முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மல்லிகை மனம்

 

எனது நகரின் ஒரு பிரபலமான பழக்கடை அருகே அவரை பார்த்தேன்.

பின் ஐம்பதுகளில் வயது இருக்கலாம். ஏழ்மை உடுத்திய உடலுடன் நடைபாதையில் ஒரு சிறு மேசை மீது பூக்கூடை வைத்து விற்றுக்கொண்டிருந்தார். சொற்பமாக சில ஞெகிழி பைகள் அவரது காலருகில்.


'பூ என்ன விலைம்மா?' என்றேன்.

அவர் சொல்லத்தொடங்கும் முன்னரே அவருக்கு அருகிலிருந்து ஒரு குரல், 'அண்ண, இங்க வாங்குங்கண்ணே' என ஒரு இள வயது பெண். அவரும் அதே பூக்களை விற்றுக்கொண்டிருந்தார்.


மெலிதான புன்முறுவலுடன் 'அவங்ககிட்டதான் கேட்டேன்மா, அங்கேயே வாங்கிக்கிறேன்' என்றேன்.

வயதானவரின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. பூக்கள் வாங்கும்போதுதான் கவனித்தேன், அவர் கொண்டு வந்நிருந்த பூப்பந்து அப்படியே இருந்ததை (அன்று வியாபாரம் டல்).

என் வீட்டிற்கென கொஞ்சம் வாங்கிக்கொண்டு, 'மிச்சத்தையும் வித்தாதான் வீட்டுக்கு போக முடியுமா?' என்றேன்.

ஆமாமென்றார்.

'இவ்ளோ நேரமாச்சே, இனிமேல யாரும் வாங்க வருவாங்களா?' என்றேன்.

கவலையுடன், "இல்லை"யென தலையசைத்தார்.

'மிச்சத்த நானே வாங்கிக்கிறேன், தாங்க' என்றதும் ஒரு நிமிடம் புரியாமல் விழத்தவர், மிக மிக மகிழ்வாகி பரபரவென ஒரு பொட்டலமாக கட்டினார்.

அருகில் இருந்த போட்டி வியாபார இளம்பெண் முகம் சுருங்க அமர்ந்திருந்தார்.

பொட்டலம் கட்டி தந்ததும் அதை அந்த வயதானவரிடமே திருப்பித்தந்து, 'உங்களுக்குதாம்மா இது. நீங்களே வைச்சுக்கோங்க' என்றேன்.

குழப்பமாக பார்த்தவரின் முகத்தில் கோடி வெளிச்சம். கண்கள் மெல்ல கலங்கியதை கவனித்தேன்.

இந்த சூழ்நிலையில் அவர் என்ன செய்திருக்கலாம்?

1. மகிழ்வாய் அவரது தலையில் சூடியிருக்கலாம்.  

2. வீட்டுக்கு எடுத்துச்சென்று உறவினருக்கு கொடுக்கலாம்.

3. நான் கிளம்பிய பிறகு மீண்டும் விற்றிருக்கலாம்...


அது ஏனோ தெரியவில்லை, வறியவர்களிடம் மட்டும் எங்கிருந்துதான் சக மானுடத்தின் மீது பேரன்பும் பெருங்கருணையும் ஊற்றாக சுரந்துகொண்டே இருக்கிறது என.


மெல்லிய புன்முறுவலுடன் மெலிந்த குரலில் அவர் சொன்னது, " நா வச்சிக்கமுடியாது சார். போன வருசம்தான் அவரு தவறிட்டாரு. அதனாலதான் பூ விக்கறேன். அவளுக்கு குடுங்க சார். இப்பதான் கல்யாணம் ஆயிருக்கு".


அவள்? - அவருக்கு போட்டியாக பூ விற்றுக்கொண்டிருந்த இளம்பெண்.


அந்தப்பெண்ணின் முகத்தில் வலியும், மன்னிப்பு கேட்கும் ஆவலும் ஒருங்கே குவித்து... மெல்ல அந்த வயதானவரின் கரங்களை பற்றிக்கொண்டாள்.


அதன் பிறகு எனக்கு அங்கே வேலையில்லை.

பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...