நிஜத்தின் மிக அருகில் இரண்டு 'பிரிவு'கள். நிஜமான பிரிவின் மிக அருகில், நான்!
ஒரு பதின்பருவ காதலை வாழ்வு கலைத்துப்போட, இருபதாண்டு கழித்து இருவரும் பள்ளித்தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த 'ஒன்றுகூடல்' நிகழ்வில் மறுபடி சந்தித்து, எவ்விதம் வாழ்வு கலைந்து போனது என்பதை பேசி உணர்த்தி, உணர்ந்து...
பிரியப்போகிறோம் என்கிற பரிதவிப்பில் கடந்த காலம் முழுவதும் தொடாமலே பிரிந்த இருவரின் கரங்களும் ஒரு கார் கியர் குமிழில் இணைகின்றன. இணைந்த கரங்கள் இணைந்தபடி கியர் மாற்றி எதிர்காலத்திற்கு காரை நகர்த்தி முன்னேறுகின்றன. இது எவ்வகையான காதல் என்கிற தர்கங்களுக்குள் அடங்காத இவர்களின் காதல் இந்த வாழ்வின் எஞ்சிய துளிகளை இணைந்தே கடப்போம் என உறுதிகொண்டு மறுபடியும் பிரிந்துபோகிறது அவரவர் வாழ்வை தொடர.
அந்த கியர் நிகழ்வு வரை அவளை கண்கொண்டு நோக்கவே தயங்குபவன், அதன் பின் அவள் பிரியப்போகிற நிமிடங்களில் வைத்த கண் இமைக்காமல் அவளையே பார்க்க, பார்வையின் வலியை தாங்க இயலாது அவனது கண்களை கரங்களால் மூடி, அவள் அழுதுகொண்டே விடைபெறுகிறாள்.
இவர்களுக்கு நாற்பதாண்டுகள் முன்பு இன்னொரு ஜோடி, இதோ இந்த நொடியில் பிரியப்போகிறார்கள்...
கலை இணைத்த இவர்களது காதல், அவளது பிரிந்துபோன கணவன் மீண்டும் வரும் புள்ளியில் கருகிப்போகிறது. தனது தந்தையின்
வற்புறுத்தலால், தான் விரும்பாத திருமண பந்தத்தில் சில காலம் இருந்து விலகிப்போன கணவன், அவளது காதலை அறிந்து, அதை மதித்து, காதலனுடனே சேர்த்து வைக்க வருகிறான். இருவருடனும் பேசுகிறான். இவர்கள் இணையரானால் அவன் மிக மகிழ்வுடன் குற்ற உணர்வின்றி நிரந்தரமாய் வணிக நிமித்தமாக வெளிநாட்டிற்கு இடம் பெயர விரும்புவதையும் தெரிவிக்கிறான். ஆனால் கணவனது நேர்மையையும் நல்ல குணத்தையும் அறிந்து மதிக்கும் காதலன், அவளிடம் பேசி கணவனுடனே அவளை இணைத்துவைக்கிறான்.
இரயில் நிலையத்தில் அவள் தன் கணவனுடன் அவனிடமிருந்து விடைபெறுகையில் அவன், அவர்கள் நினைவாக ஒரே ஒரு புகைப்படம் (அவர்கள் இருவரையும் மட்டும்) எடுத்துக்கொள்ள அனுமதி கேட்க, புகைப்படத்திற்கு கணவனுடன் நின்று, பின் ரயிலில் ஏறிக்கொள்ள, ரயில் சத்தமெழுப்பி மெல்ல மெல்ல நகர, அடுத்த சில நொடிகளில் இவள் முதல் முதலாக அவனை விட்டு பிரியப்போவது உறுதி என்கிற உணர்வு தாக்க, இருவரும் எல்லா முடியாத உணர்வுகளை எல்லாம் ஒரு கர அசைப்பினாலும் கண்களாலும் மட்டுமே அந்த சில நொடிகளில் பரிமாறிக்கொள்ள, அந்த ரயில் மெல்ல நகர்ந்து வேகமெடுத்து மறைகிறது.
(பின்னொரு காலத்தில் அவளது மகள் மூலம் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. அவனது நடனக்கலைக்கு அவள் வாங்கிக்கொடுக்க நினைத்த அங்கீகாரத்தை தனது கற்பித்தல் வழி அவளது மகளுக்கே கிடைக்கச்செய்து, அதன் வழியே தனக்கும் அங்கீகாரம் கிடைத்த நிறைவில் அவன் மரிக்கிறான்.)
இந்த இரு காதலும், காதலர்களும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கண்டவர் மனதில் அகலாது பதிந்திருப்பார்கள்.
இந்த திரைக்காதல்கள் போல இல்லாமல், நிஜத்தில் பிரிந்த காதல் ஒன்றின் மறு சந்திப்பையும் அருகில் இருந்து காணும் வாய்ப்பை காலம் எனக்கு தந்தது.
நேசித்த உறவுக்கார பெண்ணை அவனது அம்மா நிராகரிக்க, பிறிதொரு நாளில் சுற்றம் காட்டிய பெண்ணை மணந்து, காலங்கள் நகர, இதோ இவனது மகளின் திருமண நிகழ்வில் தான் இழந்த காதலியையும் அழைத்திருக்கிறான். அவள் திருமணமான சில வருடங்களிலேயே கணவனை இழந்தவள்...
முன் வரிசையில் அமர்ந்து நிகழ்வு முழுவதையும் கண்டு வாழ்த்திய அந்தப்பெண்ணின் முகத்தில் கனிந்த சிரிப்பு. ஆனால் கண்களில் நான் கண்ட கடலளவு சோகம், அவளது இழந்த காதலின் வலியலைகளால் ததும்பி கண்களில் மெல்லிய நீர்ப்படலம், வேறொரு கதையை சொல்லாமல் சொல்லியது.
காதலித்த அனைவருமே திருமணத்தில் இணைவதில்லை. அப்படி இணைந்தவர்கள் எல்லோருமே நிம்மதியாக வாழ்கிறார்களா என்பதும் கேள்விக்குறியே. ஆனால் இணையும் வாய்ப்பையே இழந்தவர்களுக்கு, அவர்கள் வாழ்ந்த நினைவுகள் மட்டுமே ஊன்றுகோல் போல.
பேரன்புடன்,
பாபுஜி


கருத்துகள்
கருத்துரையிடுக