நடிகர் எஸ் ஜே சூர்யாவின் ஒரு பாப்புலர் டயலாக்; 'நல்லதுல என்ன கெட்டது? கெட்டதுல என்ன நல்லது? நல்லதுன்னா நல்லது, கெட்டதுன்னா கெட்டது. அவ்ளோதான்'
இதையேதான் நம் தோட்ட உழைப்பாளர்களிடம் பல வருடங்களாய் புரியவைக்க போராடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் போராடுகிறோம்.
'எறும்பு தொல்ல தாங்கல. கொஞ்சமா மருந்து வாங்கி தெளிச்சா நாங்க வந்து தேங்கா பறிச்சி தாறோம்' என்பதிலிருந்து, விரகடுப்புல வச்ச பாத்திரத்த கரி போக தேக்கணும்னா கொஞ்சூண்டு விம் சோப்பு போதும் என்பது வரை இவர்களது புரிதல்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
ஏன் வேதி சோப்புக்கள் நம் தோட்டங்களில் ஆகாது என நாம் மீண்டும் ஒரு முறை பாடமெடுக்க,
விம் பார் ஆலோசனை சொன்ன ஆசான் (அவர்தான் எங்களுக்கு விறகடுப்பு பயன்படுத்த சொல்லித்தந்த குரு) அதன் பிறகு மணலையும் நாங்கள் தந்த சாம்பல் + சோப்புக்கொட்டை தூள் கலந்த பொடியை பயன்படுத்தி சற்று நேரத்தில் கரியாய் நின்ற பாத்திரங்களை இயல்பு நிறத்திற்கு மாற்றினார்!
அதன் பிறகு அவர் சொன்னதுதான் இந்தப்பதிவின் வேர்;
'வெறகடுப்புல சமச்சா ருசி சூப்பரா இருக்கும். தோசயெல்லாம் ஊத்தினா கல்லு ஜீக்கிரம் ஜூடாவும். வீட்டில வெளிப்பக்கம் அடுப்பு ஒண்ணு செங்கல்லு வச்சி நாங்களே செஞ்சோம். அதிலதான் ஒரம்பொறை (உறவினர்) வந்தா சோறாக்குவம். ரெண்டு மண் சட்டி, ஒரு வடை சட்டி (பொறிக்க, வதக்க, வறுக்க) போதும்ங்க. பாத்திரம் களுவுறது தேய்க்கிறது எல்லாமே ஈசியா. (தேங்கா நாரு வச்சு தேச்சு) அடுப்பு சாம்பலு பாத்திரம் தொலக்க, பல்லு தொலக்க, அப்புறம் பொறகால* நிக்கிற செடிங்க மேல போடுவம்'.
இதுதான் நம் ஒரிஜினல் தற்சார்பு வாழ்வியல். இதில் செலவு அதிகமில்லை, தோல் நோய்களும் (cleaning peoducts) புற்று நோய்களும் (Teflon^ coated cookware) வர வாய்ப்பில்லை.
இதில விம்மு எங்க வந்திச்சி?
இங்குதான் பெருவணிகத்தின் வெற்றி நிற்கிறது!
1990கள் வரை நம் சிற்றூர்களில் வாழ்வு நலமாகத்தான் இருந்தது. அவர்களது மிகப்பெரிய சவால் சாராயக்கடைகள் மட்டுமே. அவையும் ஊர் எல்லைகளில், ஒதுக்குப்புறமாக, இரவில் மட்டுமே இயங்கும் வகையில் இருந்தது. முகத்தை துண்டால் மறைத்துக்கொண்டு கடையில் சரக்கு வாங்கினார்கள் மக்கள்.
இவர்களது அடிமட்ட வருவாய், நகர்ப்புறங்களில் புழக்கத்துக்கு வந்திருந்த அழுக்கு நீக்கும் சோப்புக்கட்டிகளை எட்டாக்கனியாக்கியதால், சாராயம் தவிர குறையொன்றுமில்லை கோபாலா என வாழ்ந்திருந்தனர்.
இந்தியா உலகப்பொருளாதாரத்தில் இணைந்து மெல்ல மெல்ல உலகின் மிகப்பெரிய சந்தைகளுள் ஒன்றாக மாறிக்கொண்டிருந்தபோதும் வாழ்வு பெரிதாக பாதிக்கப்படவில்லை. அந்த ரெண்டு விஷயங்கள் நிகழும் வரை.
முதலாவது: Sachetization எனப்படும் தொழில்நுட்பம்.
இதன் நோக்கம், விலை உயர்ந்த பொருட்களையும் சிறு சிறு ஞெகிழி பொட்டலங்களில் அடைத்து மிக குறைவான விலையில் BOTTOM OF THE GROWTH PYRAMID மனிதர்களிடம் விற்பது. (Bottom of the Pyramid - பிரமிட் வடிவ கோபுரத்தின் உச்சியில் சில பணக்காரர்கள் மட்டுமே நிற்க இடம், உச்சியிலிருந்து கீழே வர வர நிற்கும் பரப்பு விரியும். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்த வளர்ச்சி பிரமிடின் அடித்தளத்தில்தான் இன்றும் காலூன்றி நிற்கமுடிகிறது.) இவர்களது கொஞ்சநஞ்ச சேமிப்பையும் கோவணம் போல உருவுவதே இவ்வணிகத்தின் நோக்கம். மலிவு விலையில் வேதிக்குப்பைகளை இவர்களிடம் தந்து பணம் பிடுங்க எந்த அற வணிகமும் முன்வராது என்பதால்தான் '_ஐ உருவிச்செல்லும் வணிகம்' என நான் வர்ணிக்கிறேன்.
இரண்டாவது: தொலைக்காட்சி பெட்டிகள். 'இலவச' என்பதை சேர்த்து வாசித்துக்கொள்ளுங்கள்!
இலவச வண்ணக்காட்சி பெட்டிகளை மாநிலங்கள் தோறும் அரசுகள் தரத்தொடங்கின. தொலைதூர கல்விப்பாடங்களையும், நாட்டு நலனையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் சீரிய நோக்கில் என சொல்லிக்கொண்டாலும் பெருவணிகமே இதற்கும் உந்து சக்தி.
வண்ணக்காட்சி பெட்டிகளில் வசீகரமான விளம்பரங்களை காட்டி சிற்றூர் மக்களை மெல்ல மெல்ல நுகர்வோர்களாக மாற்றியதில் பெருவணிகம் மீண்டும் வென்றது. வீடு வீடாக விற்பனை பணியாளர்கள் மக்களிடம் சென்று, விம் பாருக்கு செயல்முறை விளக்கம் தந்து, மிக மலிவு விலையில் விற்பதற்கான விளம்பர உத்திகளை கையாண்டு (கரித்தூளில் இருந்து விடுதலை! புளியங்கொட்டை தூளிலிருந்து விடுதலை! எங்க பாருக்கு மாறுங்க! என சிற்றூர் சுவர்களெங்கும் விளம்பரங்கள் வரைந்து...) மக்களை மெல்ல மெல்ல சுயசார்பு பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து உய்வித்து, இன்று மருத்துவமனைகளில் இவர்களை பல வகை நோய்களால் அலையவிட்டு, மருந்து மாத்திரைகள் வாங்கும் செலவாக 'குடிக்கு எஞ்சி' வீடு வரும் பணத்தையும் குறிவைத்து... இதோ கடந்த முப்பதாண்டுகளில் நம் இந்திய சி்ற்றூர்களில் மழை பொய்த்தால் யுனிலீவர், டெனோன் போன்ற உலக வணிகங்களுக்கும் டாடா, கோட்ரெஜ் நுகர்வுப்பொருள் நிறுவனங்களுக்கும் நஷ்டக்காய்ச்சல் வருகிறது!!
இன்று இவர்கள் தங்கள் அடிப்படை, பரம்பரை சொத்தான தற்சார்பு வாழ்வியலையும், உடல் நலத்தையும் இழந்து கடனாளியாகி 'அதி நவீன பல் பசை - இந்தியாவின் வேதங்களில் கூறப்பட்டுள்ள கரித்தூளில் சக்தியுடன்!' என இன்றும் பெருவணிக விளம்பரங்களை வண்ணக்காட்சியிலும், கைக்காட்சியிலும் (மொபைல் பேசியில்) கண்டு வாய் பிளந்து தம் சிற்றூர் கடைகளில் புடவை போல தொங்கும் கரி அடங்கிய ஞெகிழிப்பொட்டலத்தை / குப்பியை வாங்கி தாமும் 'வளர்ச்சி பெற்றுவிட்டதான' மாயத்தெம்பில் சரக்கடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் என் நண்பர் இணைந்தியங்கும் ஒரு குழுவின் கணக்கெடுப்பின்படி நம் சிற்றூர் மக்கள் சராசரியாக வீட்டுக்கு ஒரு மாதத்தில் 8000 ரூபாய் மதிப்புள்ள, ஞெகிழியில் அடைபட்ட பொருட்களை (உணவு, கழுவும் பொருட்கள், வேலைகளை எளிதாக்கும் கருவிகள், அலங்கார பொருட்கள் etc...) வாங்குவதாக கூறினார்.
இவை பற்றியெல்லாம் நினைத்து நினைத்து நம் சிற்றூர்களின் சிறுதெய்வங்கள் எல்லாம் விசும்பி 'விம்'முவது யார் காதிலும் கேட்காதாம்!
சென்ற மாதம் ஒரு வணிக கும்பல், 'சர்வரோக நிவாரணி இந்த தானியங்கி Plate. இதில் தினமும் பத்து முதல் இருபது நிமிடங்கள் நின்றால் போதும், அறிவியல் அதிர்வலைகளினால் தீராத வியாதிகளையும் தீர்க்கும். விலை இருபதே ஆயிரம்தான்!' என பத்து இருபது என்னவோவை விற்றிருக்கிறார்கள்!!!!!!
WhatsApp பல்கலைக்கழகத்தில் நம் சிற்றூர்களின் மக்கள் பலர் முனைவர் பட்டம் லெவலில் நம் நாட்டின் உயர் கல்வி சதவிகிதத்தை உயர்த்தும் தேச சேவையில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளனர் :-)
நான் இவ்வளவு விரிவாக எழுதிய இந்தப்பதிவின் மையக்கருத்தை இயக்குநர் திரு மணிகண்டன், தன் காக்கா முட்டை திரைப்படத்தில் ஒற்றைக்காட்சியில் காண்பித்திருக்கிறார்.
பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய மக்கள் வாழும் பகுதி, மற்றவர்களின் பொருளாதார வளர்ச்சியால் Suburban அந்தஸ்து பெற்று, வசதியுள்ளவர்கள் குடியிருப்புகள் பெருகி, அவர்களை பின்தொடர்ந்து ஒரு Pizza Chain தன் கடையை இந்த 'இல்லாதப்பட்டவர்கள்' குடியிருப்பின் எதிரே திறந்து விளம்பரம் செய்யவும், அங்கு ஒரு ஏழை, ஒற்றைத்தாய் (Single Motherங்கோவ்!) வீட்டின் குழந்தைகளுக்கு Pizza தி்ன்னும் ஆசை வருகிறது. இயலாமையின் உச்சத்தில் அவள் உதிர்க்கும் டயலாக், 'இல்லாதப்பட்டவங்ககிட்ட ஏன் ஆசய தூண்டுறீங்க???'
(அதிலும் உடல் நலனை கெடுக்கும் பொருட்களை வாங்கச்சொல்லி ஆசை காட்டியே வணிகம் வளர்க்கின்றனர்.)
(The proverbial Camel in the Tent - imagined by AI)
சிற்றூர்களின் சிறு தெய்வ விம்மல்கள் ஏனோ என் காதுகளில் மட்டும் இடையறாத இரைச்சலாய்...
பேரன்புடன்,
பாபுஜி
பின்குறிப்பு:
* - கொங்கு மொழி
^ - FOREVER CHEMICALS என Google செய்யுங்கள்!



கருத்துகள்
கருத்துரையிடுக