1500 பேருக்கு மேலே கலந்துகொண்ட ஒரு திருமண விழாவில் எனக்கு ஏனோ இந்த படம் மட்டுமே எடுக்கத்தோன்றியது.
ஏராளமான விருந்தினர்கள் விதம் விதமான அலங்காரத்தில். தலைக்கு மேலே மெல்ல whirஇட்டு செல்லும் Drone கேமராக்கள், நன்கு ஒத்திகை பார்க்கப்பட்டு நிகழ்ந்த நடனங்கள், flash mob dances, மெல்லிசை, வான வேடிக்கைகள் இவை எதுவுமே என்னை ஈர்க்கவில்லை.
நாற்பது கடந்த event management பெண்கள், கேரள பெண்கள் போல உடை உடுத்து உடலை வளைத்து கஷ்டப்பட்டு ஆடிய மாப்பிள்ளை வரவேற்பு நடனங்களும், மாப்பிள்ளையை எதிர்கொண்டு 'நகரும் பூப்பந்தல்' கீழே வரவேற்ற மணப்பெண்ணும், வரவேற்பு மேடையில் அத்தனை பேருக்கு முன் மாப்பிள்ளை, பெண் + நட்புகள் ஆடிய நடனமும், அங்கங்கே முறுக்கேறிய தசைகளுடன் இறுகிய முகத்துடன் நின்றிருந்த சீருடை Bouncerகளும் கவனம் ஈர்க்கவில்லை. இந்த மனிதர் மட்டுமே.
தன் கடமையை (உணவு சமைப்பது) முடித்துவிட்ட நிம்மதியில் தன்னை சுற்றி நடக்கும் ஆரவாரங்களுக்கு மத்தியில் தனக்கு பிடித்த ஏதோவொரு காட்சியை தன் கைபேசியில் ஒன்றிப்போய் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த மனிதர் எனக்கு ஏகாந்தமான ஒரு உணர்வை தருவது தெரியாமலே தந்துபோனார். சுற்றி நிகழும் ஆரவாரங்கள் துளி கூட இவரது சிந்தனையை கலைக்கவில்லை!
ஆயிரம் வாசல் இதயம். ஆனால் உணவு அறைக்கு ஒற்றை வாசல். நுழைவாயிலில் அரை கதவை மூடி, திறந்திருந்த அரை கதவிற்கு ஒரு Bouncer காவல். மேடையில் முழு கவனத்துடன் இருந்த இருமண வீட்டாருக்கு இங்கு நிகழ்ந்த 1500+ தள்ளுமுள்ளுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் டெல்டா நிலத்தில் நிகழும் திருமணங்களில் இந்த 'கூட்டத்தை கட்டுப்படுத்தும்' மனிதர்களை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. அங்கு இன்னும் 'Package Marriages' பெரிதாய் நுழையவில்லை. ஒவ்வொரு திருமணத்திலும் உறவினர் சிலராவது உணவு அறை சேவையில் இருந்துகொண்டு, வரும் அனைவரையும் உறவு சொல்லி அழைத்து அவ்வளவு இயல்பாய் regulate செய்வதை பலமுறை அருகில் இருந்து பார்த்த அனுபவம் உண்டு. வரும் கூட்டமும் தானே self regulate செய்துகொள்வதும் இயல்பாய் நடக்கும்.
மணமகன் தந்தையும் தமையனும் 1980களில் வரும் தமிழ் சினிமா ஜமீந்தார் போலதொரு உடை உடுத்து பம்பரமாய் சுற்றி வியர்த்துக்கொண்டிருந்தனர். மணமகள் தந்தை இன்னொரு ஜமீந்தார் போன்ற உடையில்.
இவை இவர்களின் இயல்பே இல்லையே. நம்ம ஊர் கல்யாணம் போல இல்லயே. வடக்கு, மேற்கு எல்லாமும் கலந்து கட்டிய நிகழ்வாக இருக்கிறதே , ஒருவரையும் வேட்டி சட்டையில் காண முடியவில்லையே என்று நண்பரிடம் வினவினேன்.
'இது ரிஷப்ஸன் ஈவன்ட். அதான் இப்படி. இவங்க பரவாயில்லை பாபு, சென்னையில் பல கல்யாணங்கள்ல இதவிட ஜோரா அலப்பறை நடக்கும்' என்றார்.
நான் கடந்த இருபத்தைந்து வருடங்களில் சென்னையில் கண்ட முதல் திருமண நிகழ்வு இது என்கிற Culture Shock இன்னும் என்னை விட்டு அகலாத பிரமிப்பில் பார்த்துக்கொண்டிருந்தேன்.
மறு நாள் காலை முகூர்த்தத்தில் அனைவரும் தமிழ் பாரம்பரிய உடையணிந்து சிவனடியார் (தாடி, சடைமுடி கேசம்) தோற்றத்திலிருந்த ஐயர் மந்திரங்கள் ஓத, சுபமாய் திருமணம் நிகழ்ந்தேறியது. 'அடுத்த பத்து நிமிஷத்துக்கு யாரையும் பொண்ணு மாப்ளகிட்ட கிஃப்ட. குடுக்க விடமாட்டேன். சடங்குல்லாம் தாமதமாயிடும்' என ஸ்ட்ரிக்டான வாத்தியார் குரலில் அவர் அரைமணி நேரமாக சொல்லிக்கொண்டிருந்தார்!
மிக சாதாரண பின்புலத்திலிருந்து தொழில் தொடங்கி கடின உழைப்பால் முன்னேறிய மனிதரின் மகளுக்கு திருமணம், இவ்வாறு இனிதே சுற்றமும் நட்பும் சூழ நடந்தேறியது.
ஆனாலும் நெருங்கிய சுற்றமும் நட்புகளும் மட்டுமே கலந்துகொண்டு வாழ்த்தும் Intimate Ceremonyயில் உள்ள நிறைவு இதில் கிடைக்குமா என தெரியவில்லை.
இதுபோன்ற திருமண நடைமுறைகளின் நகைமுரண் என்ன தெரியுமா?
பத்து இருபது ஆண்டுகள் முன்பு இரண்டாயிரம் பேரை வரவேற்று நிகழ்ந்த திருமணங்களின் குழந்தைகள் இன்று தங்கள் திருமணங்களை நமது பழைய Intimate Ceremony போல மிகச்சிலரை மட்டுமே அழைத்து நிகழ்த்துகின்றனர், ஆனால் வேற்று நிலங்களில், Destination Wedding என்கிற பெயரில்.
திருமணம் என்பது ஆயிரம் காலப்பயிரென்றால் அது தழைக்க அதனுடைய நிலம்தானே வேண்டும்?!
பேரன்புடன்,
பாபுஜி

கருத்துகள்
கருத்துரையிடுக