் பற்றிய எங்களது கேள்விகளுக்கெல்லாம் தெளிவாக நிதானமாக விளக்கம் கொடுத்தார். விலை மட்டும் நாங்கள் எதிர்பார்த்த விலையில் இல்லை என்றார். 'சரி, தொலைபேசி எண் கொடுங்கள். நாளை மீண்டும் வருகிறோம். வரும்போது அழைக்கிறோம்' என்றோம். அவரும் ஒரு எண்ணை தந்தார். அது அவருடையதா அல்லது கடை மேலாளருடையதா என்று கேட்டோம். 'நான்தான் மேலாளர். இது அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டும் எனது எண். அதற்கு பிறகு அழைத்தாலும் கடையில் பணியாளர்கள் யாராவது பேசுவார்கள்' என்றார். 'அது என்ன மூணு நாள் கணக்கு?' என்றோம். அதற்கு அவரது விடையை அப்படியே இங்கே பதிவு செய்கிறேன்: 'நான் வேலைய ரிசைன் பண்ணிட்டேன் சார். இன்னும் மூணு நாளுதான் இங்கே. அதன் பிறகு இந்த ஊர்லயே ஒரு ஐ.டி கோர்ஸ்ல சேர்ந்து ஆறு மாசத்தில coding கத்துகிட்டாகணும் சார். இல்லேன்னா கல்யாணமே ஆவாது சார்!' "சின்ன வயசாதான் தெரியறீங்க, நல்ல வேலைலயும் இருக்கீங்க. இருந்துமா பொண்ணு கிடைக்கல?" 'உங்களுக்கு தெரியாது ச...