முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

களவாடிய பொழுதுகள்

தமிழ்நாடு விவசாய கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறுகையில் காற்றில் மிதந்து காதை வருடியது இளையராஜாவின் இசையில் அற்புதமான பாடலொன்று.

ஒரு போட்டிக்கான ஒத்திகை என்பதை இசை தப்பி அதிர்ந்த கருவிகளும், முதல் ஹம்மிங்கை நிறுத்தி நிறுத்தி திரும்பப்பாடிய பாடகியின் தேன் குரலும்.

நாங்கள் செய்யப்போன திகிலான வேலையொன்று எங்களை நின்று ரசிக்க விடாமல் வெளியே தள்ளிச்சென்றது.


யாரந்த நாங்கள்? 


என்னதான் அந்த திகிலான வேலை?


கோவை. 1990களில் ஒரு பழம்பெருமை வாய்ந்த பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர்கள் நாங்கள்.

வகுப்புகள் தொடங்கிய சில நாட்களில் இருந்தே எங்கள் கல்லூரி விடுதி அறைகளில் எங்களுக்கு சொந்தமான பொருட்கள் காணாமல் போனவண்ணம் இருந்தன. எனது பாக்கெட் ரேடியோ, அறை நண்பனின் கைக்கடிகாரம், இன்னொரு அறைத்தோழனின் இஸ்திரிப்பெட்டி என வகை வகையான பொருட்கள்.

விடுதி காவலரிடமும், விடுதி கண்காணிப்பாளரிடமும் முறையிட்டும் களவு தொடர்ந்தது.

இரவின் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு நண்பர்கள் கண் விழித்து பல நாட்கள் கண்காணித்து கண்டுபிடித்தது ஒரு திடுக்கிடும் உண்மை; விடுதி மாணவர்களில் இருவர்தான் 'நாயகர்கள்'. அவர்களுக்கு இறுதியாண்டு மாணவரொருவர்தான் 'குரு'.


கையும் களவுமாய் எங்களது சக மாணவர்களிடம் ஒரு நாள்  அவர்கள் பிடிபட, சரமாரியாய் உதை விழுந்தது.

களவு செய்தவர்களை கண்டுபிடித்துவிட்ட மகிழ்வில், பொருட்களை தொலைத்த கோபத்தில் இது நிகழ, எதிர்பாராத புதிய சிக்கல் ஒன்று முளைத்தது.


'நாயகர்கள்' இருவரில் ஒருவருக்கு அடி கொஞ்சம் அதிகம். அவரது அப்பா பக்கத்து ஊர் ஒன்றில் முக்கியமான அரசியல்  பிரமுகர்!

மகனை மருத்துவமனையில் சேர்த்த கையோடு நேராக எங்கள் விடுதிக்கு வந்தவர், எங்கள் விடுதியின் ஒவ்வொரு தளத்திலும் கோப நடையுடன் கண்கள் சிவக்க ஆவேசமாய் கத்திச்சென்றார்; 'அடிச்சவன் எவனாயிருந்தாலும் கேட்டுக்கோங்கடா. என் பையன் ஆசுபத்திரில கிடக்கான். நான் உங்கள சும்மா விடமாட்டேன்!'.


அன்று மாலை எங்களது நம்பத்தகுந்த வட்டத்தில் இருந்து வந்த ஒரு செய்தி எங்களை நிறைய அச்சப்படவைத்தது; 'இன்னைக்கு ராத்திரி அவனோட அப்பா நெறைய ரவுடிங்கள கூட்டிகிட்டு வர்றார், ஓவர்!'

விடுதி மாணவர்கள் அனைவரும் கூடிப்பேசி முடிவுகள் சில எடுத்தோம்:

1. இரவு யாரும் தூங்கக்கூடாது.

2. கையில் கிடைத்த ஆயுதங்களை (கிரிக்கெட் மட்டை, ஹாக்கி மட்டை, இன்ஜினீரிங் ட்ராயிங்குக்கான D Square இத்யாதி) எடுத்துக்கொண்டு, விடுதிக்கு வெளியே நடைபாதையில் + மரங்களில் படை திரளுவோம். இரண்டில் ஒன்று பார்ப்போம்!


இரவு மெஸ்ஸில் எல்லோரும் ஒரு பிடி கூடுதலாக உண்டு (அடிக்க / அடி வாங்க தெம்பு தரும்!!) தயாரானோம்.

முன்னிரவு கரைந்து பின்னிரவு தொடங்கும் வேளை...

தூக்கம் தொங்கிய கண்களை போராடி திறந்து வைத்திருந்த நாங்கள், கல்லூரி நுழைவாயிலில் (விடுதிக்கும் அதுவே!) திடீரென எழுந்த வாகன ஓசை சலசலப்பால் பரபரப்பாய் கலவரமாய் இன்னும் பலதாய் ஆக, ஆசுபத்திரி மாணவனின் அப்பா உறுமிக்கொண்டே உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர பின்னே சொற்பமாய் சில நிழல்கள்.

விடுதி மாணவர் படையில் எல்லோரும் புதிதாய் 'தலைவரை' தேட, அப்போது நாங்கள் யாரும் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்தது.

எங்கள் விடுதிகளின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஆசிரியர் ஒருவர், சலசலப்பு ஓசைகளை கேட்டு உறக்கத்திலிருந்து எழுந்து, விடுதி காவலருடன் எங்கிருந்தோ வந்து, ஆவேச அப்பாவை எதிர்கொண்டு நிறுத்தினார்.

மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு அவர்களது உரையாடலின் தொடக்கம் பிடிபடவில்லை. உரையாடல் சில நிமிடங்கள் நீள, சஸ்பென்ஸ் எகிரத்தொடங்கியது.

அப்போதுதான் இரவின் அமைதியையும் எங்கள் பயங்களையும் கிழித்துக்கொண்டு ஒரு குரல் கிளம்பியது.


"நீ ரௌடின்னா? நானும் பெரிய ரௌடிதான், காலேஜ்ல படிக்கையில்! என்ன பண்ணிடுவ பாத்திடலாம்! வா!!"


அது அந்த ஆசிரியரின் குரல். அந்த இரவில் அதில் ஒலித்த துணிவும் உண்மையும் எங்களை ஏதோ செய்தது. 

குரல் கொடுத்தவர் எந்த 'நடவடிக்கைக்கும்' தயாரான உடல் மொழியில் நிற்க,

கலாட்டா செய்ய ஆட்களை கூட்டி வந்தவரையும் அது கலவரப்படுத்தியது. 

சில நிமிடங்கள் நம்பமுடியாமல் முறைத்துப்பார்த்துவிட்டு, 'என் மகனுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சின்னா கண்டிப்பா வருவேன், நீ தடுத்தாலும்!' என தணிந்த குரலில் சீறிவிட்டு மெள்ள திரும்பி நடந்தார்.

எங்களுக்கெல்லாம் மகா ஆச்சரியம். நிஜ வாழ்வில் ஒரு "ஹீரோவை" கண்ட புல்லரிப்பில் இறங்கி ஓடினோம்.

ஹீரோ எங்களை எல்லாம் அமைதியாக பார்த்து, 'போய் தூங்குங்கப்பா' என்று மட்டும் சொல்லிவிட்டு... போய்விட்டார்.

நல்ல உறக்கம் அன்றிரவு.


இரு தினங்களில் அடிபட்ட மாணவன் நலமாய் மருத்துவமனையில் இருந்து திரும்பியதும், 'அபாயம் நீங்கியது' என நிம்மதிப்பெருமூச்சோடு நாங்கள் துப்பறிந்து கண்டுபிடித்த நிசங்கள் எங்களை மலைக்கவைத்தது:


நாயகர்கள் இருவரும் களவாடிய பொருட்களால் கணிசமாய் பணம் சேர்த்து, விவசாய கல்லூரி காவல்காரர் ஒருவரை நட்பாக்கிக்கொண்டு அங்கிருந்த விருந்தினர் அறையொன்றில் நாளொரு 'மேனியும்' பொழுதொரு குப்பியுமாக "இனிமை நிறைந்த உலகமிருக்கு, இதிலே நமக்கு கவலை எதுக்கு லவ்லி பேர்ட்ஸ், புது இளமை இருக்கு வயதும் இருக்கு காலம் இருக்கு கண்ணீர் எதற்கு ஜாலி பேர்ட்ஸ்' என கொண்டாடி மகிழ்ந்தது தெரியவந்தது. அவர்களது குருவோ பலப்பல பள்ளி மாணவிகளின் கனவு நாயகனாய் இருந்ததும் அவர்கள் எழுதின நூற்றுக்கணக்காண காதல்  கடிதங்களும் எங்களது விசாரணைக்குழுவின் கைகளில் சிக்கின. ஆதலால் வடிவேலு சொல்லி பாப்புலராக்குவதற்கு முன்னரே 'நாங்கள்லாம் அப்படியே ஷாக்காயிட்டோம்!'

அதன் பின் ஒரு நல்ல நாளில் விவசாய கல்லூரி வளாகத்தில் 'அந்த' அறை எங்கே என பார்த்துவரும் ஆவலில் நாங்கள் கும்பலாய் கிளம்பி, ஒரு முன்னிரவு வேளையில் அனுமதி பெறாமலே வளாகத்தினுள் நுழைந்து, அறை கண்ட திருப்தியில் சடுதியில் விலகி வெளியேறும்போதுதான் மனதை மயக்கும் ராஜாவின் இசையில் எங்கள் ஆன்மாவை ஊடுருவிய பெண் குரல் ஹம்மிங் மேஜிக் நிகழ்ந்தது.


'டேய், என்ன பாட்டுடா அது?'


" அந்த பாட்டா?"


'இல்லடா, இது வேற'

...

"ஹேய்! இந்த பாட்டா?"


'இல்லப்பா, அது வேற' என குழம்பி திரும்பினோம்.


சில பத்தாண்டுகள் கழிந்தும் அந்த குழப்பம் இன்னும் தீரவில்லை. இடையில் வெறித்தனமாய் ஆயாரமாயிரம் ராஜாவின் பாடல்கள் கேட்டும் அந்தப்பாடல் ஏனோ இன்னும் சிக்கவில்லை. 

இனி கேட்க ராஜாவின் பழைய பாடல்கள் எதுவுமே இல்லை என நினைத்தபோதுதான் Youtube இன்னும் அவரது பல பாடல்களை அவ்வப்போது அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறது. அப்படி இன்று முதல் முறையாய் கேட்ட 'ஈர விழிக்காவியங்கள்' படத்திலும் அந்தப்பாடல் இல்லை... ஆனாலும் இந்தப்படத்தில் ராஜா பாடிய பாடல், இன்றுதான் பிறந்தது போல புத்தம்புது இசையுடன் ஜிவ்வென தூக்கிச்சென்ற உயரம், மிக உயரம்: 'என் கானம் இன்று அரங்கேறும், என் பாடல் வானம் வரை போகும்'' என்கிற அந்தபாடலை நீயும் கேள் நட்பே. உன்னையும் அது உயரமான உயரம் தூக்கிச்செல்லும்! (ராஜாவுடன் பாடியிருப்பவர் ஜென்சி!!). பாடலின் தொடக்க இருபது விநாடிகள், that Guitar piece, Out Of The World! Followed by Raja in his huskiest voice...

மனம் என்னவோ நிறைந்திருந்தாலும், இப்போதுதான் புதிதாய் கற்கத்தொடங்கிய குழந்தைகளுக்கு ஒரு புதிய பறவையின் பெயர் தெரியாவிட்டாலும் 'இது காக்கா இல்ல!' என தனக்கு தெரிந்த பறவையின் பெயராலே நிராகரிப்பது போல, 'அது அல்ல இது' என என் தேடல் தொடர்கிறது. 


இப்போது ஒரே ஒரு சிறு கவலை எனக்கு: என்றோ அரங்கேறிய அந்த ட்யூன் இந்த சில பத்தாண்டுகளில் மெல்ல மெல்ல நினைவடுக்குகளில் இருந்து கரைந்துவருகிறது. முற்றிலும் கரைவதற்குள் கேட்கவேண்டுமே என்பதுதான் அது.


கேட்பேன் நிச்சயமாய். நம்பிக்கைதானே வாழ்க்கை!


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...