தஞ்சையில் மேகியை சந்தித்த அதே நாளில் இன்னும் இரு மனிதர்களையும் சந்தித்தேன்.
செல்லம்மாள் என்கிற பாரம்பரிய உணவகத்தில் முன்பதிவு செய்து ஒரு குழுவாக உணவருந்த சென்றிருந்தோம். அருமையான சுவையில் வீட்டு சமையலாக உணவு ருசித்தது. எங்கள் அனைவருக்கும் உணவு பரிமாறிய ஜோதி எனும் பெண்ணுக்கு பின்னிருபதுகளில் வயது இருக்கும். தஞ்சையை சுற்றி உள்ள சிற்றூர் மக்களுள் ஒருவர். பாந்தமாய் தலை வாரி, நறுவிசாக சேலை உடுத்தியிருந்தார். மிகுந்த கவனத்துடன் நேர்த்தியாக அனைவருக்கும் உணவு பரிமாறினார்.
"அவங்க கண்ணை பாத்தியா?" என்றான் என் தோழன்.
கடல் நீலமும் சற்றே பச்சையும் மின்னும் ஐரோப்பிய கண்கள்!
சேலை தவிர்த்து மேற்கத்திய உடை அணிந்து தலை அலங்காரத்தையும் மேற்கத்திய முறையில் மாற்றிக்கட்டினாரென்றால் ஒரு நிசமான ஐரோப்பிய பெண்ணாகவே இருப்பார் இந்த ஜோதி என உணர்ந்தோம்.
'நம்ம ஊரு பொண்ணுக்கு எப்படி இந்த நிறத்தில் கண்கள்?' என மீண்டும் வினவிய நண்பனுக்கு இது பற்றி என் மானசீக ஆசான்களுள் ஓருவரான எழுத்தாளர் திரு. சுஜாதா தனது ஸ்ரீரங்கத்து தேவதைகளில் எழுதியிருந்ததை விவரித்தேன். (கோவில் காண வரும் மேலை நாட்டு ஆண்களுக்கு இங்கு கோவில் அருகில் இருக்கும் பெண் களிடம் தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக ஸ்ரீரங்க கோவில் வீதிகளில் இது போன்ற ஐரோப்பிய கண்களுடன் குழந்தைகள் திரிவது பற்றி எழுதியிருப்பார்) அவனும் சோகமானான். இந்த ஜோதி இங்கே ஒரு தென்னிந்திய உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்யும் இதே தருணத்தில் இவளது தகப்பன்வழி சந்ததியினர் ஏதோ ஒரு மேலை நாட்டில் ஜோதியின் இருப்புகூட அறியாது மேலான வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்பதையும், சுஜாதா எழுதாத 19ம் நூற்றாண்டின் தேவதாசிகளின் வரலாறு எவ்வளவு துயரமானது என்பதையும் எனது நண்பனுக்கு நான் விளக்கியதை ஒரு தனி பதிவாகத்தான் தரவேண்டும். அவ்வளவு இருக்கிறது எழுத!
இரவு பதினொன்று இருக்கும். எனது வாகனத்தை பூட்டுவதற்காக நான் தங்கியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து வெளியே வந்தேன் (குடியிருப்பின் எதிரில் சாலை முனையில் நிறுத்தியிருந்தேன்).
அந்த நான்கு சாலை சந்திப்பின் மையத்தில் ஒருவர் தனது பைக்கை நிறுத்தி அதனருகில் நின்றுகொண்டிருந்தார்.
ஐம்பதை தொடும் வயது இருக்கலாம். நன்கு உடையணிந்திருந்தார். காலில் தரமான ஷூக்கள் அணிந்திருந்தார். பைக்கின் இருக்கையின் மீது ஒரு உணவுப்பொட்டலம். ஒரு கையில் உணவை சிறு பகுதிகளாக பிரித்துக்கொண்டே இன்னொரு கையில் இருந்த அலுமினிய பாக்கெட்டில் இருந்து சாம்பார் அல்லது குருமா போன்ற ஒன்றை ஊற்றி சாப்பிட்டுக்கொண்டிருந்தார், அவரது காலருகே நின்று வாலாட்டிக்கொண்டிருந்த தெரு நாய்க்கு அவ்வப்போது உணவுத்துணுக்குகள் சிலவற்றை பகிர்ந்தவண்ணம்.
அந்த இடத்திலிருந்து ஐம்பது அடி தூரத்தில் இருந்த அத்தனை உணவகங்களும் கன ஜோராக வணிகம் நடத்திக்கொண்டிருக்கையில் இவரது இந்த செய்கை என்னை திகைக்கவைத்தது. அது ஒரு ஞாயிறு இரவு வேறு.
உணவு அருந்திக்கொண்டிருந்த அவரை சங்கடப்படுத்தவேண்டாமென நான் குடியிருப்பின் கதவுக்கு உள்ளேயே காத்திருந்தேன். எனக்கு முதுகை காட்டியவண்ணம் நின்றிருந்தவருக்கு என் இருப்பு தெரியாது.
பத்து பதினைந்து நிமிடங்கள், நின்று நிதானமாக உணவை உண்டு, நாய்க்கும் தொடர்ந்து பகிர்ந்து, காலியான பொட்டலங்களை நேர்த்தியாக ஒரு ஞெகிழிப்பையில் திணித்து பைக்கின் ஒரு பக்க கைப்பிடியில் தொங்கவிட்டு... இன்னும் சற்று நேரம் ஏகாந்தமாக அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தார்.
அவர் நகர்வதற்காக காத்திருந்த நேரத்தில் 'என்ன காரணத்தினால் ஒரு மனிதர் இப்படி நடு சாலையில் நின்றுகொண்டு உணவருந்துகிறார்?' என பலவாறு சிந்தித்தும் எதுவும் லாஜிகலாக சரியாக தோன்றவில்லை. அதுபோல இதுவரை நான் எங்கும் எவரும் செய்து கண்டதில்லை.
வாழ்வின் அழுத்தங்களோ, சமூகப்பார்வைகளை புறந்தள்ளும் மனோதிடமோ அல்லது இருள் தரும் சுதந்திரமோ அல்லது வீடு தராத சுதந்திரமோ (அந்த உணவு அவரது வீட்டில் தடை செய்யப்பட்டிருக்கலாம். ஆனாலும் அவர் ஏன் அதை உணவகத்தில் அமர்ந்து நிதானமாக உண்ணாமல் நடு சாலையில் இப்படி?...) ஏதோ ஒன்று அவரை அவ்வாறு செய்யவைத்திருக்கலாம். அல்லது இது எதுவுமே இல்லாமல், தோன்றியதை செய்யும் இயல்பு உடையவராக இருக்கலாம்...
உணவு உண்டுமுடித்து, அந்த நாயும் உண்டு முடிக்கும்வரை காத்திருந்து அதன் பின் பைக்கை உதைத்து கிளப்பி அவர் இருளில் மறைந்து வெகுநேரமாகியும் அவரது ஸ்டாண்ட் போட்ட பைக் என் மனதில் நின்றுகொண்டிருந்தது.
மெல்ல படியேறி வீட்டுள் நுழைந்தேன்.
'பூட்டிட்டு வர இவ்ளோ நேரமா?' என்றார் மனைவி.
அடடா, கண்ட காட்சியில் ஒன்றிப்போய் சென்ற வேலையை மறந்து வந்திருக்கிறேனே என தலையை சொரிந்துகொண்டு மறுபடி படியிறங்கினேன்!
உலகில் அடுத்த நொடியில் ஒளிந்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம். புதிர்களும்தான்!
எனது முந்தைய, மேகி பற்றிய பதிவையும் இந்தப்பதிவில் கண்ட இருவரையும் என்னோடு பிணைப்பது எது தெரியுமா?
ஒரு பிடி சோறுதான்.
பேரன்புடன்,
பாபுஜி

உண்மை தான். சிறந்த கலாச்சார நாடு என பெருமை பீற்றிக் கொள்ளும் இங்கே தான் ஒரு பிடி சோற்றை சம்பாதிக்க உடலை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் பெரும் சமூகம் உள்ளது. வாணிபத்திலும் ராணுவத்திலும் இச்சை தணிக்க அவர்களே ஏற்பாடு செய்த சமூக கொடுமை களில் இதுவும் ஒன்றாகும்.
பதிலளிநீக்கு