1500 பேருக்கு மேலே கலந்துகொண்ட ஒரு திருமண விழாவில் எனக்கு ஏனோ இந்த படம் மட்டுமே எடுக்கத்தோன்றியது. ஏராளமான விருந்தினர்கள் விதம் விதமான அலங்காரத்தில். தலைக்கு மேலே மெல்ல whirஇட்டு செல்லும் Drone கேமராக்கள், நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டு நிகழ்ந்த நடனங்கள், flash mob dances, மெல்லிசை, வான வேடிக்கைகள் இவை எதுவுமே என்னை ஈர்க்கவில்லை. நாற்பது கடந்த event management பெண்கள், கேரள பெண்கள் போல உடை உடுத்து உடலை வளைத்து கஷ்டப்பட்டு ஆடிய மாப்பிள்ளை வரவேற்பு நடனங்களும், மாப்பிள்ளையை எதிர்கொண்டு 'நகரும் பூப்பந்தல்' கீழே வரவேற்ற மணப்பெண்ணும், வரவேற்பு மேடையில் அத்தனை பேருக்கு முன் மாப்பிள்ளை, பெண் + நட்புகள் ஆடிய நடனமும், அங்கங்கே முறுக்கேறிய தசைகளுடன் இறுகிய முகத்துடன் நின்றிருந்த சீருடை Bouncerகளும் கவனம் ஈர்க்கவில்லை. இந்த மனிதர் மட்டுமே. தன் கடமையை (உணவு சமைப்பது) முடித்துவிட்ட நிம்மதியில் தன்னை சுற்றி நடக்கும் ஆரவாரங்களுக்கு மத்தியில் தனக்கு பிடித்த ஏதோவொரு காட்சியை தன் கைபேசியில் ஒன்றிப்போய் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த மனிதர் எனக்கு ஏகாந்தமான ஒரு உணர்வை தருவது தெரியாமலே தந்துபோனார். ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!