தேவைகளே கண்டுபிடிப்புகளின் அடிப்படை என்பதற்கேற்ப நாங்கள் ஆடுகளையும் நாய்களையும் காப்பாற்ற தோட்டத்திற்கு அருகிலுள்ள வீட்டு மனிதர்களை 'கண்டுபிடித்து (மரங்கள் சூழ்ந்த தோட்டங்களுக்குள் மறைந்திருக்கும் கேரள கிராம வீடுகள்!) உதவி கேட்டோம்.
ஒரு சேச்சி நாய்களுக்கு உணவு தர சம்மதித்தார்.
ஒரு சேட்டன் ஆடுகளுக்கு இலை தழை ஒடித்து உணவாய் தர சம்மதித்தார்.
இன்னொரு சேட்டன் சில நாட்களில் நாய்களை தாமே வளர்க்க முன்வந்து அழைத்துச்சென்றார்.
இன்னொரு சேட்டன் ஆடுகள் அனைத்தையும் விலை கொடுத்து வாங்கிக்கொள்ள முன்வந்தார்.
இப்படி அடுத்த சில வாரங்களில் ஒவ்வொரு சிக்கலாக தீர்வு கண்டபோதும், தோட்டத்தை பார்த்துக்கொள்ள மனிதர்கள் கிடைக்கவில்லை. ராம்கியும் அவனது அம்மாவும் எங்களது தொடர்பு எல்லைக்கு வெளியே வெகு வெளியே சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
பல நாட்கள் தேடலின் பின்பு ஒரு நல்ல குடும்பம் தோட்டப்பணிக்கு வர, நாங்கள் நிம்மதி பெருமூச்சுடன் வீடை சுத்தம் செய்து கொடுத்தோம்:
ராம்கி வாங்கிய புதிய டி.வி யை பாதி விலைக்கு விற்று கடையின் தவணையை முடித்தோம்.
அவன் தவணை முறையில் வாங்கின மரக்கட்டிலுக்கு மீதமிருந்த தொகையை கடையில் செலுத்தி அந்த கணக்கையும் முடித்தோம். பின்னர் காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை என வரிசையாக அவனது மாதக்கணக்குகளை தீர்த்தோம்.
பின்னர் அவனது உடைமைகளை முட்டைகளாய் கட்டி (உடைகள், அடுக்களை பாத்திரங்கள், இத்யாதி) அவனது உறவினரிடம் ஒப்படைத்தோம் அதை பெற்றுக்கொள்ள ராம்கி வந்திருந்தான்!
புதிய ஆடைகள், காலில் புதிய ஷூ, கண்களில் நிலையற்ற அலையும் பார்வை என ஆளே மாறிப்போயிருந்தான். ஒரு துளி குற்றவுணர்வு கூட அவனிடம் இல்லை.
அதன் பிறகு அவனை நாங்கள் சந்திக்கவில்லை.
கதை முடிந்தது.
பின் குறிப்பு:
'அவன் பொட்டலம் போடறான் சார்! அதனால இனிமே இந்த பக்கமே தலை வைச்சு படுக்கக்கூடாதுன்னு சொல்லிட்டோம்' என்று சன்னமான குரலில் வருந்தினார் அவனது உறவினர். (பொட்டலம் போடுதல் = கஞ்சா அடித்தல்).
செலவுக்கணக்கை 'புத்தி கொள்முதல் கணக்கு' என வகைப்படுத்திவிட்டு (learning expenses) நாங்களும் அடுத்த வேலைகளுக்கு நகர்ந்தோம். ஆனாலும் தகப்பனின் கவனம் இல்லாது, தகப்பனின் துணை இல்லாது வளர்ந்த ராம்கியின் வாழ்வு, கல்வி பற்றிய புரிதல் இல்லாது போனது, அவனது பதின் பருவ மனச்சிக்கல்கள், அவனுக்கு சமுதாயமும் ஊடகங்களும் கற்பித்திருக்கிற தவறான பிம்பங்கள் (காதல், மது, போதை etc...), அதை தயக்கங்கள் இன்றி பகிர்ந்து அறிவுரை பெரும் அளவுக்கு சுற்றங்கள் இல்லாதது, கூடா நட்பு, அவனது எதிர்காலம் என பல வருத்தங்கள் மட்டும் எங்களுள் அனுபவப்பாடங்களாக தங்கிப்போயின.

கருத்துகள்
கருத்துரையிடுக