முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கு. டு ரா. ரைட் ரைட் - 09

கும்மோணத்து சினிமாவும் காமிக்சும், பாப்பின்சும் நானும்!


நான் படித்தது கிருஸ்துவ பள்ளி என்பது உங்களுக்கு நினைவிலிருக்கும். பள்ளியில் கலை விழாக்கள் சிறப்பாக நிகழ்த்துவது போலவே திரைப்படங்களும் காண்பிப்பார்கள். அவ்வப்போது மதிய நேரம் வெள்ளித்திரை கட்டி கூடுமானவரை கிருஸ்துவ அடையாளங்கள் கொண்ட திரைப்படங்களை காட்டுவார்கள்.


அப்படித்தான் ஒரு முறை ஸ்வாதி நட்சத்திரம் காட்டினார்கள். இன்னொருமுறை முத்துராமன், 'ஆனந்தமானது, அற்புதமானது, நானந்த மருந்தை கண்டுகொண்டேன்' என பாடிச்சென்றார். (புனித அந்தோணியார் படம் என்பதை பிற்காலத்தில் அந்த பாடலை வைத்து இணையத்தில் தேடி கண்டுபிடித்தேன்.) பின்னொரு நாளில், 'மான்களும் சொந்தம் தேடையில் இந்த மானிடன் செய்த பாவம் என்னவோ!' என திருடன் சிவாஜி ஞான ஒளி படத்தில் ஏசுவிடம் மன்றாடினார். அவரை எப்படியாவது பிடிக்கவேண்டும் என மேஜர் சுந்தர்ராஜ போலீஸ் முயற்சிப்பார். இடையில் ஒரு நாள் கப்பல் ஒன்று கடல் கொந்தளிப்பில் சிக்கி, வெள்ளைக்கார மாலுமிகள் அன்னை வேளாங்கன்னியால் கரை சேர்ந்தனர். இந்த களேபரங்களுக்கு இடையில் ஒரு அநாதை சிறுவன் அன்பைத்தேடி அலையும் கதை மனசை பிழிந்தது. அந்த படம் பார்த்தபின் உறவுகள் பற்றிய பெருங்கவலை என் சிறு மனதை கவ்விக்கொண்டது. குணா படத்தில் 'வரும் வரும் வரும்' என சத்தமாய் ஓடும் ஒரு மேசைக்காற்றாடி எங்கள் வீட்டிலும் இருந்தது. சனி ஞாயிறு மதியங்களில் கட்டாய தூக்கம் என அப்பா என்னை அதட்டி தூங்கவைக்கையில் அவர் எனக்கருகில் உறங்கிக்கொண்டிருக்க என் எண்ணங்கள் மட்டும் உறங்காமல் அந்த காற்றாடி இசை பயமுறுத்த, அப்பா எத்தனை வருடம் நம்மோடிருப்பார்? அம்மா? அக்கா? அண்ணன்? எல்லோரும் போய்விட்டால் நான் என்ன செய்வேன் என என் சிறு நெஞ்சில் அழுத்தும் பாரம், விழியோரங்களில் கண்ணீராய் வடிந்து இறங்கி தலையணையை நனைக்கும். 'என்னடா தலாணியொல்லாம் நனைஞ்சிருக்கு? வாணி ஒழுவிச்சா (வாய் எச்சில்)?' என அம்மா முறைக்கையிலெல்லாம் நிசம் சொல்ல தோணியதேயில்லை...


பள்ளியில்தான் எனது வாசிப்பு அனுபவம் தொடங்கியது. என்னை முதலில் வாசிக்க ஈர்த்தது வண்ணப்படங்களும் காகித வாசனையும்தான் (எழுத்தின், மொழியின் வசீகரம் பிற்பாடுதான் ஈர்த்தது) நற்கருணை வீரன் என்றொரு படக்கதை மாதா மாதம் புதிதாக தருவார்கள் (Good Samaritan).

அதில் ஏராளமான பைபிள் கதைகள் இருக்கும். குதிரைகளில் தொப்பி அணிந்த நற்கருணை வீரர்கள் நன்மை + கருணை செய்ய விரைவார்கள். போட்டி போட்டு எழுத்துக்கூட்டி வாசிப்போம்.


பள்ளியில் ந.க.வீரன் என்றால் எனது வீட்டில் ஆனந்த விகடன் மட்டுமே வாங்கி வாசிப்பார்கள். நானும் என் பங்குக்கு அந்த வார இதழில் புரிந்தும் புரியாத பலதையும் வாசிப்பேன். ஆனால் மெயின் ஈர்ப்பு என்றால் அது அக்கம் பக்க வீடுகளின் நட்புகள் தரும் அம்புலி மாமா, பால மித்ரா புத்தகங்களே. பெரும்பாலும் அவர்கள் மாத சந்தாதாரர்களாக இருப்பார்கள். அதனால் பழைய புத்தகங்களும் டசன் கணக்கில் வாசிக்க கிடைக்கும். இந்த புத்தகங்களில் எல்லாம் பெரும்பாலும் பிள்ளையார் கதைகளும் சுட்டிக்குரங்கு கபீஷ் மற்றும் அனுமார் கதைகள் நிறைய இருக்கும். புத்தக பின் அட்டையில் தவறாது பாப்பின்ஸ் புளிப்பு மிட்டாய் ரோலுக்கான விளம்பர படக்கதை இடம்பெற்றிருக்கும். பாப்பின்ஸ் மிட்டாய் கும்மோணத்தி்ல் அதிகமாக விற்க நாங்கள்தான் காரணம் :-) 


என்னதான் நல்ல கதைகள் + திரைப்படங்களை அப்போது சிறிய நகரமான கும்மோணத்தில் வாசித்து / கண்டு மகிழ்ந்தாலும் அந்த எலிமென்டரி பள்ளியின் ப்ரொஜக்டர் தரமும், ந.க. வீரனின் அச்சு நேர்த்தியும் பள்ளிக்கு வெளியில் கிடைத்ததில்லை எனபதையும், ந.க. வீரனுக்கும் அம்புலி மாமா+ பால மித்ராவுக்கும் எங்கள் எண்ணங்களுக்குள் நிகழ்ந்த சித்தாந்த மோதல்கள் (ஏசு vs பிள்ளையார் vs இவை இரண்டையும் சாராத எங்களது வாழ்வியல்) எங்களது வருங்கால மதமாச்சர்ய அணுகுமுறையை தீர்மானிக்கப்போவதை அப்போது நாங்கள் சிறுவர்கள் அறிந்திருக்கவில்லை! 


At the end of the Day, what mattered to us the children, was just the joy of stories and the pleasure of reading new stuff though they were age old!  


வெளி நாடுகள் போல சிறார்கள் இரவு உறங்கும் முன்பு அவர்களுக்கு கதைகள் வாசிக்கும் பெற்றோர்கள் எங்களுக்கு வாய்க்கவில்லை. அது பற்றி எங்களுக்கு பெருமிதமே ஒழிய வருத்தமில்லை. ஏனெனில் அந்நிய பெற்றோர்களுக்கு இருந்த பொருளாத சுதந்திரம் என் தலைமுறை பெற்றோர்களுக்கு இல்லவே இல்லை + அந்நிய தேசங்களின் குழந்தைகளைப்போல இல்லாது நாங்கள் உறக்கம் வரும் வரை வீதியிலோ அல்லது நட்பு வீட்டு திண்ணைகளிலோ அச்சமின்றி விளையாட சுதந்திரம் ஏராளமாக இருந்தது. இதனால்தானோ என்னவோ நம் நாட்டின் கதைசொல்லிகளின் கற்பனை வளமும் அவை தரும் அறமும் நேர்மறை சிந்தனைகளும் வேறு எவரும் தொட இயலாத உயரத்தில் இன்று வரை இருக்கின்றன (Just compare பட்டி விக்கிரமாதித்தன், வேதாளக்கதைகள், பறக்கும் கம்பளங்கள், ஏழு கடல் ஏழு மலை தாண்டி அரக்கனது உயிர் ஒளிந்திருக்கும் கிளியை கொன்று அவன் கவர்ந்திருந்த அரசிளங்குமரியை மீட்டு மணமுடிக்கும் இளவரசன், மூக்குத்தி முழு நிலவாவது, பிட்டுக்கு மண் சுமப்பது, ராமாயணம், பாரதம் போன்ற enthralling stories vs 

their Grim Reapers, Grinch, Hansel and Gretel, Humpty Dumpty போன்ற மனதில் பனிக்கால grey-இருள் + திகிலை கிளப்பும் stories...). 


பள்ளி தாண்டி, கும்மோண திரையரங்குகளில் பெரும்பாலும் எங்கள் வீட்டு பெண்கள் சூழ சிவாஜி படங்கள் மட்டுமே பார்த்த நினைவு. தியேட்டரில் டிக்கெட்டு தரும்போதே கைக்குட்டை ஒன்றும் இலவசமாக தருவார்கள் (hey it is a Joke!). எங்களைப்போன்ற பொடிப்பசங்களுக்கு மட்டும் ஏராளமான உறவுகளின் சேலை / தாவணி தலைப்புகள்தான் கண்ணீர் நனைக்க உதவும். ஆனால் சிவாஜி / நாயகி அழுவதை பார்த்தால் கூட அழுகை வராத கல்நெஞ்சக்காரர்களாகிய எங்களுக்கு எங்கள் அம்மாக்கள், அக்காக்கள், சித்திகள் அழுவதை பார்க்கையில் அப்படி ஒரு அழுகை நெஞ்சை அடைக்கும். பெரும்பாலும் வீடு தி்ரும்புகையில் அனைத்து சேலைகளும் கண்ணீரால் நனைந்திருக்கும், அதில் எங்கள் மூக்கு சளியுமிருக்கும்!


கும்மோணத்தில் இரவு உறக்கம் கண்களை கட்டிப்போடும் வரையில் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்போம் என சொல்லியிருக்கிறேனல்லவா. அவை என்ன என எழுதாமல் எப்படி நாம மன்னார்குடி போறது?! So, Mannargudi can wait for one more post :-)


தொடரும்.


பேரன்புடன்,

பாபுஜி



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...